உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/8. அஞ்சல் ஊழியர் பற்றி அண்ணா
8. அஞ்சல் ஊழியர் பற்றி அண்ணா
எந்தக் கட்சியின் சார்பில் ஒருவர் உறுப்பினர் ஆகின்றார் என்பது முக்கியமான பிரச்சினை அல்ல; அவர், 'எந்த பிரச்சனைக்காக உறுப்பினராக ஆகியிருக்கிறார்' என்பதுதான் பிரச்சனை!
தபால் தந்தி இலாக்காவைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கென ஒரு பிரதிநிதியை-கீழ்ச் சபைக்கு இல்லா விட்டாலும், மேல் சபைக்காவது-கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும்; இப்படிப்பட்டவர்கள் அப்படிப்பட்ட இடங்களில் இருக்க வேண்டும்.
இப்போது கலைஞர்களுக்கும்--ஆசிரியர்களுக்கும் பட்டதாரிகளுக்கும்--இன்னும் பிறருக்கும் அரசியல் மன்றங்களில் இடம் கொடுத்திருக்கும்போது, இதுபோன்ற அலுவலகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்காக ஒரு பிரதிநிதித்துவம் அரசாங்கம் ஏன் கொடுக்கக்கூடாது? கொடுத்தால் என்ன கெட்டுவிடும்?
இந்த அலுவலகங்களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் அரசியல் மன்றங்களுக்கு வந்தால், பிரச்சினையை அவர்கள் தெளிவாக விளக்க முடியும்.
அலுவலகங்களில் வேலை செய்கின்றவர்களுக்கு அரசியல் மன்றங்களில் ஒரு பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்; குறிப்பாக--இரயில்வே தொழிலாளர்களுக்காகவும், வங்கித் தொழிலாளர்களுக்காகவும், தபால்--தந்தித் தொழிலாளர்களுக்காகவும் அரசியல் மன்றங்களில் இடம் அளிப்பது அவசியம்; ஏனென்றால் அவர்கள் அங்கே வந்து பேசினால், பிரச்சினையில் உயிரோட்டம் இருக்கும்; வெறும் அரசியல்வாதிகள் பேசினால் பிரச்சினையில் உயிரோட்டம் இருக்காது;
எனவே, இதை எப்படி நீங்கள் நிறைவேற்றிக்கொள்வது என்பதையும்-நான் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்; நீங்கள் கேட்டால், அரசாங்கம் உங்களிடத்தில் சற்று பய பக்தியோடு நடந்துகொள்ளும்; அமைச்சர்களும் தொழிலாளர்களாகிய உங்கள் பிரச்சினைக்காக இணங்கி வருதல் கூடும்; ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற உறுப்பினர்கள், சட்டசபையில் எல்லாப் பிரச்சினைகளைப் பற்றியும் பேசுதல் என்பது இயலாது; எனவே எல்லாத் துறைகள் பற்றியும் நாங்கள் பேச முடியுமென்று நீங்கள் நம்புகிறீர்களா? அது முடிகிற காரியமா?
ஆகவே, யாராவது ஒருவர் அஞ்சல் இலாகாவில் இருந்து சட்டமன்றத்திற்கு-மக்கள் சபைக்கு வந்தால், குறிப்பிட்ட நேரத்தில் பிரச்சினையைத் தெளிவாக விளக்க முடியும்; எனவே இப்படிப்பட்ட இடங்களில் நீங்கள் இருக்க வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்.
(15-3-60-ல் அஞ்சல் ஊழியர் கூட்டத்தில் அண்ணா)