உள்ளடக்கத்துக்குச் செல்

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/9. எல். அய். சி ஊழியர் நிலை குறித்து அண்ணா

விக்கிமூலம் இலிருந்து

9. எல். அய். சி. ஊழியர் நிலை
குறித்து அண்ணா

மின் விசைக் கணக்குப் பொறிகளை புகுத்துவதால் ஏற்படும் பயங்கரமான விளைவுகள் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன--எதிர்க்கின்றோம்.

இது தொழிலாளருக்கு உதவி செய்யும் பொறி அல்ல. உபத்திரவம் தருகிற ஒன்று.

இன்றைய நிலையில், ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்து-அவர்கள் வாழ்வில் மலர்ச்சியை உருவாக்கும் கருவி அல்ல இது ! அவர்களின் கண்களில் மருட்சியை உருவாக்கும் ஒன்று!

நாள் முழுவதும் ஓர் ஊழியர் வேலை செய்து முடித்து, வேலைப் பளுவால் சோர்ந்து கிடக்கும்போது - தனக்கென்று ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கும்போது 'ஊழியர்க்கு உதவி செய்யும் கருவி இது' என்றால் நம்மால் புரிந்து கொள்ள முடியும்!

'இறகுப் பேனாவுக்குப் பதில் ஊற்றுப் பேனா' என்றால், பனை விசிறிக்கு பதில் மின்சார விசிறி' என்றால், "கட்டை வண்டிக்குப் பதில் தொடர் வண்டி' என்றால்--இவையெல்லாம் வேலைப் பளுவைக் குறைக்கின்ற சாதனங்கள்!

'வேலையில்லாத் திண்டாட்டம்' என்று ஒரு பக்கம் நாடாளுமன்றம் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றது! ஆனால் இங்கேயோ--ஆயிரக்கணக்கில் வேலையில் உள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் மும்முரமாகச் செயல்படுத்தப்படுகிறது ! எனவே, ஆட்சியாளரின் நோக்கத்தில் நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது !

"சென்ற தலைமுறையில் தொழிலாளர் வர்க்கம் அடக்க ஒடுக்கமாக இருந்தது; சொன்ன வேலையைத் தொழிலாளர்கள் செய்தார்கள ! கொடுத்த கூலியை வாங்கிக் கொண்டார்கள்; இன்றையத் தொழிலாளர்களோ, அடக்கமற்றவர்களாக-கிளர்ச்சிக்காரர்களாக--நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள்" இப்படி இந்திய அரசு நினைக்கிறது!

அதிலும் குறிப்பாக எல். அய். சி. போன்ற அமைப்புகளில் பணி புரியும் வெள்ளுடை ஊழியர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை! வெள்ளுடை ஊழியர் அணியைச் சிதைக்க இந்திய அரசு மேற்கொண்ட சதிச்செயல்கள் பலன் தரவில்லை!

பார்த்தார்கள் ஆட்சியாளர்கள்--"இவர்களை நம்பிக் கிடப்பதால்தானே இந்தத் தொல்லை? மின் விசைக் கணக்குப் பொறிகளை இறக்குமதி செய் -அவற்றை தொழிலகங்களில் பயன்படுத்து-அவை கிளர்ச்சி செய்யமாட்டா-ஆணைக்கு அடங்கி அமைதியாக வேலை செய்யும்" என்று முடிவு செய்துவிட்டார்கள். அதன் மூலம், "தொழிலாளர் பிரச்சனையை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்' என்று எண்ணினார்கள்; அதன் விளைவுதான், மின் விசைப் பொறிகளை இங்கே நுழைத்த செயல் ஆகும்!

எனவே, 'இது தொழிலாளர் விரோத நடவடிக்கை; சமூக விரோத நடவடிக்கை' என்று நான் துணிந்து குற்றஞ் சாட்டுகிறேன்!

'இங்கே தொழில் செய்ய வல்லவர்கள் நிரம்ப உண்டு' அவர்களிடம் ஆற்றல் இருக்கிறது! ஆனால் வேலைதான் இல்லை!

இப்படிப்பட்ட நிலையிலா மின் விசைப் பொறிகளைக் கணக்குத் துறையில் நுழைப்பது?

(28-5-66-ல் கோவையில் நடைபெற்ற எல். அய். சி.
ஊழியர் கூட்டத்தில் அண்ணா பேசியது)