பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சேதுபதி மன்னர் வரலாறு

ஒன்றில் காணப்படுகின்றது. இந்த அலுவல்கள் முடிந்தவுடன் இராமேஸ்வரம், திருப்புல்லாணி, திரு உத்திரகோசமங்கை, திருமருதூர் ஆகிய திருக்கோயில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து மன்னருக்கு வழங்குவதற்காகச் சில பிராமணர்களும் நியமனம் பெற்றிருந்தனர். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு சேது நாட்டின் பல பகுதிகளிலிருந்து மன்னரைச் சந்திப்பதற்காக வருகின்ற நாட்டுத் தலைவர்களையும், டச்சு நாட்டு, ஆங்கில நாட்டு அரசப் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடுவது சேது மன்னர்களது வழக்கமாக அமைந்து இருந்தன.

இந்தச் செய்திகளெல்லாம் இராமநாதபுரம் அரண்மனையில் பல ஆவணங்களிலும் சென்னையில் உள்ள தமிழ்நாட்டு ஆவணக் காப்பக ஆவணங்களிலும் காணப்படுகின்றன.



II அரண்மனையும் ஆவணங்களும்

இராமநாதபுரம் அரண்மனை

மேலே விவரிக்கப்பட்ட வரலாற்றின் நாயகர்களான சேது மன்னர்களும் ஜமீன்தார்களும் தங்களது தலைமையிடமாகவும் இருப்பிடமாகவும் அமைந்திருந்தது இராமநாதபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள அரண்மனையாகும்.

இராமநாதபுரம் கோட்டை முதலில் மண்ணால் அமைக்கப்பட்டு இருந்தது என்ற தொன்மையான செய்தி கி.பி. 12ஆம் நூற்றாண்டில் மதுரை மண்டலத்தின் மீது படையெடுத்து வந்த இலங்கைப் படையெடுப்பினைப் பற்றிய இலங்கை வரலாற்று நூலில் காணப்படுகிறது.[1] இந்தக் கோட்டை கி.பி. 1678 வரையான காலகட்டத்தில் போகலுரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த சேது மன்னர்கள் சில காலம் இதனைப் பயன்படுத்தினர். இதற்கு ஆதரவாக இராமநாதபுரம் தென்மேற்கு மூலையில் கூத்தன் சேதுபதியினால் அமைக்கப்பட்ட கூரிச்சாத்தனார் ஆலயத்தையும் தளவாய் சேதுபதி என்ற இரண்டாம் சடைக்கன் சேதுபதி அமைத்த சொக்கநாத கோயிலையும் அரண்மனையின் மையப் பகுதி திருமலை ரெகுநாத சேதுபதி அமைத்த இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தையும் குறிப்பிடலாம். இந்த மண் கோட்டையையும் இதனுள் அமைந்திருந்த அரண்மனையையும் அகற்றிவிட்டு இராமநாதபுரம் கோட்டையையும் அரண்மனையையும் அமைத்தவர் ரெகுநாத கிழவன் சேதுபதி ஆவார்.


  1. Paranavittna. Dr. S. Nicholson - Concise history of ceylon (1952)