உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/26. நாடு வாழ்ந்திட - பொது நலம் மலர்ந்திடத் தொண்டாற்ற வாரீர்!
26. நாடு வாழ்ந்திட - பொது நலம்
மலர்ந்திடத் தொண்டாற்ற வாரீர்!
நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பது, தமிழ்நாட்டில்--வழிவழி வந்த வல்லவர்களும், வித்தகர்களும் நிரம்பிய தமிழ் நாட்டில்--காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை போன்ற ஆறுகளும், அருவிகளும் பண் பாடி வளமளித்திடும் தமிழ் நாட்டில் ஆயிரம் தொழில்களில் ஈடுபட்டு நாட்டுக்குச் செல்வத்தை ஈட்டித்தரும் பாட்டாளிகள் நிரம்பிய தமிழ் நாட்டில் பாட்டு மொழியாம் தமிழ் மொழியுடன் இழைந்துள்ள பண்பாடு சிறந்திடும் தமிழ் நாட்டில்--'பாருக்குள்ளே நல்ல நாடு' என்று பாவலர் கொண்டாடிடும் தமிழ் நாட்டில்--அதனை எண்ண எண்ண இனிக்கிறது; ஆனால்...ஆமாம்; அந்தக் கவலை தந்திடும் சொல் வரத்தான் செய்கிறது! 'எத்தனை எத்தனை சிக்கலுள்ள பிரச்சினைகள் மலிந்துள்ள தமிழ்நாடு' என்பதனை எண்ணும் போது கவலை ஏற்படுகிறது!
"இந்தப் பிரச்சினைகளைச் சிந்திக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும் போதுமான உறுதியும் திறமையும் துணையும் தோழமையும் தொடர்ந்து கிடைத்திட வேண்டுமே" என்பதனை எண்ணும்போது, 'நீங்கள் உடனிருக்கிறீர்கள்' என்ற நினைவுதான் கவலையை ஓட்டுகிறது- கடமையைச் செய்வோம் என்ற உறுதியைத் தருகிறது!
அரசு நடத்திட ஆயிரமாயிரம் திறமைமிகு அறிவாளர்கள் பணியாற்றினால் மட்டும் போதாது; ஆட்சி, உண்மையில் செம்மையானதாக அமைந்திட வேண்டுமென்றால், வயலில்--தொழிற்சாலையில்--அங்காடியில்-பணிபுரிந்திடும் உற்பத்தியாளர்கள், உழைப்பாளர்கள் அனைவரும், "ஆட்சி நடத்திடுவோர் நாமே" என்ற உணர்வுடன் தத்தமது கடமையினைச் செய்ய வேண்டும்.
கற்றறிவாளர்--எம்மை நல்வழி நடத்திச் செல்ல வேண்டும்; இதழ் நடத்துவோர்--உடனிருந்து முறை கூறிட வேண்டும்; இவர் யாவரும் சேர்ந்து நடத்திடுவதே அரசு--நாங்கள் உங்களால் அமர்த்தப்பட்டவர்கள்.
வயல்களிலே கதிர் குலுங்கிடின்--அரசு அலுவலகங்களில் மகிழ்ச்சி துள்ளும்!
தொழிற்சாலைகளிலே தோழமை மலர்ந்து, நீதியும், நிம்மதியும் கிடைத்து, உற்பத்தி பெருகிடின்--நாட்டு நிலை உயர்ந்திடும்!
அங்காடியிலுள்ளோர், 'கொள்வன--கொடுப்பன் என்பவை நேர்மையின் அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும்" என்று இருந்திடின்--அகவிலையும், பதுக்கலும் அழிந்துபடும்! பொதுமக்கள் வாழ்வு சீர்படும்.
"நாட்டின் நிலை உயர்ந்திடப் பணியாற்றிடவே நாம்" என்ற உணர்வுடன் மாணவ மணிகள் கல்விக்கூடங்களில் பயிற்சி பெற்றிடின்-நாடு மேம்பாடு அடையும்.
இவை எல்லாவற்றின் கூட்டே ஆட்சி! சில மண்டபங்களில் மட்டுமே செயல்படுகின்ற காரியமல்ல ஆட்சி!
நாட்டு ஆட்சி வீட்டுக்கு வீடு காணப்படும் பண்பைப் பொறுத்து இருக்கின்றது!
இல்லாமை, பேதமை நீக்கப்பட்டு--வலியோர் எளியோரை வாட்டிடும் கொடுமை ஒழிக்கப்பட்டு--எல்லோருக்கும் ஏற்றம்--இன்பம்--உறுதியளிக்கப்பட்டு--"நாடு பூக்காடாய் திகழ்ந்திட வேண்டும்" என்ற ஆசையால் உந்தப்பட்டு "இந்த நிலை பெறுவதற்கான பணியில் ஒரு சிறு பகுதியையேனும் நாம் செய்து முடிக்க வேண்டும்" என்ற ஆவலுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளேன்.
முன்பு தரிசாகக் கிடந்த இடத்தை விளை நிலமாக்கிட வியர்வை சிந்துவோர்--குறை அளவு இயங்கி வந்த இயந்திரத் தொழிற்சாலையை, முழு அளவு இயங்கிடச் செய்யப் பாடுபடுவோர் மக்களின் வசதிப் பெருக்கத்துக்காக உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டு--அதனை நேர்மையான முறையில் நடத்திடுவோர்-- இவர்களெல்லாம் என் நண்பர்கள்! என் வணக்கத்துக்குரியவர்கள்!
உற்பத்தித் துறைக்கு முட்டுக்கட்டை இடுவோர்--உற்பத்திக்காகப் பாடுபடுவோரின் வயிற்றில் அடிப்போர்--இவர்கள் எனக்கு மட்டுமன்று-சமூகத்துக்கே பகைவர்கள்!
விலையை ஏற்றி விடுவோர்-விளைந்ததைப் பதுக்கிக் கொள்வோர்--நாட்டை நாசமாக்கும் நடமாடும் நோய்கள்!
ஊழல்-ஊதாரித்தனம், இலஞ்ச-லாவண்யம் ஆகிய கேடுகளைச் செய்வோர்--நாட்டின் அவமானச் சின்னங்கள்!
நண்பர்களே! நாட்டின் பகைவர்கள்--சமூக விரோதிகள் ஆகியோரிடமிருந்து நாட்டைக் காத்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது
கேடு களைத்திட--நாடு வாழ்ந்திட--சுயநலம் மடிந்திட--பொதுநலம் மலர்ந்திட--தொண்டாற்றுவோம் வாரீர்! வாரீர்!" என்று அழைக்கிறேன்.
(15-3-1968 அன்று வானொலியில் ஆற்றிய உரை)