உள்ளடக்கத்துக்குச் செல்

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/31. உழைக்கும் கரங்கள்

விக்கிமூலம் இலிருந்து

31. உழைக்கும் கரங்கள்

கள்ளக் கையெழுத்துப் போடாத கரங்கள்!
திருட்டுக் கணக்கு எழுதாத கரங்கள்!
மறந்தும் மற்றவர்கள் மடியில் கை
வைக்காத கரங்கள்!
அத்தனையும் உழைக்கும் கரங்கள்! --அண்ணா

பாட்டாளிகளுடைய கடமை சமுதாயத்திற்கு
நன்மை செய்வதிலே இருக்கிறது. --அண்ணா

"அன்னக்காவடிகள் தரும் ஆதரவு பணக்காரர்கள் தரும் 'செக்'கை விட, ஜமீன்தாரர்கள் தரும் பணமுடிப்புகளைவிட விலை உயர்ந்தவை, வலுவுடையவை!"

--பேரறிஞர் அண்ணா

தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்கிறார்கள் என்றால் தங்கள் மாளிகையிலே உள்ள மூன்றாவது மாடிக்குப் பளிங்குக்கல் அமைக்கப் பணம் கேட்கவில்லை. குடிசையில் படுத்துறங்கும் போது பசியால் சிறுகுடலைப் பெருங்குடல் தின்று விடாதபடி தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே கூலி கொஞ்சம் கூட்டிக் கொடுக்கும்படி கேட்கிறார்கள்.

"உலகம் மாயை இல்லை; உழைப்பவன் வாழ்வும் மாயமன்று; ஆனால் உழையாதவன் உல்லாசத்தில்தான் மாயம் இருக்கிறது”

--பேரறிஞர் அண்ணா.

ஓடப்பர் தரும் பகட்டுகள்

"முழு வயிறு காணாதோர்
முதுகெலும்பு முறியப் பாடுபடுவோர்.
வாழ்வின் சுவை காணார்,
வலியோரின் பகடைக் காய்கள்,
ஓடப்பர் - ஆகிய இவரெல்லாம்
தருகின்ற வரிப்பணமே
கோட்டைகளாய்,
கொடி மரமாய்,
பாதையாய்,
பகட்டுகளாய்,
அமுல் நடத்தும் அதிகாரிகளால்
அறிவு பெற அமையும்
கூடங்களாய்த் திகழ்கின்றன. --அண்ணா.

சந்தா செலுத்துவது அவசியம்

ஒரு தொழிற்சங்கம் போதுமான நிதி வசதி இல்லாமல் -- தன் சொந்தப் பலத்தை நம்பி நிற்கவோ அன்றி சுதந்தரமான அமைப்பாகச் செயல்படவோ, எதிர்பார்க்கும் பணிகளைத் தொழிலாளர்களுக்குச் செய்யவோ முடியாது.

தொழிற்சங்கத்தின் நிதிவசதி போதுமானதாக--தொடர்ச்சியானதாக -- தனது உறுப்பினர்களிடம் இருந்து மட்டுமே திரட்டப்பட்ட நிதி வசதிகளாக இருத்தல் வேண்டும்.

தொழிற்சங்க வருவாய்க்கு மற்ற வழிகளில் நிதி திரட்டுவது, தொழிற்சங்க சுதந்திரத்தின் ஆணிவேரை வெட்டுவதாக அமையும்.

பலவீனத்திற்குக் காரணம்

தொழிற் சங்கங்களின் பலவீனத்திற்குப் போதுமான நிதிவசதி இன்மையே அடிப்படைக் காரணமாகும்.

நமது நாட்டில் சந்தாத்தொகை மிகவும் குறைந்த அளவாக உள்ளது. உறுப்பினர்கள் அதையும் ஒழுங்காகச் செலுத்துவதில்லை. அதன் காரணமாகவே, முறையான அலுவலகங்களையோ முழுநேர ஊழியர்களையோ வைத்துக் கொள்ள வழியின்றி, ஆற்ற வேண்டிய பணிகளை முறையாகச் செய்ய முடியாமற் போய் விடுகிறது.

அந்த நாடுகளில்

தொழில்வளம் பெருகிய நாடுகளை சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பியபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்த நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் உள்ள வேறுபாட்டினை அவருக்கேயுள்ள பாணியில்:

"......அந்த நாடுகளில், 'நேரம் போதவில்லை' என்கிறார்கள்; ஆனால் இங்கோ, 'நேரம் போகவில்லை' என்கின்ற நிலை உள்ளது. நாமும் 'உழைப்பதற்கு நேரமே போதவில்லை' என்று ஆயாசப்படும் நிலையில், உழைப்பாளி மக்கள் அனைவரின் உழைப்புச் சக்தியும் ஒரு சேரப் பயன்படுத்தப்படுமானால், நாட்டுப் பொருளாதாரம் -- நிச்சயம் -- எதிர்பார்க்கின்றபடியே பெருகும் என்பதில் சந்தேகமில்லை.

"அனைவரும் முழுவேலைவாய்ப்பும் பெற்று -- அதன் மூலம் சுய வளர்ச்சி பெற்று -- நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொருவரையும் பங்கு பெறுமாறு செய்வது மிக மிக அவசியமானதாகும்."

உழைப்பவனின் உதிரம்

உழைப்போனின் உதிரத்தை உண்டு உருசி கண்டவனும், ஒரு கணம் உள்ளமதில் உண்மைக்கு இடமளித்து, 'பெற்றோம் நாம் பெருஞ்செல்வம், மற்றெதனால் அவர் உழைப்பதனால்; உழைத்தோர் உருக்குலைந்தார்--உண்ட நாம் பெருத்து விட்டோம்; என்றும் இந்நிலைதான்' என்று இறுமாந்து இருந்திடுதல் இனியும் நடவாது; குன்றெடுக்கும் நெடுந்தோள்கள் குலுக்குவது கண்டிட்டோம்; ஆட்காட்டி விரலுக்கு அடங்கினார், 'ஏன்' என்று அழுத்தமும், திருத்தமும் அழகு பெறக் கேட்டெழுந்தார்; ஆர்த்தெழுந்து அவர் உரிமைக்காக ஆணையிட்டுக் காட்டு முன்னம், அவா அடக்கி 'அவரவர் உழைப்புக்கு அவரவரே உரிமையாளர் என்றுள்ள அறநெறிக்கு அடிபணிவோம் பிணியாகோம்' என்று தனக்குத்தானே தத்துவம் கூறிக்கொள்ளும் புத்தறிவு பூத்திட மெத்தவும் உதவும் மேலான நாள்!

பேரறிஞர் அண்ணா--1957 'திராவிட நாடு'
பொங்கல் மலரில்.