உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பழைப்பு/'அன்பழைப்பு'

விக்கிமூலம் இலிருந்து

'அன்பழைப்பு'


தலைவர் அவர்களே! தோழர்களே! உழவர் பெருங்குடி மக்களே உங்களனைவருக்கும் முதற்கண் என் வணக்கம்.

உழவர் பிரச்சினை பற்றிப்பேச, பல கட்சிகளைச்சேர்ந்த நாம் இங்கே கூடியிருக்கிறோம். ஒவ்வொரு இலட்சியத்துடன் பாடுபடும் நாம், ஒரு பொது விவகாரத்தில் ஒன்று படுத்தப்பட்டுள்ளோம். இந்த முயற்சி சிறந்த முயற்சி, இதுபோன்ற கூட்டுமுயற்சி அரசியல் கட்சிகளிடையே, அடிக்கடி ஏற்படவேண்டும் என்று ஆசைகொண்டவன் நான். தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதும், ஒரு கட்சியின் நோக்கங்களை வேறெரு கட்சியினர் புரிந்து கொள்ள வாய்ப்புத்தருவதுமல்லாமல்; தங்களுடைய போக்கில் தவறுதல் இருக்கிறது என்று உணர்த்தப்பட்டால் அந்த ஓரிரு பகுதிகளைத் திருத்தியும், மாற்றியும் அமைத்துக் கொள்ளவும், இந்தக் கூட்டு முயற்சி உதவும்.

உழவர் வாழ்வு, ஒரு கட்சிக்குரிய விஷயமல்ல. பொதுப் பிரச்சினை. இருபோன்றவிஷயங்களில், எல்லா கட்சியினருமாகச் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபடுவது நல்ல காரியம் மட்டுமல்ல; நாட்டு வாழ்வில் உண்மையாகவே அக்கரை கொண்டோர் இவர்கள் என்ற உண்மையையும் எடுத்துக் காட்டுகிறது.

காலையிலே ஓமந்தூரார் அவர்கள் பேசுகையில் வற்புறுத்திக் கூறிய இரண்டு விஷயங்கள் ஒழுக்கம், கண்ணியம் ஆகியவைகளாகும். இவைபிரண்டும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவை என்று கூறமுடியாது. ஒழுக்கம் கண்ணியம் இரண்டுமே எந்தக் கட்சிக்கும் அடிப்பீடமாக அமையவேண்டும் கண்ணியமான போக்கு இருந்தால், உட்கருத்துக்களைப்பற்றி தப்பபிப்பிராயம் ஏற்படுத்தாது. பிறரைக் குறித்து, வேண்டுமென்றே குறை கூறவோ, வெறுத்துப் பேசவோ, இடங்கொடுக்காது.

இங்கே நான், முன்னாள் முதலமைச்சர், பழைய கோட்டை பட்டக்காரர் ஆகிய, பல கோணங்களைச் சேர்ந்தோர் இருக்கிறோம். இந்தக் கூட்டுமேடையைக் குறித்து அரசியல் ஆரூடம் கணிக்காமலில்லை. பலர் தங்கள் தங்கள் அறிவுக் கெட்டிய வரை யூகம், அதன் சக்திக்கேற்ற அளவு ஆரூடம், கணிக்க துவங்கிவிட்டனர்.

'ஏ'அப்பா அண்ணாத்துரை போகும் மாநாட்டிலா ஓமந்தூரார் கலந்து கொள்கிறார்! இப்படி ஒரு பேச்சு. 'ஓமந்தூரார் அவர்களே! அரசியல் வேடதாரிகளோடு போய்ச் சேராதீர்! இப்படி, துண்டு நோட்டீஸ் மூலம், ஓமந்தூராருக்கு ஒரு எச்சரிக்கை. திருச்சி தீரர்கள் வாழுமிடம் என்றே நம்பி வந்தேன். ஆனால், இப்போது துடை நடுங்கிகள் சிலரும் இருக்கிறார்கள் என்பதையே அத்துண்டு நோட்டீஸ்கள் சொல்லுகின்றன. ஓமந்தூராருக்கு எச்சரிக்கை விடுத்து அச்சடிக்கப்பட்டுள்ள அத்துண்டு நோடீஸின் கீழே, "இங்ஙனம் ஊர்ப் பொதுமக்கள்" என்று போடப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் பக்கத்திலேயே எங்கு அச்சடிக்கப் பட்டதோ அந்த அச்சகத்தின் பெயரும் போடப்பட்டிருக்கிறது. அச்சகக்காரர் ஊரார் சொல்லினரா, என்று கேட்டிருக்கமாட்டார். எத்தனை நோட்டீஸ்கள்? எவ்வளவு பணம் தருகிறாய்? என்றுதான், அச்சடிக்க வந்தவரைக் கேட்டிருப்பார்! அவருக்கு நோட்டீஸ் அடிக்கவந்தது பொதுமக்கள் தானா அவர்கள் தான் கூடாதென்கின்றனரா? என்ற விபரம் அவசியமில்லை. இந்த உண்மை நமக்குத் தெரியாதென்று நினைத்தோ, அல்லது தனது பெயரைக் கீழேபோட, கோழைத்தனம் குறுக்கிட்டதாலோ 'பொது மக்கள்' என்று போடச் செய்திருக்கின்றனர். இவ்வளவு, கோழைகளாக தேசீயம் இவர்களை ஆக்கிவிட்டதே என்று வெட்கப்படுகிறேன்.

காலையிலே கண்ணியத்தைப்பற்றி குறிப்பிட்டார் முன்னாள் முதலமைச்சர். அரசியல் சட்சிகளிலே அது, அவசியம் தேவை என்று வலியுறுத்தினார். ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை. ஆனால், அந்தக் கண்ணியம், எங்கே குறைந்து வருகிறது என்பதை அவருடைய சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

மாநாடு நடைபெறும் பந்தல், சர்தார் படேல் பந்தல். சர்தார் படேல் பந்தலுக்கு அண்ணாதுரை வரும்போது, அண்ணாதுரை வருகிற இடத்துக்கு ஓமந்தூரார் வந்தால் என்ன? வரக்கூடாதா? அல்லது நான் வரலாம் வேறு தலைவர் பெயர்கொண்ட பந்தலுக்கு; அவருக்கு மட்டும் அந்த ஆசை கூடாது என்பதா?

இதை உற்று நோக்கினால் எங்களுடைய அரசியல் கண்ணியம் விளங்கும்! இன்னொரு கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் இடத்தில் நான் போகத்தான் வேண்டுமென்பதென்ன? போகாமலிருப்பதால் எங்களது கொள்கைகள் என்ன குறைந்தா போய்விடும்? இருந்தும், பொது விவகாரங்களில் கூட்டு முயற்சி தேவை என்ற உற்சாகத்தோடு நாங்கள் ஏன் கலந்து கொள்கிறோம்!

நாங்கள் கண்ணியம் உடையவர்கள், சகிப்புத்தன்மை எங்களுக்கு அதிகம். விட்டு கொடுப்பது வேதனைகள் நீங்க எப்படியாவது பாடுபடுவது - இவை எங்களுடைய பாதை. இந்த நோக்கத்தை எல்லோரும் அனுஷ்டித்தால், நாட்டில் கட்சிப் பூசல்களும், வீண்சச்சரவுகளும் எப்படி எழும்பும்? ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த அளவு அரசியல் கண்ணியம் மாற்றுக் கட்சியினரிடையிலே மலரவில்லை; மறைத்து விட்டது.

எனினும், மதிப்பிடத்தக்க விலக்காக, குறிப்பிடத்தக்க அளவில், இருப்பவர் தமது ஓமந்துாரார் அவர்கள்.

நான், அவர் ஆட்சி நடத்தியபோது ஒரு வாரம் அவருடைய கைதியாகக் காலங்கழித்திருக்கிறேன். அவரோ! முன்னாள் முதலமைச்சர்; நானோ கைதி.

கைதியும், முன்னாள் முதலமைச்சரும் இங்கே கூடியிருந்து விவசாயிகளின் வேதனையைப் போக்க ஆளுக்கொரு கம்பிகளைப் பிடித்து இழுக்கத்தான். அது தவிர்த்து, வேறு எதற்காகவும் அல்ல. இருந்-தும்; இங்குள்ள சில தேசீயத் தோழர்கள் துண்டு நோட்டீஸ் அடித்திருக்கிறார்கள்.

மிக மிகப் பலம் வாய்ந்தது தேசீய கவசம் என நினைத்திருந்தேன். ஆனால், இப்போது தெரிய வருகிறது அது எவ்வளவு சீக்கிரம் கலகலத்துப் போகிறது, படபடத்துக் கரைகிறது என்பது.

இந்த ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதால் ஓமத்தூரார், தனது பழைய கவசத்தைக் களைந்து விட்டு புதுக்கவசம் போட்டுக்கொண்டுவிடுவாரோ, என்று கலங்கிப் போயிருக்கின்றனர். அவர்கள், பரிதாபம். அந்தத் தோழர்கள் ஓமந்தூராரையும் புரிந்துகொள்ளவில்லை. தேசீயத்தையும் புரிந்து கொள்ளவில்லையே என அனுதாபப் படுகிறேன்.

இந்த மாநாட்டில் நான் பங்குகொள்வதால் ஓமந்தூரார் கட்சி மாறிவிடுவாரென்று கருதுமளவு பைத்தியக்காரனல்ல நான். திடீர்த்தோழர்களையோ கூடுவிட்டு கூடுபாய்பவர்களையோ, பார்த்திராதவனுமல்ல நான். பார்த்தவுடன் கட்சியிலிருக்கவேண்டும் என்று கருதுமளவுக்கு எனது கட்சியும் இல்லை. அத்தகையோர் இல்லாமல்தான் எங்கள் இயக்கம் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை மக்கள் அறிவர்.

எனது ஆசையெல்லாம் கருத்துக்கேற்றபடி காரியங்களைச் செய்யவேண்டும் என்பதுதான். எப்படியாவது நாட்டு நலிவு நீங்கவேண்டுமென்பதுதான்!

இன்று, இம்மாநாட்டைத் துவக்கிவைத்து அருமையான கருத்துரைகளைத் தந்த ஓமந்தூரார் அவர்கள் சர்க்காரும் சமூகமும் விவசாயிகளை எவ்வளவு தூரம் புறக்கணித்து விட்டன என்பதை வேதனையோடு வெளியிட்டார். அதே நேரத்தில் எச்சரித்தார்: 'உழவர்களே! உங்களை அரசியல் கட்சிகள் எளிதில் ஏமாற்றிவிடும். ஆகவே, எந்த அரசியல் கட்சிகளுக்கும் அடிமையாகி விடாதீர்கள்' என்பதாக!

உண்மை , விவசாயிகளின் வேதனை, அவர்களின் அதிருப்தி, மனக்குமுறல் ஆகியவைகளைச் சாதகமாக்கித் தேர்தல் சூதாட்டத்திலே வெற்றிபெற இந்நாட்டு அரசியல் கட்சிகள் முயற்சித்துக்கொண்டுதான் உள்ளன. ஆகவே தான் அவர் விடுத்தார் எச்சரிக்கை, உழவர்களுக்கும் — அதே நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கும்!

நான், ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவன். நான் சார்ந்திருக்கும் கட்சியின் சார்பிலே அவருக்கு உறுதி கூறுவேன், உழவர்களைப் பயன்படுத்தி அரசியல் லாபநாேக்கம் கொள்ளமாட்டோம் என்பதை!

மற்ற அரசியல் கட்சிகள் உழவரைப் பயன்படுத்த விரும்புவது — தேர்தலிலே லாபம் பெற. நல்ல வேளையாக எங்களுக்கு அந்த ஆசையுமில்லை — அவசியமுமில்லை!

எங்களது நோக்கம் எல்லாம், பேதமற்ற வாழ்வு சமுதாயத்தில் மலரவேண்டும், எங்கும் இன்பம் மலர வேண்டும் எல்லாரும் மனிதராக வாழவேண்டும் என்பதுதான்!

இந்த நிலை நிரந்தரமாகவேண்டும் என்பதற்காகவே, எமது பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது!

வியாபாரிகளின் வேதனையைத் துாண்டிவிட்டு, மாணவர்களிடையே எாிச்சலை அதிகமாக்கி, ஆசிரியர்களின் அல்லலைக் காட்டி, தொழிலாளர்களின் துயரத்தைப் பெரிதாக்கி, வோட்டுக் கணக்கெடுக்கும் அரசியல் கட்சிகளிலே நாங்கள் சேராதவர்கள்!

அரசியல் குட்டையிலே மீன்பிடிக்க வலை வீசுபவர்களல்ல நாங்கள்!

சந்தேகமிருந்தால் நன்றாகப் பாருங்கள் வலை எங்கள் கையிலிருக்கிறதா என்று.

'அரசியல் கட்சிகளின் ஆசாபாசங்களுக்கு இறையாகி விடாதிர்கள்' என்று உழவா் மக்களுக்கு ஏன் அவர் வலியுறுத்தினார்? காரணம் ஏழை விவசாயிகள் படிப்பற்றவர்கள். ஆகவே அவர்கள் மனதை மயக்கி விடலாம் அரசியல்கட்சிகள் — சிறிய முயன்றால். இந்தக் கருத்திலேதான், அவர் சொன்னார். ஆனால், ஒன்று. இந்நாட்டு விவசாய மக்களுக்கு கதிா் எது, பதர் எது என்று பகுத்தறியும் சக்தி அதிகம். ஆகவே வலையிலே வீழ்ந்து பலியாகிவிடமாட்டார்கள். அவ்வளவு எளிதில்!

இன்று, பல கட்சித் தலைவர்கள் இங்கே கலந்து கொண்டாலும், ஒரு உண்மை மட்டும் வெளிப்பட்டு விட்டது. அந்த உண்மையை எல்லோரும் எடுத்துக்காட்டினர். அதாவது உழவரிடம் திருப்தி இல்லை!

இந்த உண்மையை எடுத்துச் சொல்லிய நேரத்தில், ஒவ்வொருவரும், ஒவ்வொரு மார்க்கம் காட்டினர்.

உழவர் நிலை என்று பார்க்கிற நேரத்தில் உழவாின் வேதனை, நீர்ப்பாசனமில்லாது அவன் படும் கஷ்டம் — உரமில்லாது தவிப்பது, ஆகியவைகளை மட்டும் அல்ல நான் குறிப்பிட விரும்புவது. இவைகள் திருத்தப்பட்டு விட்டால், எல்லா இன்பமும் உண்டாகி விடும் என்று நம்புபவனும் அல்ல. ஏனெனில், உழவர்களால் உற்பத்தி செய்யப்படும் செல்வம், அவர்கள் உழைப்பினால் கிடைக்கும் பலன், நமது நாட்டு மக்களது வாழ்க்கைத் தரத்தை (Standard of Life) உயர்த்தப் போதுமானதாக இல்லை. ஆகவே, விவசாயிகள் விவசாயம் ஒன்றையே நம்பி வாழமுடியாது! பொதுச் செல்வம் வளர, நாட்டு வருவாய் வளமாக.

விவசாயிகள் வேறுதொழில்கள் கற்றுக் கொள்ள வேண்டியது மிக, மிக அவசியம். இதை முன்னாள் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால், எத்தகைய தொழில்கள் உழவர்களுக்குத் தேவை என்று குறிப்பிடவில்லை. அப்படிக் கூறினாலும் அவர் குறிப்பிடும் தொழில்களுக்கும் நான் கூற விரும்பும் தொழில்களுக்கும் வித்தியாசம் இருக்கலாம். அவர் காந்தீய முறையில் குடிசைத் தொழில்களைக் கூறலாம் — அது பயன் தருமா என்று கேள்வியைக் கிளப்பலாம் நான்!

ஆனால், தொழில்கள் எவை யெவை என்று கருதுவதிலே, கருத்து வேற்றுமை இருந்தாலும் இருக்க முடியுமே யொழிய உழவர் பெருமக்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு தொழிலும் தேவை என்பதிலே கருத்து வேற்றுமை இருக்க முடியாது!

அரசியல் கட்சிகளின் வலைவில் விழாமல், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்று, முன்னாள் முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள்— பன் முறை!

அதை நான் வரவேற்கிறேன் குரல் ஒலிக்க முடியாது இருட்டில் கிடக்கும் ஏழை விவசாயிகளுக்கென்று அமைப்புள்ள சங்கங்கள் அவசியம் தேவை. அதிலும் கட்சி சார்பற்ற விவசாயிகளின் வேதனைகளைப் போக்கப் பாடுபடும் சங்கங்கள் மிக மிகத் தேவை. அதிலும், தன்னலமற்ற, விவசாயிகளின் நலன் கருதிப் பாடுபடும் சங்கங்களாக அவைகள் இருக்க வேண்டும் என்பதையே முன்னாள் முதலமைச்சரைப் போல நானும் விரும்புகிறேன்!

ஆகவே, இந்த நேரத்தில் ஓமந்தூர் தலைவரை நான் கேட்டுக் கொள்ளுகிறேன். அவரே விவசாயக் கழகத்தை ஆங்காங்கு ஆரம்பித்துவைக்கவேண்டும். இத்தகைய நல்ல பொறுப்பை ஏற்க அவரே மிக மிகத் தகுதியானவர். அவர் உத்தமர், பற்றற்றவர். பயிர்த்தொழில் புரிபவர் மக்களை அறிந்தவர். ஆகவே அவரே இந்த நற்சேவையின் தூதுவராக விளங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அதே நேரத்தில், அவர் காலையில் விவசாயிகளுக்கு விடுத்த எச்சரிக்கையை அவருக்கு நினைவூட்டித் தெரிவித்துக் கொள்கிறேன். ஓமந்தூரார் அவர்களே! தங்களது உத்தமப்போக்கில், நேர்மைக் குணத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையுண்டு. எனினும், தாங்கள் காங்கிரசை விட்டு விலகிவந்து, இந்த நல்ல காரியத்தை துவக்கி வையுங்கள்" என்று ஏன், இதை நான் தெரிவிக்க விரும்புகிறேன் என்றால், அவர் காங்கிரஸிலிருந்து கொண்டே விவசாயிகளுக்குப் பாடுபடுவதாக, முன்வந்தால் அவர் கூறியதைப் போல என் போன்றார் தவறாக எண்ணிவிடக்கூடும். சரிந்து போய்க்கொண்டிருக்கும் காங்கிரஸ் ஸ்தாபனத்துக்குப் புது வலிவு தேட, புதுவழி செய்கிறாரோ — என்று பலர் ஐயுற இடமேற்படக் கூடும். ஆகவே தான், அவர் காங்கிரசை விட்டு வெளியேறி, விவசாயிகளுக்காகத் தனது காலத்தைச் செலவிட வேண்டுமென்று விரும்புகிறேன்!

உழவரின் உண்மையான வேதனையை உணராத அரசியல்வாதிகளைவிட வெளியிலே தங்கள் வேதனையைக் கூற திறமையற்றுக்கிடக்கும் விவசாயிகளின் துயர் துடைக்க அவரைப் போன்ற தலைவர் கிடைப்பது அரிது.

ஆகவேதான் என்னுடைய இந்த ஆசையை அவருக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

உள்ளத்தில் தூய்மையோடு எந்த நல்ல முயற்சியிலீடுபட்டாலும், இந்த நாட்டிலுள்ள இன்றைய துரதிா்ஷ்டம், எவரையும் சந்தேகக்கண்களாேடு பார்ப்பதாகவே ஆகிவிட்டது. இந்தப் பொல்லாத உலகில் நல்லோர் என்றால்கூட சந்தேகம் கொள்ளாதோரில்லை. இது, என்னைவிட, அனுபவ வாயிலாக அவருக்கு அதிகமாகத் தெரியும். ஆகவேதான் அரசியல் கவசம் நீக்கிவிட்டு, அவர் இத்தகைய நற்சேவையில் ஈடுபட வேண்டுமென விரும்புகிறேன்!

அவர் பலகாலம், சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார். சுயராஜ்ஜியம் பெறவேண்டும் என்பதற்காக போராடிய காங்கிரஸ் ஸ்தாபனமும், தனது இலட்சியத்தில் வெற்றி கண்டுவிட்டது. எனவே, நிம்மதியோடும், வேதனைப்படும் விவசாயிகளுக்குத் தனது வாழ்வினைப் பயன்படுத்தலாம். அவர் அத்தகைய நற்பணியில் ஈடுபட்டால், எங்களாலான உதவி, அவருக்கு எப்போதும் கிடைக்கும் என்று உறுதி கூறுகிறேன். நாங்கள் அரசியல் உள்நாேக்கம் அற்றவர்கள், வாேட்டுப் பிச்சைக்காக அல்ல, நாங்கள் பணிபுரிவது. ஆகவே அவர் எங்களை நம்பலாம் — எப்போதும் அவருடைய நற்பணிக்கு எங்களுடைய நல்லாதரவைத் தருவோம்!

எங்களுடைய பணி, அரசியல் லாபவேட்டையல்ல, என்று குறிப்பிட்டேன்? நாங்கள் விரும்புவதெல்லாம் புது சமுதாயம், அமைக்கப்படவேண்டும் என்பதுதான். பழமை ஒழிந்து அதனால் ஏற்படும் பாதகங்கள் மறைந்து, புதுவாழ்வு மலரவேண்டும்!

பழமையை வெறுப்பவர்கள் தான் நாங்கள். புதுமை வேண்டுமென்கிறோம், புது மலர்ச்சி தேவையென்கிறோம். பழமைப் பாசி அகற்றப்பட்டு புதுஒளி சமுதாயத்தில் பரவவேண்டு மென்பதுதான் எங்கள் நோக்கம். ஆனால் அதற்காக பழமை எல்லாவற்றையுமே விட்டாெழிக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. கருத்துக் கொவ்வாத 'களை' வயலிலிருந்து களையப்படவேண்டும், நினைவையும், நேரத்தையும் வீணாக்கும் மூடநம்பிக்கைகள் சமுதாயத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் — இதுவே நாம், கூறிவருவது பழமை என்பதற்காக தூங்குவது, சாப்பிடுவது, ஆகியவைகள் கூடாதென்றா கூறுகிறாேம்? பழமை என்பதற்காகப் பண்டைய மன்னர்களின் அணைக்கட்டுகள் அழிக்கப்பட வேண்டுமென்றா விரும்புகிறாேம்? வானத்தை முட்டும் கூடகோபுரங்கள், பண்டைப் பெருமையின் பளிங்குமா மண்டபங்கள், படிக்கட்டுகள், இடிந்துபோன கோட்டை கொத்தளங்கள் அவைகளிலே நாம் காணும் சித்திரத் திறமை ஆகியவைகளை நாங்கள் அகற்ற வேண்டுமென்றா சொல்லுகிறாேம்? பழமை என்பதற்காக பற்றுக் கொள்ளாமலில்லை. ஆனால், கோட்டை கொத்தளங்களைக் கண்டு பெருமைகொள்ளும் அதேநேரத்திலே அந்தக் கோட்டைகளின் இடிந்த தன்மையைக்காட்டி — 'எழில்மிகு கோட்டை இடிந்துவிட்டது, ஏன்? நாம் ஏமாளிகளானதால்!' என்று சுட்டிக்காட்டுகிறோம், இழந்த பெருமையை நாம் பெறவேண்டுமென்ற எண்ணத்தால்!

புதுமை மணம் நாட்டிலே பரவவேண்டுமென்று கூறும் நாங்கள், பழைமைப்பாசி அகலவேண்டுமென்று கூறும் நாங்கள், பழங்காலத்திலே ஒன்றுமேயில்லை என்று கூறவில்லை!

அப்போது சிற்சில இருந்தன, அன்றைய தேவை வசதிகளையாெட்டி. ஆனால் இப்பாெழுது காலம் மாறிவருகிறது, நமது வாழ்க்கை முறையும் மாறவேண்டுமென்கிறாேம்!

தோளிலே மண்வெட்டி சுமந்து செல்லும் காலம் மாறி, நிலத்தை உழும்படி 'டிராக்டர்' ஏற்பட்டு விட்டது!

ஆனால், டிராக்டரின் பெயரையோ அல்லது அது தரும் நலனையோ, ஒரு விவசாயிடம் கேட்டுப்பாருங்கள்; மாாியம்மன் தெரிகிற அளவுக்கு இதுபற்றி, அவனுக்குத் தெரியாது.

காலையிலே, ஓமந்தூரார் அவர்கள் வயலுக்கு தேவையானது உரம் என்பது குறித்து விளக்கினார்கள். உரம் வேண்டும் — வயல் வளமாக! ஆனால் அந்த உரத்தின் பெருமை குறித்து உழவர்களுக்குக் தொியுமா? பூஜை நேரத்தில் ஐயர் மாட்டு மூத்திரத்தையும் சாணியையும் கலந்து 'பஞ்சகவ்யம் சாப்பிடு' என்ற கூறுவதை கேட்டிருக்கிறானே ஒழிய அந்த அளவு தான், மாட்டுச் சாணத்தின் பெருமை குறித்து அறிந்திருக்கிறானேயாெழிய, சாணத்தின் பெருமை அது உரமாகும் அருமை —அறிந்ததுண்டா? நமது விவசாயிகள்?

எருவைப் பாழ்படுத்த எத்தர்கள் பஞ்சாங்கத்தை பயன்படுத்தினர், என்பது அவனுக்குத் தெரியுமா?

இதைச் சொன்னால் 'கடவுள் இல்லாதவன்' — என்று, இலேசாகக் கூறிவிட முயல்கிறாா்கள். கடவுளை மறக்க வேண்டும் என்பது அல்ல, எமது நோக்கம். கடவுளை மறுக்கவும், அவரை மறைக்கவும் நாம் என்ன கடவுளிலும் மேம்பட்டவா்களா? அல்லது கடவுள் தான் என்ன, நமது பேச்சால் மறைந்துவிடப் போகிறவரா?

இதோ இருக்கிறது மின்சாரம், ஒளி—ஒலி, இரண்டையும் நமக்குத் தந்த வண்ணமாக, சிறு கம்பியின் மூலமாக இத்துணை நன்மையும் நமக்கு கிடைக்கிறது. அதே போல கடவுளால் நமக்கு நன்மைகள் கிடைக்கின்றன என்றால் வரவேற்காமலா இருப்போம்?

இதோ நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என் குரலை துாரத்திலுள்ளாோ் கூடக் கேட்குமாறு, மின்சாரம் செய்து கொண்டிருக்கிறது. சில சிமிடம் திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என் குரலை நீங்கள் கேட்க முடியாது. அப்போது, அதன் அருமை தெரியும், எனவே, இத்தகைய நன்மையைத் தரும் மின்சாரம் கூடாது என்றா கூறுவாேம்? கூறத்தான் நாங்கள் என்ன பித்தர்களா?

எமது பணி, நாட்டுப்புற மக்களுக்குத் தேவையான புத்தறிவைப் போதிப்பதுதான். நமது நாட்டில் நுாற்றுக்குத் தொண்ணுாறு பேர் கல்லாதவர்கள் என்று குறிப்பிட்டார்கள் முன்னாள் முதலமைச்சர். அவ்வளவு பெரும்பான்மையான கல்வியற்ற மக்களுக்கு கல்வியைத் தருவது என்பது சாத்தியமா? வாழ்நாள் முழுவதும் முயற்சித்தாலும் முடியுமா? பலர் வயோதிகப் பருவத்தில் இருப்பவர்கள், குடும்ப அல்லல்களில் உழல்வோர் பலர். 'உழைப்பு! உழைப்பு!" என்று அவர் தொகை கோடானகோடி. இப்படியிருக்கையில் எல்லோருக்கும் பாட புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிப்புச் சொல்லித் தருவது, சாத்தியமா? முடியாது — எனவேதான் பொது அறிவு, அவர்களுக்கெல்லாம் கிடைக்கும்படியான பெரும் பணியைச் செய்து வருகிறாேம். கட்டிடமில்லாத கல்லுாரிகள்தான் — நாங்கள்!

நமது மக்கள் எது தேவையில்லையோ அதைப் பற்றி அதிகம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். எதைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமாே அதைப் பற்றி அக்கரை கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக டிராக்டரைப் பற்றி, ஒரு விவசாயியை "இயந்திரக் கலப்பை தெரியுமா?" என்று கேளுங்கள் — 'தெரியாது' என்பார். காட்டுங்கள் — அதைப் பற்றிக்கவலை கொள்ளமாட்டார். எங்கே செய்தது யார் கண்டு பிடித்தது, எப்போது கண்டு பிடித்தது, என்றெல்லாம் கேட்க வேண்டுமென்கிற ஆசையும் எண்ணமும் அவருக்கு எழும்பாது.

ஆனால், அதே உழவர் ரயிலில் போய் கொண்டிருக்கிறார். தூரத்திலே குன்று ஒன்று தெரிந்தது. அதன் உச்சியில் கோபுரம் ஒன்று தொிந்தால் கன்னத்தில் போட்டுக் கொண்டு பக்கத்திலே இருப்பவரைக் கேட்பார். என்ன கோயில் அங்கேயிருக்கும், சாமி எது, அதற்கு எப்போது திருவிழா என்றெல்லாம் பக்திசிரத்தையோடு கேட்பார். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அவர் கோயில் விசாரணை செய்வது தவறு என்றாே கூடாது என்றாே நான் கூறவில்லை! ஆனால் இதில் காட்டப் படுமளவு சிரத்தை, என் இயந்திரக் கலப்பையிடம் காட்டப்படவில்லை

இந்த மனப்பான்மையைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!

புதுமைகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்ற அக்கரை நமது மக்களுக்கில்லை. கேட்டுப் பாருங்கள். 'ஓமந்தூர்' எங்கே இருக்கிறது? ஓமந்தூராா் இருக்கிறாரே, அவருக்கு எத்தனை குழந்தைகள்? மனைவியார் இருக்கிறார்களா? என்று, 'தெரியாது—தெரியாது' என்றே பதில் சொல்வார் கிராமவாசி. அதே கிராமவாசியைக் கேளுங்கள், கைலாசம் எங்கே இருக்கிறது? — உடனே காட்டுவாா் ஆகாயத்தை, ஏதோ போய்ப் பார்த்து விட்டு வந்தவர்போல. 'பரமசிவனுக்கு எத்தனை குழந்தைகள்?" கேட்டுப் பாருங்கள் அவரை, ஏதோ, இவர் வீட்டுப் பக்கத்தில் தான் பரமசிவன் குடியிருப்பது போல இரண்டு குழந்தைகள், மூத்தவர் விநாயகர் — இளையவர் சுப்பிரமண்யன் என்று சொல்லுவார். அவரை நமது மாகாணத்தின் வருமானம், செலவு பற்றிக் கேளுங்கள், விழிப்பார்!, உடனே நமது மாயலோக வரவு செலவைக் குறித்து வைத்துக் கொள்ளும் 'சித்திரகுப்தன்' பற்றிக் கேட்டால், கனைத்துக் கொண்டு பேசத் துவங்குவார்!

இது தேவையா, அது தேவையா என்பது கூட அல்ல நான் கேட்க விரும்புவது, கண்ணிற் காணமுடியாதவைகளைப் பற்றி தெரிந்து கொள்வதில் உள்ள அக்கரை, நமக்கு நன்மை தரும் விஷயங்களைப் பற்றித்தெரிந்து கொள்வதில் மட்டும் ஏன், இல்லை?

இந்த நிலை நீடித்தால், பொது அறிவு பரவுமா, பிற தேசங்களுக்கு ஒப்பாக நமது மக்களும் முன்னேறத்தான் முடியுமா? அல்லது நாம் எப்போதும் போல இருந்து விடுவதென்பது தான் இயலுமா ?

காலையில் விவசாய சம்பந்தமாக நல்ல புள்ளி விபரங்களை ஓமந்துாரா் தந்தார்கள். அவசியமான, பயன் தரத்தக்க விபரங்கள் அவை. அந்த விபரங்கள் நம்மோடு இருந்துவிட்டால் போதாதே! அவை கிராமங்கள் தோறும் நிலைக்க வேண்டுமே! ஒவ்வாெரு கிராமத்திலும் அதுபாேன்ற புள்ளி விவரங்கள் ஆங்காங்கே உள்ள பொதுச் சாவடிகளில் இடம் பெற வேண்டும். ஓய்வு நேரத்தில், அவைகளைப் பார்த்துப் பொது மக்கள், விளக்கம் பெறும் வகையில் செய்ய வேண்டும். ஆனால், இப்போதுள்ள ஊர் சாவடிகளில் எதைக் காண்கிறாேம்? வேம்பு அதற்கடியில் சிறுகல் அதற்குத் திருவிழா, காெண்டாட்டம்! இப்படித் தானே! நேரமும் நினைப்பும் பாழாகிக் கொண்டு வருகிறது. இதற்கு பதில், இந்த வீண் விழாக்களால் செலவழியும் தொகையைக் கொண்டு ஏன் அந்தச் சாவடிகள் யாவும் பொது அறிவு பரப்பும் முதியோர் கல்விச் சாலைகளாக மாரக் கூடாது!

கிராமத்து மக்களுக்கு இந்தியாவின் அகல நீளம் தெரியுமா? அது கூட வேண்டாம், சென்னை மாகாணத்தில் வாழும் மக்கள் தொகைதான் தெரியுமா? இதையெல்லாம் அவர்கள் அறிந்து கொள்ள, ஆளுக்கொரு பூகோளப் புத்தகம் வாங்கித்தர நேரமுண்டா அல்லது அதற்கான நிதிதான் இருக்கிறதா? அல்லது இந்த சர்க்காரால் தான் முடியுமா?

ஆகவே அவர்களுக்கு இது பற்றி யெல்லாம் விளக்கி பொது அறிவுள்ளாேர்களாக்க, கிராமக் கண்காட்சிகள் — இந்த வகையில், மிக மிகப் பலன் தரும்.

ஆனால், இதை யெல்லாம் செய்ய முற்படும் போது நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது!

இதுவரையில், கிராம மக்கள், எத்தனை உலகங்கள் என்று கேட்டால் அதல, சுதல, பாதாளம், என்றே கூறிப் பழக்கப்பட்டவர்கள். அதையே நாமும் நம்பினோர்களாக இருந்து கொண்டு, ஆப்பிரிக்காவின் நிலை, அமெரிக்காவின் பெருமை, ஆஸ்திரிரேலியாவின் சிறப்புப்பற்றி கூறமுடியுமா?

ஆகவே, பொது அறிவு பரப்ப முற்படும் போது, பிறநாட்டின் படத்தைப் போட்டுக் காட்டும் போது, அங்கே வாழும் மக்கள், நிலை, அவர்கள் வணங்கும் தெய்வம் ஆகியவைகளையும் படங்கள் மூலமே விளக்க வேண்டும்!

இது அமெரிக்கா படம்-இங்கு வாழ்வோர் கிறிஸ்தவர்கள் — அவர்கள் வழிபடுவது இயேசுநாதரை என்று நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அதே நேரத்தில் நமக்குள்ள மூலதெய்வங்கள் மூன்று சில்லரைத் தெய்வங்கள் முப்பத்தி முக்கோடி என்பதையும் எடுத்துக் கூற வேண்டும்!

இதை நான் கூறும் நோக்கம், சாமி குறைய வேண்டும் என்பதல்ல சாமிகளுக்காகச் செலவழியும் நேரத்தையும் நினைப்பையும் குறிப்பிடத்தான்.

கண்காட்சிகள் மூலம் கிராம மக்களுடைய பொது அறிவைத் தட்டி எழுப்ப வேண்டும். அதே நேரத்தில் நாம் கூறும் பல கருத்துக்களை யெல்லாம் அவர்கள் ஜீரணித்துக்கொள்ள வசதி செய்து தரவேண்டும். நமது கிராம மக்களுக்கு, எது நல்லது, எது கெட்டது என்பதைப் பகுத்தறியும் திறன் நிறைய உண்டு. உரைத்துப் பார்க்கவும், நிறை போட்டுணரவும் சலித்துத் தெரியவும் விவசாயிகள் நன்கு அறிவர்!

ஆகவே, இதுபோன்ற நல்ல ஏற்பாடுகள் மூலம் அவர்கள் பொது அறிவை வளர்த்தால்தான் கிராமம் நகரம் என்ற பேதம் தெரியாது!

இன்றைய சமுதாயத்தில் இரண்டு உலகங்கள் இருக்கின்றன. ஒன்றையொன்று துாற்றிக்கொள்வதும் பழித்துக் கொள்வதுமாக இருக்கின்றன. இந்த உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. நகரம் — கிராமம். இரண்டுக்குமிடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள பிளவு இருக்கிறது. இரண்டையும் நிரப்ப, பாலம் அமைக்க நாம் பாடுபடவேண்டும், இது சாதாரணமானதல்ல. மிகமிகச் சிரமமான காரியம்! இதிலே ஓமந்துாரார் நுழைந்தால், அவரோடு ஒத்துழைக்க நாம் தயாராக இருக்கிறாேம். அவர் நல்லதொரு பெயரை-மக்களிடைப் பெற்றுவிட்டார். காங்கிரசிலே இருந்து பணி புரிந்து, அதன் பலனையும் பெற்றுவிட்டார். எனவே மனதிலே புதுத்தென்போடு, ஜெயகோஷத்தோடு வரலாம். விவசாயிகள் சார்பாக நின்று போராடவும், அலைக்கழிக்கும் அரசியல் கட்சிகளின் வலைகள் வீசப்பட்டாலும் அவர் தயங்கார்.

இதுபோன்ற மகத்தான பணியை அவர் போன்ற நல்லவர் தான் ஏற்கவேண்டும்!

ஒருநாள் பேசினார், சென்னை மேல் சபையில், ஆளவந்தார் போக்குக் குறித்து. அன்று அரசியல்வாதிகள் பலரிடையே புயலும் தென்றலுமல்லவா வீசிற்று! பலப்பலவல்லவா, எண்ணத் துாண்டிற்று அந்தப்பேச்சு! மக்கள், இனி என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கும் ஆசையல்லவா, அரும்பிற்று. அந்த அளவுக்கு, அவருடைய வார்த்தைகளிலே உரம் இருக்கிறது. அவருடைய அறிவும் ஆற்றலும் நல்ல உரமாக இக்நாட்டு ஏழைக் கிராமமக்களுக்குப் பயன்படவேண்டும். ஆகவேதான், அவர் பழைய கூடாரத்தை விட்டு, வெளியேற வேண்டும் என்று குறிப்பிட்டேன் காங்கிரசிலேயே இருந்து கொண்டு இந்த நல்ல காரியத்தைச் செய்யலாமே என்று கருதினால், காங்கிரசிலே இருந்து கொண்டு அதற்கு வரும் கெட்ட பெயரை மறைக்கத் தான் இப்புது முயற்சி என்றே எண்ணத்தோன்றும் என் போன்ற பலருக்கு. ஆகவே, இந்த அருமையான முயற்சியை அவரே தாங்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்!

நமது விவசாயத் துறையிலே. நிலத்திலே நேரடியாக உழுபவர்கள், மேற்பார்வை பார்ப்பவர்கள், கண்ணெடுத்தும் பாராது களத்திலே நெல் கண்டு முதலாயிற்றாே என்று கணக்குக் கேட்போர், காரைவிட்டு இறங்காது நகர்ப்புறத்திலே, கிராமம்-அங்கே எனக்கு என்று கூறிக்கொண்டுலவும் நாகரீகச் சீமான் எனப் பலவகையினர் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையிலே உள்ள வித்தியாசம் — மிகமிகச் கேடு தருவதாகும்!

என்னுடைய கருத்து உண்மையான விவசாயிகளிடமே. யாா் நிலத்தில் இறங்கி பாடுபடுகிறாா்களாே அவர்களிடமே, நிலம் இருக்கவேண்டுமென்பதுதான். இந்த என் கருத்தை முன்னாள் முதலமைச்சருடைய சிந்தனைக்கு வைக்கின்றேன்!

ஒரே இடத்தில் நிலம் அதிகம் குவிந்து கிடப்பதும், பலாிடத்தில் சிறுசிறு நிலங்கள் இருப்பதும், கூடாது. அதனால் விவசாயம் முன்னேற்றம் ஏற்பட வழி இல்லை. அது மட்டுமின்றி, நவீன முறைகள் விவசாயத் துறையிலே புகுத்தப்படவேண்டும். இதற்கான முயற்சியிலே சா்க்காரே ஈடுபடவேண்டும் என்பது எனது விருப்பம். உழவு முறையில் சர்க்கார் பத்துக் கிராமங்களைத் தோ்ந்தெடுத்து அங்கே பரீட்சாா்த்தக் கூடங்களை ஏற்படுத்தவேண்டும். யாருக்கு உண்மையாவே விவசாயம் தொியுமாே அவா்கள் வசமே விவசாயக் கருவிகள் நிா்வகிக்கும் பாெறுப்பு அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் ஏழை கிராம மக்களும் விவசாயப் பாெருள்களைப் பெற்று நலம் பெற முடியும். இலாகத் தலைவா்கள் வசம் பாெறுப்பு இருப்பதால் நிலம் அதிகம் படைத்தோாின் தா்பாரே நீடிக்கும்! இதுபோன்ற பலன்களை விவசாயிகள் பெற வேண்டுமென்றால் அவா்களுக்குள்ளே நல்ல கட்டுப்பாடான சங்கங்கள் மிகமிக அவசியம்!

அப்படிக் கட்டுப்பாடோடு--கடமையுள்ளத்தோடு தங்கள் கோரிக்கைகளைப் பெற நல்ல கிளர்ச்சிகள் செய்தால், தப்பாக நினைத்து, தங்களை எதிர்ப்பதாக எண்ணி ஆட்சி நடத்துவோர் அடக்குமுறைப் பாதை சென்றால் அதைக் கண்டிக்கத் தவறக்கூடாது. குறிப்பாக, தஞ்சை மாவட்டத்திலே விவசாயிகள் சங்கம் அமைத்தனர். ஆனால் அதிலே பொதுவுடமைவாதிகள் புகுந்தனர். விளைவு என்ன ஆயிற்று? வயலிலே பிணம்! வாய்க்காலிலே இரத்தம்! போலீஸ் தர்பார்! பெண்களின் கூக்குரல்! அழுகுரல் — ஆபாசமான காட்டுமிராண்டித் தர்பார்! தலைதுாக்கி தாண்டவமாடிற்று!

இதில் யார் செய்தது சரி, எங்கு நியாயம் என்பதையல்ல நான் கூற விரும்புவது!

விவசாயிகள் மத்தியில், அவர்கள் வேதனை களையச் சொல்வது என்பது வெறும்பட்டாசு கொளுத்துவது போன்றதல்ல; தீப்பந்தம் தாங்கி வெடிமருந்து சாலைக்குள் நுழைவதுபோல ஆபத்து நிறைந்தது!

ஆகவேதான், தீப்பந்தம் அங்கே நெருங்குதல் கூடாது; அரசியல்வாதிகள் போகக் கூடாது, என்பதை நான் அவ்வளவு வலியுறுத்துகிறேன்!

இந்தப் பொல்லாத உலகிலே எவ்வளவு நல்லவரானாலும் மாசு, மரு கற்பிப்போர் இருக்கத்தான் செய்கின்றனர். இல்லை என்றால், முன்னாள் முதலமைச்சராகிய ஓமந்தார் ராமசாமி அவர்கள் மேல்சபையில் பேசியபோது, சர்க்காரின் போக்கு இப்படியே போய்க் கொண்டிருந்தால் போராட்டம் துவக்கும்படி நேரும் என்று வேதனையோடு கூற, இந்நாள் முதலமைச்சா் 'குமாரசாமி ராஜா' என்ன போராட்டம்? சத்தியாக்கிரகம் செய்வீர்களா என்று கிண்டல் தொனிக்க, வேடிக்கையா பேசுவாா். இந்த விபரத்தைப் பத்திரிகைகளில் கண்ட போது, இந்தப் பதில் எமது இதயத்தையெல்லாம் புண்படுத்திற்று. வேதனையாேடு பேசினார் முன்னாள் முதல்வா் என்றால், வேதனை பேசினாா் போக்கும் நிலைகொண்ட இந்நாள் முதல்வா் கேலியா செய்வது!

இந்த சம்பவம் ஆட்சி பீடம் அமர்ந்தாேர் எவ்வளவு துாரம் ஆதிக்கக்காரர்களாகி விட்டனர் என்பதையல்லவா காட்டுகிறது. இப்படி ஆதிக்கவெறி அதிகமாகுமேயானால் தடுத்து நிறுத்தாமல் விடக்கூடாது. அதற்குப்பலம் வேண்டும்; பலாத்காரமல்ல. நெஞ்சுறுதி வேண்டும், நேர்மைத்திறம் வேண்டும்.

விவசாயி சிந்தும் வியர்வை சொல்லமுடியாது. சர்க்கார் தரும் காெடுமை, சமுதாயம் காட்டும் பரிவற்ற தன்மை, வேதனையானது. காலையிலே கோழி கூவுமுன் எழும்பி, கோட்டான் கிளம்பியபின் வீடு திரும்புகிறான் விவசாயி, வழியிலே தேளோ நண்டோ, வயலிலே பாம்போ , பூச்சியோ எதுவும் அவனைத் தடுப்பதில்லை. அப்படி உழைத்துப் பொருள்களைக் குவிக்கிறான். அப்பொருள்களை வைத்தக் கொண்டு கள்ள மாா்க்கட் புாிகின்றனர் ஒரு சாரர். அவனைப் பராமாிக்கும் பொறுப்புக் கொண்ட பாராள்வோராே அவனைப் பதைபதைக்கச் செய்கின்றனர்!

உற்பத்தியாகும் பொருள்களின் புள்ளி விபரங்களைப் படிக்கும்போது எனது கவனமெல்லாம் இவ்வளவு உழைப்புச் சக்தியைத்தர எவ்வளவு கஷ்டநஷ்டமடைந்திருப்பா் விவசாயி மக்கள் என்றே எண்ணிக் கிடந்தேன் இவ்வளவு டன் என்று எளிதாகப் புள்ளி விபரம் தருகிறோம். ஆனால் அந்தப் புள்ளி விபரம் பெற, விவசாயிகள் சிந்தியவியர்வை, கொட்டிய இரத்தம்!

அப்படிப்பட்ட மக்கள் நிரம்பிய கிராமங்களிலே பாதை பழுது, பள்ளி கிடையாது. வைத்தியவசதியில்லை. இவை மாறவேண்டாமா? மாறி கிராமம் — நகரம் என்ற வித்தியாசமே அற்றுப் போகவேண்டும். இதை மனதில் கொள்ளாமல், கிராமசேவைக்கு கிளம்புவது, பயன் தராது!

நாகரீக வசதிகள் கிராமத்திற்கும் பரவ வேண்டும். நல்ல ஆஸ்பத்திாி ஒழுங்கான பள்ளிக்கூடம், நல்ல பாதை ஆகியவைகளைப் போடவேண்டுமேயாெழிய 'நந்தனார் கீர்த்தனை'யை பாடிக் காட்டினால் போதாது. அதிலும் இந்தக் காலத்து நந்தன் சிதம்பரம் திரும்ப மாட்டான். ஒருவேளை மாஸ்கோவுக்குப் புறப்பட்டாலும் புறப்படலாம்!

ரஷ்யாவிலே கிராமத்துக்கும் நகரத்துக்கும் வித்தியாசம் அதிகம் இராதாம். காரணம் அவ்வளவு வசதிகளும் அங்கே உண்டாம். நான் படித்ததாக ஒரு ஞாபகம், புரட்சிவீரர் லெனின் மரணப்படுக்கையில் கிடக்கிறார். அவரைச் சுற்றி அவரது தோழர்கள் சோகமாக நின்று கொண்டிருக்கிறார்கள். சோகமாக தாேழர்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்ட லெனின், ஒருவரை அழைத்து ஏன் இப்படி வருத்தப்படுகிறீர்கள், என்றாராம். அதற்கு அத்தோழர், நமது வழிகாட்டியாகிய நீங்களாே மரணப்படுக்கையில் கிடக்கிறீா்கள். இனி, யார் இருக்கிறார்கள் ரஷ்யாவைக் காப்பாற்ற..." என்று அழுத வண்ணம் கூறி னாராம். அதற்கு லெனின், 'கவலைப்படாதீர்கள். எனக்குப்பிறகு மின்சாரம் இருக்கிறது' என்றாராம்.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், மின்சார வசதி பூரணமாகக் கிடைத்து விட்டால் மக்கள் வாழ்வில் கவலை ஏற்படக் காரணமில்லை! ஆகவே, அது போல நமது நாடெங்கும் மின்சார வசதி பரவவேண்டும்; விஞ்ஞான அறிவு மூலம் அது பயன் படுத்தப்பட வேண்டும்!

விஞ்ஞான அறிவை நம்மவர் பயன் படுத்த வேண்டும் என்று கூறுகிற நேரத்தில் இன்னொன்றும் கூற விரும்புகிறேன். அது, நம்மவர் விஞ்ஞானத்தை மதிக்கப் பழகவேண்டும். கிராம வாசிகள் இன்னும் சாவடிப் பிசாசு, சத்திரத்துப் பேய் — பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்களே யொழிய, ஒலி பெருக்கி, கம்பியில்லாத் தந்தி, கப்பல், கடலுக்கடியில் செல்லும் கப்பல் ஆகியவை குறித்துச் சிந்திக்கவும் இல்லை!

இந்த விஞ்ஞான சாதனங்களைக் கண்டுபிடித்தோர் எத்தனை நாட்கள் இரவிலே துாங்காமல் புரண்டிருப்பர். எத்தனை காலம், தங்களுடைய அரும்பணி மூலம் இந்தச் சாதனங்களைக் காண கஷ்டநஷ்டப்பட்டிருப்பார். பட்ட வேதனை! துாங்காத இரவுகள்! தாங்கிய தொல்லைகள்! கொஞ்சமாகவா, இருந்திருக்கும்!

சாதாரணமாக இந்த ஒலிபெருக்கியைச் செய்தவர், நினைத்ததுமா செய்து முடித்திருக்க முடியும்! பல தடவைகள் முயற்சி தோல்வியில் முடிந்து, கடைசியில் ஒரு தடவை வெற்றி கண்டிருப்பாா்!

ஆனால், நமது மக்கள் அந்த விஞ்ஞானிகள் சிந்திய வியர்வையைப் பற்றி என்றாவது எண்ணியதுண்டா ?

ரயிலில் செல்கிறாேம், காரிலே போகிறோம், சைகிள் மின்சார விளக்கு — எல்லாவற்றையும் நாம் அனுபவிக்கிறாேம். இவையாவும் நாம் அனுபவிக்க ஏற்பட்டவை என்ற எண்ணத்தில், மாமியார் வீட்டு மருகனைப்போலத்தானே இருக்கிறோம்!

இவைகளைப்பற்றி, என்றாவது நாம் சிந்தித்தது உண்டா? நினைத்ததுண்டா?

இல்லையே! என்ன பிரயோசனம்? குத்து விளக்கு அளவில்தான் நாம் இருக்கிறாேமே யொழிய சாதாரண அரிக்கன் விளக்கு அளவுகூட நாம் முன்னேறவில்லையே! இங்குள்ள மின்சார விளக்கு திடீரென்று அணைந்து விட்டால் எவ்வளவு பதைக்கிறாேம். நமக்கு மட்டுமல்ல சங்கராச்சாரியார் இருக்கிறாரே, அவருக்குந்தான் ஏற்படுகிறது, பதைப்பு!

ஆனால், அதன் அருமை பெருமையை, தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்குத் தெரிந்து கொண்டிருக்கிறாேமா இல்லையே! அதுமட்டுமா, நவீன வசதிகளை நன்றாக அனுபவித்துக் கொண்டே அவைகளை இகழ்ந்தும் அல்லவா போகிறாேம்!

இது நல்லதா? விஞ்ஞானத்தை இகழ்ந்து பேசுவது மிக மிகத்தவறு. விஞ்ஞான மனப்பான்மையை இகழ்ந்தால், எப்படி அதன் மீது மதிப்புவரும், மக்களுக்கு?

விஞ்ஞானத்தால் அஞ்ஞானம் வளர்ந்து அணுகுண்டு வரைக்கும் வந்து அழிவு சக்தி பெருகி விட்டதாகச் சிலர் ஓலமிடுகின்றனர்—அதிலும் வேடிக்கை, யார் விஞ்ஞான வசதிகளை அதிகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களே போகின்றனர்! அப்படிக் கூறுவோரைக் கேட்கிறேன். இப்போது மட்டுந்தானா அழிவுக்கான கருவிகள் இருக்கின்றன? முன்பிருந்ததாகக் கூறப்படும் மோகனாஸ்திரம், அக்கினியாஸ்திரம், வருணாஸ்திரம் எல்லாம் அழிவுக்குத்தான் அப்போதும் பயன் பட்டதாகப் படிக்கிறாேமேயாெழிய, எங்கேயாவது எடுத்துக்காட்ட முடியுமா. 'மழையில்லாமல் மக்கள் அவதிப்பட, உடனே வருணஸ்திரம் விடப்பட்டது. மக்களுக்கு மழை நீர் கிடைத்தது' என்பதாக. ஆகையால், அழிவுக்குத்தான் அப்போதும் பயன் பட்டன!

ஆகவே, வெளிநாட்டு விஞ்ஞானிகளை அஞ்ஞானிகள் என்று துாற்றுவதால் நம்மையே நாம் கெடுத்துக் கொள்கிறோம். நன்மையும் தீமையும் எங்கும் எதிலும் உண்டு. ஆகவே உண்மையான விஞ்ஞானத்தின் மேன்மையை நாம் மதிக்க வேண்டும்!

விஞ்ஞானத்தால் நமது நேரமும் உழைப்பும் எவ்வளவாே மிச்சமாகிறது! பத்து ஆண்டுகளுக்கு முன் ராேடு போடுவதென்றால், ஒரு பெரிய கருங்கல் உருளையை பத்துப் பனிரெண்டுபோ், மாடுபாேல இழுப்பா், ஆனால் இப்பாேதாே சிறு மிஷின் — ஒரு உருளையல்ல! மூன்று உருளையை உருட்டுகிறது!

விஞ்ஞானத்தின் மூலம், குறைந்த உழைப்பு - அதிக பயன் (Minimum Labour Maximum Benefit) பெற்று வருகிறாேம், நாம். இது சாதாரண மானதல்ல!

எனவே விஞ்ஞானத்தால் நாம் பெறும் லாபமும் வசதியும் அதிகம். இந்த நேரத்தில் நீங்கள் ஒன்று உணரவேண்டும், விஞ்ஞானிகள் எவரும் சுயநலக்காரா்கள் அல்ல தான் கண்டுபிடித்த உண்மைகளை உலகம் பூராவுக்கும், பொதுவாக்கிவிட்டே போயிருக்கிறார்கள். அவர்களின் தியாகத்துக்கும் நம்முடைய நிலைமைக்கும் ஒப்பிட்டுப் பாருங்கள்!

தலைவலிக்கு 'தைலம்' தருவான், நமது நாட்டுப் புற வைத்தியன். 'என்ன தைலம்? இதை எப்படி செய்தீர்கள்?' என்று கேட்டுப் பாருங்கள் — விபரம் எதையும் சொல்ல மாட்டான் உங்களுக்கு!

அதேபோல, ஒரு பச்சிலையைப் பறித்து வந்து தருவான். 'இதன் பெயர் என்ன? - கேளுங்கள்! சொல்லமாட்டான். 'பச்சிலையின் பெயரைச் சொன்னால் பலிக்காது—வியாதி போகாது' என்று விவரிப்பான்.

மேல்நாட்டு விஞ்ஞானிகள் இப்படிப்பட்டவர்களா?

இதோ இருக்கும் ஒலி பெருக்கி ஒன்றே ஒன்று மட்டும் தயார் செய்யப்பட்டு அது நமது நாட்டுச் சுயநலக்காரன் ஒருவனிடம் சிக்கியிருந்தால் இது என்ன தெரியுமா? இதுதான் 'சிவபெருமான்' அருள் என்பான். 'இந்தா, விபூதியை இட்டுக் கொள்' என்றழைப்பான். கைலாயத்திலிருந்து பேசச் செய்கிறேன்' என்பான். 'கேட்கிறதா சப்தம்'—அவன் கேட்பான். 'சப்தம் கேட்கவில்லையா, நீ பாபி' என்பான். இப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி, அந்த எத்தன், எவ்வளவு கோடி சம்பாதித்திருப்பான் இதற்குள்?

இப்படிப்பட்டவர்களா விஞ்ஞானிகள். இல்லையே! தான் கண்டதை உலகுக்கே அல்லவா தந்திருக்கிறாா்கள்!

விஞ்ஞானத்தாலே, செல்வம் கொழிக்கவும், அவன் கண்டு பிடித்ததைப் பலர் காசாக்கவும் செய்வான் விஞ்ஞானி, ஆனால் அவன் வாழ்வு, செல்வத்தைக் கண்டிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? வேதனை — ஏழ்மை — கையில் காசில்லாத கொடுமையால் கஷ்டப்பட்டிருக்காமல், சுகத்தாேடேயா இந்த ஆராய்ச்சிகளை நடத்தியிருப்பான் என்று நினைக்கறீர்கள். இந்த அருமையை, அத்தகைய விஞ்ஞானிகளின் பெருமையை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்!

நமது நாட்டு விவசாயிகளுக்கும் மேல்நாடுகளிலே உள்ள விவசாயிகளுக்கும் உடையிலே, உருவத்திலே மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம்.

அஞ்சி அஞ்சிச் சாவார் அவர் அஞ்சாத பொருளில்லை — என்று கூறும் அளவில்தனே நமது விவசாய மக்கள் இருக்கின்றாா்கள். அவா்கள் வாழ்க்கை உயர்வது எப்போது! போதிய உணவு இல்லை. வசதியில்லை. வாழ்க்கையே அவா்களுக்காோ் பெருந்தொல்லை. எனினும் மேல் நாட்டு விவசாயிகளைவிட நமது மக்கள், சிறந்த உழைப்பாளிகளாத்தானே இருக்கிறார்கள். இருந்தும், அவர்கள் வாழ்வு, ஏன் இப்படிக் கிடக்கிவேண்டும்? ஆகவே அவர்களின் வரண்ட தலைக்குக் கொஞ்சம் எண்ணெய்! பஞ்சடைந்த அவர்கள் கண்களுக்கு ஒளி! மனைவி மானமுடன் கட்டிக்காெள்ளத் துணி! அவனுக்கு நாகரீகமான ஆடை! நாலு எழுத்தைக் கற்றுக் காெள்ளக் கூடிய வசதி அவன் குழந்தைகளுக்கு! இதையாவது ஏன், நாம் அவனுக்கு கிடைக்கும்படி பாடுபடக் கூடாது. அவனிடமிருந்து நாம் பெறும் லாபத்திலே ஏதாவது சிறிது, காெஞ்ச நஞ்சமாவது, அவன் வாழ்க்கைக்காகச் செலவிட்டால் என்ன?

இதையெல்லாம் அவா்களுக்கு நாம் செய்து தர வேண்டாமா? சமுதாயமும், கிராமவாசிகளுக்கு துரோகம் செய்தால், அவன் வாழ்வை நிமிா்ப்பதுதான் யாா்? இதை நாங்களே செய்வோம் — என்று கூறவில்லை நான். யார் செய்தாலும், இவைகளைப் போக்க வேண்டும், என்று எண்ணாமலிருக்க முடியுமா? அப்படி எண்ணி முன் வருவதுதான் யார்?

ஆகவேதான் நாட்டை ஆண்ட நண்பர் ஓமந்தூரார் அவர்களை இந்த வாழ்விழந்த வாயில்லா பூச்சிகளின் சார்பில், போராடப் புறப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர், முதலமைச்சராக இருந்தபோது, கருத்து வேற்றுமை காரணமாக, நாங்கள் கஷ்டப்பட நேர்ந்து.ண்டு அப்போதெல்லாம் 'இவ்வளவு நல்லவரா இப்படிச் செய்கிறார்' என்று கூறிக் கொண்டோமே தவிர, 'அவர்தானே —அப்படித்தான் செய்வார் என்று நாங்கள் கூறியதில்லை. சமூக நன்மைக்காக, அறநிலைப்பாது காப்புச் சட்டம் போன்றவைகளை அவர்கொண்டு வந்து நிறைவேற்றியபோதும் , ஜமீன்தாரி முறை ஒழிப்பு மசோதா கொண்டுவந்த போதும் எங்களது— இயக்கம் அவரை ஆதரித்து நின்றது!—'தேவை' என்று நாங்கள், குரல் எழுப்பினாேம்.

ஓமந்தூரார் எதிர்கட்சியினராலேயே உத்தமர் என்று கூறப்படுமளவு , தமது நேர்மையால் நல்ல பெயர் எடுத்தவர் !

எதிர்க்கட்சிகளின் அடிமூச்சுக் குரலைப் பரிசாக பெற்றவர் அவர்!

'ஓமந்தூரார் காலத்திலுமா....?' என்று, எங்கள் —மீது சட்டம் பாய்ந்த போதெல்லாம் அடி மூச்சுக்குரலோடு கேட்டோமே தவிர, 'ஓமந்தூராரா — அவர் அப்படித்தான் செய்வார். அவர் ஆட்சி அப்படித் தான் இருக்கும்' என்று ஒருதடவைகூட கூறியறியோம் !

எந்த அரசியல் தலைவரும் பிறகட்சியின் , அன்பையும் பாராட்டுதலையும் பெறுவதென்பது — சாத்தியமில்லாத காரியம்.

ஆனால் ஓமந்தூரார் அந்தப் பரிசைப் பெற்றார்! பலவீனர்கள் பாராளுவோராக அமர்திருக்கும் இந்த நேரத்தில், அவர்களுடைய போக்கைச் சுட்டிக் காட்டி, ஏழை கிராம மக்களுக்குப் பாடுபட நாங்கள் — எப்போதும் தயார் என்பதை அவருக்குக் கூறிக் கொள்வதோடு, இந்த நற்சேவைக்காக அவரது பணி பயன்பட வேண்டும் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்

வணக்கம்.