உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

113


"சொல்ல மாட்டாயா?" என்று கேட்டான் அவன் துடிப்போடு.

"உனக்கேன் இந்தக் கேள்வியெல்லாம்?" என்று கூறிவிட்டுத் தாமரை விர்ரென்று அந்த இடத்தைவிட்டுப் போய் விட்டாள்.

சரியான பதில் கிடைக்காத செழியன், அவள் போவதைப் பார்த்துக் கொண்டே திகைத்து நின்றான். மயக்கமுற்று வீழ்ந்த கைதிகள் ஒவ்வொருவராக இழுத்துச் செல்லப்பட்டு மரக்கிடங்குகளில் அடைக்கப்பட்டனர். கடைசியாகச் செழியனையும் இழுத்துச் சென்று, 'சாவூருக்குப் போகும் வழி' என எழுதப்பட்ட சிறைக்குள் தள்ளி வெளியே காவலைப் பலமாக ஆக்கினர்.

செழியனிடம் பதில் கூறிவிட்டு அகன்ற தாமரை தொலைவில் நின்று, அவன் இழுத்துச் செல்லப்படுவதைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைப் பூட்டுகிற வரையில் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டுப் பிறகு மாளிகை வெளிப்புறத்தில் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவள் சிந்தனைக் கூடத்திற்கு முத்து வருகை தந்துவிட்டான். முத்துவை வீட்டுக்கு அழைத்துவர அண்ணனின் சம்மதம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்குமென்று அவள் எதிர்பார்க்க வில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் உடனடியாக முத்துவைச் சந்தித்து அழைத்துவரத் திட்டம் வகுக்க ஆரம்பித்தாள்.

தாமரை வந்து தன்னை அழைத்துப் போகும் வரையில் அருவிக்கரையிலேயே காத்திருப்பது என்று முடிவு செய்து கொண்டு இரவு முழுவதும் அங்கேயே உட்கார்ந்து கிடந்தாள் முத்துநகை. நட்சத்திரங்களைக் கூட வெளியே காட்டாமல் வானம் கறுப்புத் திரையிட்டிருந்தது. இடையிடையே சளி பிடித்தவன் இருமுவதுபோல இடியொலி வேறு! உலைக்கூடத்தில் எழுகின்ற நெருப்புக் கீற்றுப் போல மின்னல் ஒளியினால் இயற்கை அவளது உள்ளத்தைப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.

புலவர் காரிக்கண்ணனார் அவள் எதிரே வந்து நின்று 'உன்னைப் பிரிந்து நான் என்ன பாடுபடுகிறேனம்மா-ஏன் மகளே இப்படி என்னைச் சித்ரவதை செய்கிறாய்?' -என்று கண்ணீர் விடுவதுபோல் தோன்றும்! உடனே அதற்குப் பதிலும் பிறக்கும் அவள் நெஞ்சத்தில்.

"தாய் நாட்டைக் காட்டிக் கொடுப்பது தந்தையாயிருந்தால் என்ன? யாராய் இருந்தால் என்ன? அவர்களை எதிர்த்து நிற்பதே உண்மையான நாட்டுப்பற்றுக்கொண்டவர்களின் கடமை!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.