உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

கலைஞர் மு. கருணாநிதி


யவனக் கிழவன் வேடத்திலே - இருங்கோவேள் தன் தந்தையாருடன் நட்பு வைத்திருப்பதாக முடிவுகட்டி, வீட்டைவிட்டு வெளியேறிய அந்தப் பாவை, அதே இருங்கோவேளிடம் தன்னையறியாமல் தன் மனத்தைப் பறிகொடுத்துவிட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள் என்பது வேடிக்கைதானே!

அவள் செய்து முடிக்க வேண்டிய கடமை உணர்வு வேறு அவளைத் துரத்திக்கொண்டே இருந்தது; பரிதாபத்துக்குரிய தாமரையோ அவளை ஆண் என்று நம்பிக் காதலுக்கு அடிமையாகி விட்டேன் என்று காலில் விழுகிறாள் - ஒன்றையொன்று முந்திக்கொண்டு சுழன்றடிக்கும் நினைவுச் சூறாவளியில் கண்களை மெல்ல மூடிக்கொண்டு மரத்தில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள் அந்தப் பூங்கொடி, பயமுறுத்திக் கொண்டிருக்கும் இடியும் மின்னலும் மரக்கிளையில் அமர்ந்திருந்த ஒரு சில பறவைகளின் அமைதியைக் குலைத்தன. அவைகள் குரலெழுப்பியவாறு, கிளைகளில் அங்குமிங்கும் நடைபோட்ட வண்ணமிருந்தன. முத்துநகை, பறவை களின் ஒலியைக் கூர்ந்து கவனித்தாள். அவளும் ஏதாவது வாய்விட்டுப் பேச வேண்டும் போல் தோன்றியது. ஊமைபோல் வாய் மூடிக் கிடப்பது அவளுக்கு வேதனையாக இருந்தது.வீட்டிலிருந்தால் புலவருடன் ஏதாவது உரையாடிக் கொண்டிருப்பாள். அவளது கேள்விகளுக்குப் பதில் கூறுவதென்றால் புலவருக்கும் தனி இன்பம்! அவர் எழுதுகிற பாட்டு ஒவ்வொன்றைப் பற்றியும் அவள் எழுப்புகிற ஐய வினாக்களும் அதற்குப் புலவர் தரும் விளக்கமும் நிறைந்து அந்தவீடே ஒரு தமிழ்ப் பூங்காவாகக் காட்சியளிக்கும். அப்படிப்பட்டவள் வாயை மூடிக்கொண்டு கிடப்பதென்றால்...?

அவள் ஆவலை அதிகப்படுத்தும் பறவைகளின் ஒலி! அந்தப் பறவைகளுக்கு பதில் கூறுவதுபோல் அவைகளைப் போலவே கத்தினாள். பறவைகளைப் போலக் குரலை மாற்றிக் கத்த முடிகிறது என்பதை உணர்ந்து பெருமகிழ்ச்சி அடைந்தாள்! வகை வகையான பறவைகளின் ஒலிகளை நன்கு கவனித்து அவைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு கத்தினாள். அவள் கத்துவதைக் கேட்டுத் தூங்கிக் கொண்டிருந்த பறவைகளும் விழித்துக் கொண்டு கத்த ஆரம்பித்தன. அவளுக்கு அது ஒரே வேடிக்கையாக இருந்தது. இரவுப் பொழுதை இப்படியே கழிக்கலாம் என்று முடிவு கட்டிக் கொண்டாள்.

இந்தச் சத்தத்தைக் கேட்டு குதிரை வேறு கனைத்திடத் தொடங்கிற்று. அருகே சென்று அதைத் தட்டிக் கொடுத்து விட்டு மறுபடியும் மரத்தடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். கொஞ்சும் கிளியின் அச்சக்குரல்! அதே போல் அவளும் ஒலித்தாள். கோட்டானின் வறட்டுக் குரல்? அதிலும் ஜெயித்தாள். வில்லில் இருந்து கிளம்பும் அம்பு எழுப்பும் ஒலிபோலக்