உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

115


கருடன் எழுப்பும் 'ஙொய்' என்ற ஒலி! அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றாள். அவளது சிந்தனை பலமாக வேலை செய்யத் தொடங்கிற்று. சற்று நேரம் மெளனம்; குரலை எப்படி எப்படியோ மாற்றி ஒலித்துப் பார்த்தாள். பறவைகளுடன் நடந்த போட்டி நின்று விட்டது.

ஆண் குரலில் பேசிப் பழக வேண்டுமென்ற துடிப்பு அதிகமாயிற்று. தாமரையுடன் சென்றால் அங்கும் எழுதி எழுதிக் காட்டிக் கொண்டிருக்க முடியாது என்ற எண்ணம் மேலோங்கியது. பறவைகள்போல் கத்த முடிந்த பிறகு ஆண்களைப்போல் பேசப் பழகிக்கொள்ள முடியாதா என்ன? துணிவு பிறந்தது. பேச ஆரம்பித்தாள். எடுத்த எடுப்பில் வெற்றி கிட்டவில்லை. ஆனாலும் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை உதயமாகியது. தன் தந்தையார் எழுதிய கவிதைகள் பலவற்றை மனப்பாடம் செய்து வைத்திருந்தாள். அவைகளையெல்லாம் ஆண் குரலில் முழக்கமிடத் தொடங்கினாள். இறுதியில் வெற்றிதான்!

இப்போது அவளால் ஆணைப்போலப் பேசமுடியும். ஆனால் கொஞ்சம் தொண்டை வலிக்கிறது. அதற்காக என்ன செய்வது? கடமையை நிறைவேற்றும் பொறுப்பைத் - தானே அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பியிருக்கிறாளே! திடீரென்று முத்துநகைக்கு ஒரு சந்தேகம். இயற்கையான பெண்குரல் இருக்கிறதா இல்லையா என்று! சொந்தக் குரலில் பேசிப் பார்த்தாள். என்ன பேசுவது? - என்று ஒரு கணம் திகைப்பு; பிறகு பேசினாள்.

"உங்களை அந்தப் பாழ்மண்டபத்தில் பார்த்ததுமே பறிகொடுத்து விட்டேன் என் உள்ளத்தை!"

பேசி முடித்ததும் தான் புரிந்தது, என்ன பேசினாள் என்று ! சொந்தக் குரல் இருக்கிறதா என்ற சோதனையில் புகுந்தவள், காதல் சோலையில் ஏன் நுழைந்தாள்? அப்படியானால் அவள் அந்த விறகு வெட்டியைக் காதலிக்கிறாளா?

அவளை நினைத்து அவளே வெட்கப்பட்டுக் கொண்டாள். அவள் தோள்மீது ஒரு கை பட்டதுபோன்ற உணர்ச்சி! அந்த உணர்வு கண்டு அவள் திடுக்கிட்டெழவில்லை. அப்படியே இருந்தாள். கை, அவள் தோளை அழுத்திப் பிடிப்பதுபோல் இருந்தது. அவளோ தோளை விடுவித்துக் கொள்ள முயலவில்லை. மாறாக, கையோடு பின்னுக்குச் சாய்ந்தாள். என்னவோ செய்தது அவளுக்கு. பலமான கரத்தின் அணைப்பில் இருப்பது போன்ற மயக்கம். கண்களை இலேசாக மூடிக் கொண்டு அந்த உணர்வைச் சுவைத்தாள். பிறகு அவள் கரம் அசைந்து தோளின் பக்கம் சென்றது. தன் தோளைப் பிடித்திருக்கும் முரட்டுக் கரத்தை விலக்குவது போல் தடவி ரசிக்க அவள் மென்கரம் ஊர்ந்தது. தோளின் பக்கம் உயர்ந்தது.