உள்ளடக்கத்துக்குச் செல்

அரசியர் மூவர்/நாடக மயில்

விக்கிமூலம் இலிருந்து



3. நாடக மயில்

ம்பநாடன் தன் காப்பியத்தில் இரண்டு பெண்களை 'மயில்' என்று கூறுகிறான். இவ்வாறு கூறுவதால் குழப்பம் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு மயிலுக்கும் ஓர் அடைமொழி தருகிறான். ஒருத்தியை 'நாடக மயில் 'என்றும், மற்றொருத்தியை 'மலைக்குல மயில்' என்றும் பேசுகிறான். மலைக்குல மயில் என்று அவன் பேசு வது வாலியின் மனைவியாகிய தாரையை ஆகும். இவ் அடைமொழி பொருத்தமானதேயாகும். கிட்கிந்தை என்பதே மலைப்பிரதேசமாகும். எனவே மலைக்குல மயில் என்று கூறுவதில் உள்ள பொருத்தத்தைக் காணலாம். நாடக மயில் என்று அவன் குறிப்பிடுவது கைகேயியை ஆகும். மயில் ஆடுவது இயல்பு. 'தண்டலை மயில்கள் ஆட' என்று கம்பனே பேசுகிறான். சங்கப் பாட்டிலும் ஆடுகள விறலியின் தோன்றும் என்று மயிலின் ஆட்டம் பேசப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய ஞானசம்பந்தரும் திருக்கேதாரப் பதிகத்தில் 'வண்டு பாட மயில் ஆட' என்று பாடுகிறார். நாட்டியமாடுவது மயிலுக்கு இயல்பாதலால் ஆடு மயில் என்றோ நாட்டியமயில் என்றோ கூறியிருந்தால் அதில் புதுமை ஒன்றுமில்லை. அவ்வாறில்லாமல் நாடக மயில் என்ற அடை கொண்ட பிரயோகம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. நாடகம் நடிப்பவர்கள் யாராய் இருப்பினும் தாம் யார் என்பதை மறைத்துக் கொண்டு எந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு நடிக்கப் போகிறார்களோ அந்தப் பாத்திரத்திற்குரிய வேடத்தைப் புனைந்து நடிப்பது இயற்கை. கம்யநாடன் ஒரு பாத்திரத்தை முக்கிய மான இடத்தில் நாடக மயில் என்று குறிப்பிடுவானேயானால் அதில் ஆழ்ந்த பொருட்சிறப்பு இருக்க வேண்டும்.

மயில் என்று உருவகிக்கப்பட்ட பாத்திரம் கேகயன் மடந்தை ஆவாள். உருவகத்திற்குக் கொடுக்கப்பட்ட அடை, பொருளுக்கும் சென்று அடங்கும். மயில் தன்னுடைய இயல்பான மென்மை, சாயல், அழகு ஆகியவற்றை மறைத்துக்கொண்டு நாடகத்தில் நடிப்பதற்காக ஏதோ ஒரு வேடத்தைப் புனைந்துகொண்டு நடிக்கத் தொடங்கி விட்டது என்ற பொருளைப் பெற வைக்கிறான். எனவே எந்தப்பாத்திரத்தை நாடக மயில் என்று உருவகித்தானோ அந்தப் பாத்திரம் தன் சுயரூபத்தை மறைத்துக் கொண்டு ஏதோ ஒரு பாத்திரத்தின் வேடத்தை ஏற்றுக்கொண்டு நடிக்கத் தொடங்கிவிட்டது. இப்பொழுது அந்தப் பாடலை விரிவாகக் காணலாம்.

மந்தரை என்ற கூனி கைகேயியின் மனத்தை பேதலிக்கச் செய்து கணவனிடம் இரண்டுவரங்களைப் பெறுமாறு துர்ப்போதனை செய்து விட்டுப் போய்விட்டாள். அவள் போன பிறகு நீண்ட நேரம் கழித்துத் தசரதன் கைகேயிடம் வருகின்றான். அவன் வருவதற்குச்சற்று முன்னர் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கைகேயி தன் அணிகலன்களை எல்லாம் களைந்துவிட்டு நெற்றிப்பொட்டையும் அழித்து விட்டுக் கூந்தலை அவிழ்த்து விரித்தபடி தரையில் கிடக்கிறாள். இக்காட்சியைக் கம்பன் வருணிக்கும் முறை வருமாறு:

. . . நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன
'கவ்வை கூர்தரச் சனகியாம்கடி கமழ்கமலத்து
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்து அம்மடந்தை
தவ்வை ஆம்என, கிடந்தனள், கேகயன் தனையை. (1494)

இப்பாடலின் முதலடியைச் சற்றுச் சிந்திக்க வேண்டும். நல்வி என்றால் பெண் மான் என்று பொருளாகும். தலைவிரி கோலமாகக் கீழே கிடக்கும் கைகேயியை உருவகம் செய்கிறான் கவிஞன். ஒரு பெண் மான் கீழே விழுந்து கிடப்பது போலவும் நாடகத்திற்குரிய வேடமணிந்த மயில் உறங்குவது போலவும் கிடந்தாள் என்று பேசுகிறான். கவிஞன். கைகேயியை நவ்வி (பெண் மான்) என்று உருவகிப்பதும் சிந்தனையைத் தூண்டுவதாகும். மான்கள் இயல்பாகவே மருண்டபார்வையும் குறிக்கோள் அற்ற முறையில் இங்கும் அங்கும் ஒடித்திரியும் இயல்பும் உடையவனவாம். மருண்ட பார்வை எதனால் வருகிறது? எங்கே ஆபத்து மறைந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் காரணமாக பார்வையில் மருட்சி ஏற்படுகிறது. இன்னது செய்வது என்ற முடிவிற்கு உறுதியுடன் வரமுடியாமையால் இங்கும் அங்குமாக ஓடுகின்ற இயல்பைப்பெற்றுள்ளது. உருவகிக்கப்பட்ட மானுக்கு உள்ள இந்த இரண்டு இயல்புகளையும் கைகேயிக்கு ஏற்றிப் பார்க்கலாம். இதுவரை கைகேயியின் வாழ்க்கை அமைதியான நீரோட்டம் போல் சென்று கொண்டிருந்தது. மன்னர் மன்னனாகிய தசரதன் தன் அருமைக்கணவன். புவிக்கெலாம் வேதமே என்று சொல்லத்தக்க இராகவன் மைந்தன். இதனால் ஏற்பட்ட மன அமைதியில் அவள் வாழ்க்கையில் மருட்சிக்கு இடமேயில்லை. ஆனால் இப்பொழுது ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கணவன் எண்ணத்திற்கு மாறுபட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அருமை மைந்தன் இராமனைக் காட்டிற்கு அனுப்ப வேண்டிய இக்கட்டான நிலை. இவை இரண்டையும் செய்வது சரியா தவறா என்ற எண்ணம் மனப்போராட்டமாக அமைந்து விடுகிறது. எந்த முடிவிற்கும் வரமுடியாத போராட்டமாகும் இது. உறங்கும் போதுங் கூட கடைக்கண்ணில் அருள் வழியும் அதே கண்களில் இப்பொழுது மருட்சி தோன்றக் காரணமென்ன? தான் மேற்கொண்ட முடிவினால் யாருக்கு என்ன விளையுமோ என்ற அச்சங்காரணமாகக் கண்களில் மருட்சி தோன்றலாயிற்று. அவளுடைய மனப்போராட்டத்தையும் கண்ணிலுள்ள மருட்சியையும் விரிவாக எடுத்துக் கூறாமல் அவள் வீழ்ந்து கிடப்பதை நவ்வி வீழ்ந்தென. என்ற ஒரு சொல் மூலம் கவிஞன் பெறவைத்து விடுகிறான்.

மனப்போராட்டம், கண்ணில் மருட்சி என்ற இவ்விரண்டும் கூனி அவளைவிட்டுப் போனதிலிருந்து தசரதன் வருவதற்குச்சிறிது நேரம் முன்னர் வரை அவளை ஆட்கொண்டிருந்தது. இதன் முடிவில் கைகேயி ஒரு முடிவிற்கு வந்துவிடுகிறாள். செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் நீங்கிச் செய்தேயாக வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறாள். இங்கே ஒரு பிரச்சனை. அவளுடைய உடல்வாகு, மென்மைத்தன்மை, அருள் நிரம்பிய மனம் ஆகிய அனைத்தும் அவளுடைய இயல்பான தன்மைகளாகும். அவற்றின் எதிராக அவள் முடிவை நிறைவேற்ற வேண்டுமானால் வலிமை பொருந்திய உடலும், மென்மைக்கு மாறுபட்ட கடினமான உறுதிப்பாடும், அருளை மறந்து கருமமே கண்ணாகி இருக்கும் கரந்த உள்ளமும் வேண்டும். தசரதனிடம் வரம் பெற்றுப் பரதனை அரசனாக்கி இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால், அது உடல் திண்மையும் உறுதி கொண்ட கண்ணும் அருளை மறைத்து வன்கண்மையோடு நடந்து கொள்ளும் ஒரு பாத்திரமாக அவள் மாறவேண்டும். மயில் போன்ற சாயலையுடைய கைகேயி இந்த வன்கண்மையுடைய பாத்திரத்தை ஏற்று நடிக்கவேண்டும். அதனைத்தான் கவிஞன் நாடக மயில் என்ற சொல்லால் குறிப்பிடுகிறான். நடைபெறப் போகும் நாடகத்தில் மயில் போன்ற சாயலையுடைய கைகேயி வன்கண்மை நிறைந்த ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு நடிக்க முடிவு செய்து விட்டாள்.

அப்படியானால் நான்காம் அடியில் தவ்வையாம் எனக்கிடந்தனள் கேகயன் தனையை என்று கூறுவதன் நோக்கம் என்ன? நவ்வி என்றும் மயில் என்றும் உருவகித்த கவிஞன் நான்காவது அடியில் மூதேவி என்று அவளைக் குறிப்பதன் நோக்கமென்ன? அவள் வடிவத்தை முதலடியில் வருணித்து விட்டு அவள் மனக்கருத்தை நினைந்தவுடன் வெறுப்பு மிகுந்தவனாய்த்தவ்வை என்று ஏசுகிறான் என்று இந்த ஆசிரியனே ஒரு காலத்தில் நினைத்த துண்டு. அவ்வாறே அன்று எழுதப்பெற்ற கேகயன் மடந்தை என்ற முன்னுள்ள கட்டுரையில் எழுதியும் உள்ளான். ஆனால், இன்று கம்பன் பாடல்களில் மரபைத் தவிர்த்துப் புதிய நோக்கில் பார்வையைச், செலுத்தியதால் இவ்வாறு புதுப்பொருள் காண முடிகின்றது. நான்கா வது அடியிலுள்ள மூதேவி என்ற சொல் நிச்சயமாகக் கைகேயியைக் குறிக்கவில்லை. அவள் மேற்கொண்ட வேடத்தை நினைக்கின்றான் கவிஞன். அந்த வேடத்தின் பால் கொண்ட வெறுப்புக் காரணமாக மூதேவி என்று பேசுகிறான். மூதேவி என்று நேரடியாகக் கூறாமல் மூதேவி கிடந்ததுபோல என்று கூறுகிறான். முதலடியிலிருந்த நவ்வியும் மயிலும், வேடத்தை மேற்கோண்ட வேடதாரியைக் குறிக்கும். நான்காவது அடியிலுள்ள தவ்வை, வேடதாரி மேற்கொண்ட வேடத்தைக் குறிக்கும்.

இவ்வாறு பொருள் செய்தற்கு இப்பாடல் இடந்தருமா? என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றலாம். வரங்கள் கேட்டு முடிந்த பின்னர் எந்த நிலையிலும் தன் மனத்தை அவள் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்ற பகுதியை விளக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கைகேயி தனக்கு இயல்பாக உள்ள அருளைத் துறந்து விட்டாள் என்று கூற வருகிறான் கவிஞன். துறப்பதற்குக் காரணம் கூற வந்தவன் அரக்கர் பாவம், அல்லவர் இயற்றிய அறம் என்ற இரண்டுமே அவள் இவ்வேடத்தை மேற்கொள்ளக் காரணமாயின என்று கூறுகிறான். வேடம் போட்டுக்கொண்ட பிறகு அவள் பேசிய சொற்களுக்கு அவளைக் குறை சொல்லிப்பயனில்லை. வேடமணிந்தவர் நாடகத்தில் பேசும் சொற்களுக்கு அவர் பொறுப்பல்லர். இதை மனத்தில் கொண்ட கவிஞன் இரண்டு அற்புதமான சொற்களை இங்கே பெய்கின்றான். ஒருத்தி நல்லருளைத் துறந்துவிட்டாள் என்று கூறிய பிறகு அவள் பேசிய சொற்களைத் துரமொழி என்று கூறுவது எவ்வாறு? ஆனால் கவிஞன் அவ்வாறு தானே கூறுகிறான். நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான் என்பவை, கவிஞன் கூற்றாகும். எனவே நல்லருள் துறந்தாள் என்று அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்று நம்மை எச்சரிப்பவன் போலக் கவிஞன் பேக்கிறான்.

இரண்டு வரங்கள் வேண்டும் என்று கேட்டதும் அவற்றுள் ஒன்றால் பரதனுக்கு நாட்டைப் பெற்றதும், மற்றொன்றால் சீதைகேள் வனை வனமாளச் செலுத்தியதும், தசரத்ன் எவ்வளவு வேண்டியும் விட்டுக் கொடுக்காமல் இருந்ததும் எவ்வாறு துரமொழியாகும். சொல்லளவில் இவை கொடுஞ்சொற்கள்தான். அவற்றால் விளைந்த பயன் இரண்டாகும். ஒரு பயன் தசரதனைப் பொய்யற்றவனாக ஆக்கிற்று. மற்றது காப்பியம் நடைபெற ஒரு வழியைத் தந்தது. இவ்விரண்டு நற்பயன்களையும் தீமொழிகள் நிச்சயமாகத் தரவியலாதுஎனவேதான் அவன் சொற்களைப் படிப்பவர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று எச்சரிப்பவன் போல துமொழி மடமான் என்று பேசுகிறான்.

'கன்யா கல்க வரலாற்றைக் கம்பன் வெளிப்படையாகப் பேசவில்லை என்பது உண்மைதான். மூலநூலாகிய வால்மீகத்தில் இச்செய்தியை இராமன் வனத்திற்கு வ்ந்த் பரதனிடம் விரிவாகப் பேசுவதாக அமைந்துள்ளது. அதை விளக்கமாகக் கூறிவிட்டால் கைகேயியின் மேலுள்ள பழிநீங்கும். ஆனால் அவள் கணவனாகிய தசரதன் மேல் வாக்கை மறைத்துச் சூழ்ச்சி செய்து இராமனுக்குப் பட்டம் தர முயன்றவன் என்ற பழி நீங்காது நிலைத்துவிடும். இதனாலேயே கைகேயி மேற்கொண்ட நாடகப் பாத்திரச் செயல் களை கம்பன் விரிவாகப் பேசுகிறான்.

கைகேயியின் செயல்கள் நாம் நினைப்பது போலக் கொடிய செயல்கள் அல்ல என்றும் கணவனைக் காப்பாற்ற வேண்டி அவள் போட்டுக்கொண்ட வேடமும் அவ்வேடத்திற்கேற்ற சொற்களுமே யாகும் என்றும் இதுவரை கூறிவந்தோம். கம்பன் 'துமொழி மடமான் என்றும் நவ்வி என்றும் நாட்க மயில் என்றும் அவளைக் குறிப்பதைக் கண்டோம். கன்யா சுல்கக் கதையை மறைப்பதன் மூலம் இரண்டு பெரிய காரியங்களைக் கவிஞன் சாதித்து விடுகிறான். ஒன்று தசரதனை வாய்மையும் மரபும் காத்த மன்னவனாக்கி விடுகிறான். இரண்டாவது கொடுமையானவள், தீயவள், கணவனுக்கும் மகனுக்கும் கேடு சூழ்ந்தவள் என்றெல்லாம் கருதப் பட்டு வந்த கைகேயிப் பாத்திரத்தைப் புதிய கோணத்தில் காணுமாறு கவிஞன் செய்கிறான். கைகேயி என்ற பெண் தற்காத்துத் தற்கொண்டான் பேணும் பண்புடையவள் என்றே கவிஞன் காட்டுகிறான். தற்கொண்டானைப் பேணுவதற்காக அவள் போட்டுக் கொண்ட வேடமே கைகேயி சூழ்வினைப் படலத்தில் நாம்காணும் கைகேயிப் பாத்திரமாகும் என்பதையும் இதுவரை கண்டோம். தொடக்கத்தில் கவிஞன் பயன்படுத்திய நாடகமயில் என்ற தொடரே இவ்வாறு நம்மை நினைக்கத் தூண்டுகிறது.

படலத்தின் தொடக்கத்தில் நவ்வி முதலான சொற்களால் கைகேயியைக் குறித்த கவிஞன், தசரதன் முதலிய பிற பாத்திரங்களைக் கொண்டு கைகேயியை ஏசவைத்தானே தவிர நூலாசிரியன் கருத்தாக ஒரு வார்த்தை கூட அவளை ஏசும் முறையில் அமையவில்லை. கைகேயி சூழ்வினைப் படலத்தின் இடைப்பகுதியில் வரும் சில பாடல்கள் (1540 முதல் 1553 வரை) தற்குறிப்பேற்ற அணியில் அமைந்துள்ளன. அப்பாடல்களில் இயற்கையும் சில உயிரினங்களும் கைகேயியின் கொடுமை கண்டு அவளை ஏசுவது போல அமைந்துள்ளன. அப்பாடல்களுள்,

'கேகயத்து அரசன் பயந்த விடத்தை, இன்னது
ஓர்கேடுகுழ் மா கயத்தியை, உள் கொதித்து, மனத்து வைவன போன்றவே' (1542)

இரவின் தொடக்கத்தில் புள்ளினங்கள் எல்லாம் தம்முள் கலகலவென்று ஒசை எழுப்புகின்றன. இந்த ஒலியைத் தற்குறிப்பேற்ற அணியுடன் கவிஞன் விளக்குகிறான். அப்புள்ளினங்கள் எழுப்பும் ஒலி கேகயத்து அரசனாகிய கேகயன் பெற்ற நஞ்சை, இப்படிப்பட்ட ஒரு பெருங்கேட்டைச் செய்த மிகக்கீழ்மைக் குணம் உள்ளவளை நினைத்து மனக் கொதிப்பேறி அவளை வைவது போலத் தம்முள் ஒலி எழுப்பின என்பதாம். தற்குறிப்பேற்றவணியே ஆயினும் கைகேயியை 'நஞ்சு' என்றும் கயத்தி என்றும் கவிஞன் பேசுகிறான்.  பறவைக் கூட்டங்கள் அவளை நஞ்சு என்றும் கயத்தி என்றும் ஏசியதாகப் பாடலை அமைக்கவில்லை. 'விடத்தை, கயத்தியை வைவன போன்றவே' என்று இரண்டாம் வேற்றுமை கொடுத்துப் பேசுவதால் இவை இரண்டும் கவிஞன் கூற்றேயாகும்.

நாடக மயில் என்று படலத்தின் தொடக்கத்தில் அவளைப் பேசிய கவிஞன் இப்பகுதியில் அவளை நஞ்சு என்றும் கயத்தி என்றும் ஏசுவது சரியா என்ற வினா தோன்றினால் அது நியாயமானதே யாகும். கவிஞன் இப்பொழுது தன் மனத்தில் தோன்றிய சினத்தை, வெறுப்பை வெளியிடுவதற்கு இவ்விரண்டு சொற்களையும் பயன்படுத்துகிறான். இது சரியா என்ற வினாவை எழுப்பும் முன் கலைஞர்களின் ஒரு மனநிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் காட்டப்பெறும் உதாரணம் இந்நிலையை நன்கு விளக்கும். இந்தக் காட்சியில் கல்விக்கடலான சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் நாடகக் கலைஞர், நாடக ஆசிரியர், இயக்குநர் ஆகிய முத்தொழிலையும் புரிபவர் கிரீஷ் சந்திர கோஷ் என்ற கலைஞர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த உலகம் போற்றும் மாபெரும் அறிஞர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆவார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை'தீனபந்துமித்ரா' எழுதிய'நீல்தர்ப்பண்' என்ற நாடகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சாயத் தொழிலுக்கு இன்றி யமையாத அவுரிச் செடியைப் பயிரிடும் தொழிலாளர்களை ஆங் கிலேய முதலாளிமார்கள் கொடுமையாக நடத்தி சித்திரவதை செய்யும் செயலை இந்நாடகம் கருப்பொருளாகக் கொண்டது. நாடகத்தில் கொடுமை புரியும் ஆங்கில முதலாளியாக கிரீஷ் சந்திர கோஷ் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தத்ரூபமாக நடிக்கும் அவருடைய நடிப்பை பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் கல்விமானாகிய வித்தியாசாகர் ஒரு காரியத்தைச் செய்து விட்டார். நடைபெறுவது நாடகம் தான் என்பதையும், இக்கொடுமைக்காரன் வேஷம் தரித்தவர் தன் அருமை நண்பராகிய கிரீஷ் சந்திர கோஷ் என்பதையும் முழுவதுமாக மறந்து விட்டார் வித்யாசாகர். கொடுமை நிறைந்த அக்காட்சி நடைபெறும்போது தாம் அணிந்திருந்த காலணியைக் கழற்றி வெள்ளைக்காரர் வேடமணிந்து நடிக்கும் கிரீஷ் சந்திரகோஷின் மேல் அக்காலணியால் அடித்துவிட்டார். நாடக அரங்கம் அதிர்ந்தது என்றாலும் நடிகர் கோஷ், அந்தக் காலணியை துக்கி வைத்துக் கொண்டு தம்முடைய நடிப்புத் திறமைக்கு இதைவிடச் சிறந்த பரிசை வேறு யாரும் தர முடியாது என்று கூறிப் புகழ்ந்தார். மாபெரும் கல்வி மானாகிய வித்யாசாகரே தம்முடைய நண்பர் கோஷை மறந்து அவர் மேற்கொண்ட வேடத்தை உண்மை என்று நம்பி காலணியால் அடித்தது தன் நடிப்புத் திறமைக்கு கொடுக்கப்பட்ட சிறந்த பரிசு என்று கோஷ் புகழ்ந்தார்.

நடிகர் கிரீஷ் சந்திர கோவின் இந்த விளக்கவுரை நன்கு சிந்திக்கப்பட வேண்டும். கலைஞன்,இரசிகன் ஆகிய இருவருமே புறநிலை நோக்கில் தான் (objective) எதனையும் காண்கின்றனர். சில சமயங்களில் இந்த நிலை மாறித் தன்னிலை (subjective) நோக்கம் பெறுவதுமுண்டு. நாடகம் பார்த்த வித்யாசாகர் புறநிலையில் நின்று பார்ப்பதை விட்டுவிட்டு அகநிலைப் பார்வையில் அமிழ்ந்ததால் நிகழ்ந்த விளைவைக் கண்டோம். இதை நன்கு புரிந்து கொண்டால் கம்பன் பாடலுக்கும் விளக்கம் கிடைக்கும்.

காப்பியப் புலவனாகிய கம்பநாடன் மிகக் கூர்மையான கவனத் துடன் கைகேயி பாத்திரத்தைப் படைக்கிறான். அவள் உண்மையில் பொறுமை இழக்கவில்லை. தான் ஏற்றுக் கொண்ட வேடத்திற்கேற்பவே அனைத்தையும் செய்கிறாள் என்ற நிலையில் தான் கைகேயி சூழ்வினைப்படலத்தைத் தொடர்கிறான். கதை வளர்கிறது. மிக மிக வேகமாக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் புறநிலையில் நின்று கதைப்போக்கைப் பாடிக்கொண்டு வந்த கம்பநாடன் திடீரென்று தன்னிலை நோக்கில் அமிழ்ந்து விடுகிறான். தன்னால் படைக்கப்பட்ட பாத்திரத்தை அது செய்கின்ற செயலைத் தன்னிலை நோக்கில் பார்க்கத் தொடங்கியவுடன் விருப்பு, வெறுப்புகள், கோபதாபங்கள் ஆகிய அனைத்தும் வந்துவிடுகின்றன.  தன்னை மறந்த நிலையில் கைகேயியை ஏசத் தொடங்கிவிடுகிறான். 'நஞ்சு' என்ற சொல்லும் 'கயத்தி' என்ற சொல்லும் இந்நிலையில்தான் பயன்படுத்தப்படுகின்றன. பாத்திரப்படைப்பு எவ்வளவு சிறந்துள்ளது என்பதற்கு இது ஒர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாகும். கல்வியில் பெரியவனான கம்பன் கூட தானே படைத்த பாத்திரத்தின் வளர்ச்சியில் தன்னையே மறந்துவிடுகின்றான். மயில் அனைய கைகேயி நாடக வேடமிட்டு கொடிய கைகேயியாக நடிக்கிறாள் என்று அவன் நிர்மாணித்த கோட்டை மேல் இப்பொழுது தன்னை மறந்து கல்லை வீசுகிறான். இதை நன்கு புரிந்துகொண்டால் கைகேயி என்ற பாத்திரத்தைக் கம்பன் எவ்வாறு படைத்தான்? முதலில் ஏன் புகழ்ந்தான்? இறுதியில் ஏன் ஏசினான்? என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும்.

கைகேயி என்ற பாத்திரத்தை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது பொருத்தமாகும் என்று நினைக்கின்றேன். இது வரையில் கைகேயியைப் பெருங் கொடுமைக்காரியாக, கருணையற்றவளாக, பண்பற்றவளாகவே கண்டோம். தான் கொண்ட கருத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகக் கணவனை இழப்பதைக்கூடப் பெரிதாகக் கருதவில்லை என்று தான் கூறிக் கொண்டிருந்தோம். ஆனால், கம்பனுடைய பாத்திரப் படைப்பை ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது கைகேயியை அவன் வேறு வகையில் அமைத்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இராமன் எப்படி ஸ்திதப்ரக்ஞனாக அமைக்கப்படுகின்றானோ அதுபோல் ஒரு ஸ்திதப்ரக்ஞ மனோ நிலையுடையவளாகக் கைகேயியும் படைக்கப்பட்டிருக்கின்றா ளோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நன்மை எது, தீமை எது என்பதை நன்கு அறிந்துகொண்டாள் கைகேயி. கூனியினுடைய சூழ்ச்சி, அவள் அந்த அடிப்படையை அறிவதற்கு ஒரளவு துணை செய்தது; அந்த அளவோடு அது நின்று விட்டது.

தசரதனைப் பொறுத்தமட்டில் ஒரு மாபெரும் தவற்றைச் செய்ய முற்பட்டு விட்டான். இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று  முடிவு செய்துவிட்டதால், அந்தத் தவறான முடிவை அவன் கை விட்டாலொழிய அவனுடைய பெயருக்குப் பெருங்களங்கமும் பாவமும் வந்து சேரும். தான் முன்பு சொல்லிய சொல்லை மறந்து இப்போது புதிய ஒன்றினைத் தொடங்கி விட்டான் தசரதன். ஆகவே, அவனை வழி திருப்ப வேண்டும்.

இதற்கு ஒரே வழி-கன்யா கல்கத்தை அவனுக்கு நினைவூட்டி யிருக்கலாம். அவ்வாறு செய்தால் தசரதன் அது வரையில் செய்த தெல்லாம் பெருஞ் சூழ்ச்சிகளாக முடிந்துவிடும். பெரும் பழி தன் பேரில் ஏற்றப்பட்டுவிடும். அப்படியுமில்லாமல், (கன்யா கல்கத்தையே நினைவூட்டாமல்) என்ன காரியத்தைத் தசரதன் செய்ய வேண்டுமோ, அதைத் தான் பெற்ற வரத்தின் மூலமாகச் செய்து கொண்டவளாகக் கைகேயியைக் கம்பன் படைத்துக் காட்டுகிறான்.

இவ்வாறு செய்ததால் தசரதனுடைய பெயர், குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் எவ்விதக் குற்றமும் செய்யாத கைகேயியின் பெயர் மண்ணில் ஆழ்த்தப்படுகிறது. இதனை நன்கு அறிந்திருக்கின்றாள் கைகேயி என்பதில் ஐயமே இல்லை.

இறுதியாகக் தசரதன் 'நீ உன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லையானால் நான் இறந்துவிடுவேன்,

"உன் கழுத்தின் நாண், உன் மகற்கு காப்பின் நாண் ஆம்"(1653)

'உன் கழுத்தில் அணிந்திருக்கும் மங்கல நாண், உன் மகன் கைக்குக் காப்பு நாண் ஆகக் கடவது' என்று தசரதன் கூறிய பொழுதும்கூட, ஒருத்தி பிடிவாதமாகத் தான் கொண்ட கொள்கை யில் உறுதியாக நிற்கின்றாள் என்றால் இது வெறுந் தாய் அன்பினாலோ அல்லது தன் மகனுக்குப்பட்டம் சூட்டவேண்டுமென்ற எண்ணத்தினாலோ எடுத்த முடிவாகச் சிந்திப்பதற்கில்லை. 'பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டுமென்றால் உன் கழுத்திலுள்ள திருமாங்கல்யச் சரடே அவன் கைக்குக் காப்பாகக் கடவது' என்று  கணவனாகிய தசரதன் சொல்லிவிட்டான் என்றால் இதைவிடப் பெரிய சாபம் வேறெதுவும் இருப்பதற்கில்லை. இவ்வளவு பெரிய சாபத்தைப் பெற்றுக்கொண்டு, பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டுமென்று கைகேயி நினைத்தாள் என்று நினைப்பது அவளுடைய அறிவுக்கும், பண்புக்கும் பொருத்தமில்லாததாகப் படுகின்றது.

ஆகவே, வேறு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காரணத்தைக் தன் அடி மனத்தில் வைத்துக்கொண்டு, அதனை வெளியில் சொல்ல முடியாத நிலையில், தன்னுடைய கணவனாகிய தசரதனைப் பெருங் குற்றத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைக்கின்றாள் கைகேயி என்று நிலைப்பது பொருத்தமுடையதோ என்று தோன்றுகிறது.

இராமனது அவதார நோக்கத்தை அவள் அறிந்திருந்தாள் என்று சொல்வதற்கில்லை. 'இராகவன் காட்டிற்கு செல்வதுதான் அவன் பிறந்ததனுடைய நோக்கம்', என்பதைக் கைகேயி அறிந் திருந்தாள் என்று சொல்வது கதைப் போக்கில் இடையூறு விளை விக்கும். ஆகவே, அந்தக் கருத்தை விட்டு விடலாம்.

அவளைப் பொறுத்தமட்டில் தசரதன் தன்னுடைய திருமணத் திற்கு முன்னால் கொடுத்த வாக்கை மீறி (கன்யா கல்கம்) இப் பொழுது அதற்கு மாறுபட்ட ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குகிறான். இதனைச் செய்து முடிப்பானேயானால் உலகமுள்ளளவும் தசரதனுடைய பெயர் பழிக்கு உள்ளாகும். அது மட்டுமல்ல, பெரும் பாவத்திற்கும் அவன் ஆளாவான். பரம்பொருளை மகனாகப் பெற்றுங்கூட இத்தகைய குற்றத்திலிருந்து அவன் விடுபட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கும்.

ஆகவே, இப்பொழுது ஒன்று, தசரதனை அவனுடைய வழிப் படி விட்டு அதனால் வருகின்ற பெருங் குற்றத்தினையும், பழி பாவங் களையும் அவனே ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். இல்லை யானால் அவன் செய்ய முனைந்த காரியத்தைச் செய்ய விடாமல் த்டுத்து அதனால் வருகின்றபழிபாவங்கள், குற்றங்கள்,கெட்டபெயர்  அனைத்தையும் (கைகேயி) தானே ஏற்றுக்கொண்டு, தசரதனைக் காப்பாற்ற வேண்டும். இந்த இரண்டின் இடைப்பட்டு, 'இருதலைக் கொள்ளி எறும்பாக' இருந்த கைகேயி ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு ஒரு முடிவுக்கு வருகின்றாள் என்று நினைக்க வேண்டியுள்ளது.

மந்தரை சொல்லிவிட்டுப் போன பிறகு தசரதன் வருவதற்கு இடைப்பட்ட நேரத்தில் கைகேயினுடைய மனத்திரையில் இந்த எண்ண ஓட்டங்கள் நன்கு பதிந்திருக்க வேண்டும். எவ்வாறாவது தன் கணவனைக் காப்பாற்றவேண்டும். 'வாய்மையும் மரபும் காத்தவனாக' அவனை ஆக்க வேண்டும். 'பொய்உரையாத புண்ணியனாக' அவனை ஆக்க வேண்டும் என்று கைகேயி முடிவுக்கு வந்து விட்டாள். கற்புடைய மனைவியின் கடமை அது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. 'தற்காத்துத் தற்கொண்டானை'ப் பேண வேண்டிய கடப்பாடு, அவளுடையதாக ஆகிறது. ஆகவே, தான் எந்த நிலையை அடைந்தாலும், தனக்கு எத்தகைய அவப்பெயர் வந்தாலும், தான் எந்தப் பாவத்திற்குப் போவதாக இருந்தாலும் அது பற்றிக் கவலைப்படாமல், தன்னைக் கைப்பிடித்தவனாகிய கணவனுடைய குற்றங்களை நீக்கி, அவனுக்குப் பழி வராமல் செய்து அவன் நரகத்தை அடையாமல் செய்ய வேண்டியது தன்னுடைய கடமை என்று கைகேயி முடிவு செய்திருத்தல் வேண்டும்.

இந்த முடிவை அவள் மேற்கொண்ட பிறகு, அந்த முடிவைக் கொண்டுசெலுத்துகின்ற முறையில் அவள் ஒப்பற்ற ஸ்திதப்ரக்ஞ நிலையில் நின்று செயலாற்றுகின்றாள். இவ்வாறு செய்வதனால் கணவன் உயிர் போய்விடும் என்று முதலில்அவள் நினையாமல் இருந்திருக்கலாம். ஆனால், கணவன் அதை எடுத்துக் காட்டிய பிறகு, 'கணவனுடைய உயிரா? அல்லது அவன் பழிக்கு ஆளாகாமல் இருப்பதா? என்ற ஒரு வினா கைகேயியின் மனத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். . தசரதன் அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவன். இன்னும் சில ஆண்டுகள் வாழ்வதில் அவனுக்கு எந்த விதமான சிறப்பும், பெருமையும் இருக்கப் போவதில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும், அவன் இராமனுக்குப் பட்டம் கட்டிவிட்டு உயிர் துறப்பானேயானால் வார்த்தை தவறிய பெரும் பழி அவனைச் சூழத்தான் செய்யும். ஆகவே, இந்தப் பழியிலிருந்து நீங்க வேண்டுமானால், அவன் உயிர் போவதாக இருந்தாலும் சரி அதுபற்றிக் கவலையில்லை. இந்தப் பழி பாவங்கள் அவனை அடையாதிருத்தல் வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கைகேயி செயல்பட்டாள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

ஆகையினால்தான் தசரதன் எவ்வளவு எடுத்துக் கூறியும் வசிட்டன் வந்து கூறியும், கோசலை வந்து அழுதும் கைகேயி எதற்கும் அசையாமல், தான் கொண்ட கொள்கையில் உறுதிப்பாட்டோடு நின்று விட்டாள். ஆகவே, இந்த அடிப்படையை வைத்துக் கொண்டு பார்ப்போமேயானால் கைகேயி செய்த தியாகம் மாபெரும் தியாகமாகும். இந்த மாபெரும் தியாகத்தில் தன்னைச் சூடமாக ஆக்கி எரித்துக் கொண்டு கணவனைக் காப்பாற்றுகின்றாள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கைகேயி இவ்வாறு நினைந்துதான், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இந்த முடிவிற்கு வந்து கணவனைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே சர்வ பரித்தியாகம் செய்துகொண்டாள் என்ற முடிவுக்கு அரண் செய்கின்ற முறையில் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அமைகின்றன.

பரதன் வருகிறான்; தாயிடம் பேசுகிறான்; 'தந்தை வானத் தான், அண்ணன் கானத்தான்' என்று அவள் பேசுகிறாள். அதனைக் கேட்ட பரதன் துணுக்குறுகின்றான். சிறிதும் உணர்ச்சி யில்லாமல், 'ஒருவன் கானத்தான், ஒருவன் வானத்தான்' என்று சொல்கிறாளே என்று நடுங்குகின்றான் பரதன். உடனே காரணங்கள் கேட்டறிந்தவுடன்


"ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்
தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற்பாலதோ” (2173)

'தாய் எனும் பெயர் என்னைத் தடுக்கவில்லை. அண்ணன் இராமன் கோபித்துக் கொள்வானே என அஞ்சுகிறேன். அதனால் தான் உன்னைக் கொல்லாமல் விட்டுவிடுகிறேன் என்று பேசுகிறான் பரதன். அந்த நிலையிலும் கைகேயி வாய் திறக்கவேயில்லை.

இனி அனைவரும் இராமனை அழைத்து வருவதற்காகச் செல்லும்போது கைகேயியும் செல்கிறாள். குகனிடம் தன் தாய்மார் களை அறிமுகம் செய்து வைக்கின்ற பரதன், கைகேயியை அறிமுகம் செய்து வைக்கும்பொழுது,

"படர்.எலாம் படைத்தாளை பழி வளர்க்கும்
செவிலியை தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும்
உயிர் பாரம் குறைந்து தேய
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்
உலகத்தே ஒருத்தி அன்றே
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல்
இந் நின்றாள் என்னை ஈன்றாள்" (2371)

என்றெல்லாம் பேசுகின்றான். இந்த நிலையிலும் கைகேயி வாயைத் திறக்கவேயில்லை. இறுதியாக அவள் பேசிய பேச்சு பரதனிடம் 'வானத்தான், கானத்தான் என்று சொன்னாளே அதுதான். அதன் பிறகு அவள் வாயே திறக்கவில்லை என்பதை அறியும் போது கொஞ்சம் வியப்புத் தோன்றுகிறது.

மிக எளிதான முறையில் தன் கணவன், கொடுத்த வாக்கை மறந்து செய்ய இருந்த தவற்றிலிருந்து அவனைக் காப்பதற்காகத் தான் அதனைச் செய்தேன் என்று அவள் சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் பரதனோ, கோசலையோ யாருமே அவளைக் குற்றம் சொல்வதற்கில்லை. அந்த நிலையில். அவள் ஏன் அதனைச் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று நினைக்கும் பொழுதுதான் அவளுடைய பெருமை நமக்குத் தெற்றென விளங்குகிறது.

இதனை அவள் சொல்லியிருப்பாளேயானால் தன்னைப் பழியிலிருந்து விலக்கிகொள்ளலாமே தவிர தசரதனுடைய புகழ் மங்கி யிருக்கும். அந்த நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் கைகேயி இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்தாள். ஆகவே, வாய் திறந்து, வேண்டுமென்றே தான் செய்தேன். இதனை நான் செய்யாமல் இருந்திருப்பேனே ஆனால் தசரதன் வாய்மையும் மரபும் காத்தவனாக இருந்திருக்க மாட்டான் என்று சொல்லியிருப்பாளேயானால் மறு படியும் தசரதனுக்குப்பழி ஏற்பட வழிசெய்தவள் ஆகிவிடுவாள். ஆகவே, ஒரு கடுகளவு கூடக் கணவனுக்குப் பழி வராத முறையில் அவனைப் பாதுகாத்து அதன் காரணமாகத் தன்னையே தியாகம் செய்து கொண்டு வாய் திறவாமல் கடைசிவரை இருந்த பாத்திரமாக அமைகின்றாள் கைகேயி. இவளுடைய இந்த மாபெரும் தியாகத்தைப் பரதன் உணர்ச்சி வசப்பட்ட காரணித்தால் அறிந்து கொள்ள வில்லை. ஏனையோரைப் பற்றிக் கவலையேயில்லை. ஆனால், இராகவனைப் பொறுத்தமட்டில் நன்கு அறிந்து இருந்தான் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

இராகவனைப் பிள்ளையாகப் பெற்றுங்கூட, தசரதன் வீடு பேற்றை அடையக்கூடிய நிலையைப்பெறவில்லை. தேவர் உலகத்தில் தான் சென்று தங்குகின்றான்.

“சுமந்திரன்.இராகவன் கானகம் போயினன்” என்றான்;
என்ற போழ்தத்தே ஆவி போனான். (1898)

என்றுதான் கம்பன் கூறுகின்றானே தவிர, வீடுபேற்றை அடைந் தான் என்று சொல்லவில்லை. ஏன் தெரியுமா? மனத்திலே கைகேயி மாட்டுக்கொண்ட காழ்ப்புணர்ச்சியோடு இறுதிவரையிலும் தசரதன் இருந்துவிட்டான். கைகேயிமாட்டுக்கொண்ட காழ்ப்புணர்ச்சியும், பரதன்மாட்டுக் கொண்ட கசப்புணர்ச்சியும் அவனுடைய மனத்தில் நிறைந்திருந்த காரணத்தால்தான் அவன் வீடுபேற்றை அடைதல் முடியவில்லை. ஆகவே, இந்தக் காழ்ப்புணர்ச்சி அவனிடமிருந்து நீங்கினாலொழிய அவன் வீடுபேற்றை அடைய முடியாது என்ற இந்த நாட்டுக் கொள்கையை வலியுறுத்துவதற்காக, மூல நூலில் இல்லாத ஒரு பகுதியைப் புகுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். அனைத்தும் முடிந்து வெற்றிவாகை சூடிய இராமனிடம் தசரதன் வருவதாக ஒரு புதிய காட்சியை உண்டாக்குகின்றான். தசரதன் வந்து.

"அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
 இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது.என்னைக்கொன்று
நீங்கலது. இப்பொழுது அகன்றது உன் குலப்பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்த மா மணி இன்று வாங்க” (1006B)

என்று சொல்லி, நீ வரத்தைக் கேள்' என்று சொல்லுகின்றான். அப்போது இராமன் கேட்கின்ற வரம் வியப்பை உண்டாக்குவதாக அமைகின்றது. ஐயா,

"

தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக" (10079) (10079)

என்று கேட்கின்றான்.

“தீயள் என்று நீ துறந்த என்தெய்வமும்”

என்ற வார்த்தைகள் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியன. தெய்வத்தைப் போல, தன்னுடைய நலத்தைக் கருதாமல், பிறருக்காகவே மாபெரும் காரியத்தைச் செய்தவள் கைகேயி என்பதை இராகவன் உணர்ந்த காரணத்தால்தான், “என் தெய்வம்”

என்று பேசுகின்றான்.

அந்தத் தெய்வத்தை உள்ளவாறு உணராமல் ஏசி, காழ்ப்புணர்ச்சியோடு இறந்துவிட்ட காரணத்தால், தசரதனைச் கட்டிக் காட்டுபவன் போல,

“தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக" (10079)

என்று கேட்பதன் மூலம், கைகேயி என்ற பாத்திரத்தைக் கவிச் சக்கரவர்த்தி என்ன அடிப்படையில் படைத்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. -

இராகவனைப் பொறுத்தமட்டில் கைகேயின் தியாகத்தை நன்கு அறிந்திருந்தான்; ஆதலால் அவளைத் தெய்வம் என்று கூறுகின்றான். அந்தத் தெய்வம் தன்னுடைய கடமையை நிறை வேற்றுகின்ற முறையில் பேசவேண்டியபொழுது பேசிற்று. கொண்ட கொள்கையில் உறுதிப்பாட்டோடு இருந்து கொள்கையை நிறைவேற்றும்பொழுது தனக்கு வருகின்ற பழி பாவம் முதலிய அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது. எந்தச் சூழ்நிலையிலும் வாய் திறந்து பேசி தன்னுடைய பழியைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று அந்தப் பாத்திரம் கருதவே இல்லை. அதற்குரிய சந்தர்ப்பங்கள் பலமுறை கிடைத்தும் வாய் திறவாமல் இருந்துவிட்ட ஒரே காரணத்தால் இறுதி வரையில் தன்னுடைய கணவனை மாசு மருவு அற்றவனாக ஆக்க வேண்டுமென்ற தன்னுடைய குறிக் கோளில் வெற்றி பெற்றவளாக ஆகி விடுகின்றாள் கைகேயி. ஆகவேதான், ஏனையோர் யாருக்கும் தராத அந்தப்பட்டத்தை, இராகவன் கூற்றாகவே அமைக்கின்றான் கவிச்சக்கரவர்த்தி, “என் தெய்வம்” என்று.

ஆகவே, கைகேயி என்ற பாத்திரப் படைப்பை எந்த அளவுக்குக் கவிஞன் புதிய முறையிலே படைத்திருக்கின்றான் என்பதை இந்தக் கண்ணோட்டத்துடன் பார்ப்போமேயானால் கொஞ்சம் வியப்பைத் தருவதாகவே அமைகின்றது. மூல நூலில் அமைந்துள்ள முறையை விட்டுவிட்டுப் புதிய முறையில் கன்யா கல்கத்தை ஒரளவு மறைத்து, அதே நேரத்தில் கைகேயியை ஒரு மாபெரும் தியாகியாக, ஸ்திதப்ரக்ஞையாக, கடமையை நிறைவேற்றுதற்காகப் பழி பாவங் களை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு பாத்திரமாக அமைத்து விடுகின்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன்.

ஆகவே, 'இந்த அடிப்படையில்தான் அந்தப் பாத்திரத்தை அமைக்கின்றேன்' என்பதைச் சுட்டிக் காட்டுபவன் போல, அப் பாத்திரத்தை அறிமுகம் செய்கின்றபோதே மிக அற்புதமான முறையில் அறிமுகம் செய்து வைக்கிறான். மந்தரை வந்த பொழுது கைகேயி உறங்கிக்கொண்டிருக்கிறாள்.

"கடைக்கண் அளி பொழிய பொங்கு அனை
மேல் கிடந்தாள்” (1448)

என்று கைகேயியை முதல் முதலாக அறிமுகம் செய்வான் கம்பநாடன். உறங்கும்பொழுது ஒருவருடைய அக மனத்தில் என்ன எண்ணம் நிறைந்திருக்கிறதோ அதுதான் அவரது முகத்தில் வெளிப்படும். கைகேயி உறங்கிக்கொண்டிருந்தபோது அவள் கடைக்கண் வழி அருள் கரந்து கொண்டிருந்தது என்றால் அவளுடைய அகமனம், ஆழ்மணம், சிந்தை ஆகிய அனைத்திலும் அருள் நிரம்பி இருக்கின்றது என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றான் கவிச் சக்கரவர்த்தி. இப்படி மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக் கரணங்கள் நான்கிலும் அருள் நிறைந்திருப்பவளாகிய ஒருத்தி, எவ்வாறு கொடுமையான காரியத்தைச் செய்ய முடியும் என்று சிந்திப்போமேயானால் உண்மையை விளங்கிக்கொள்ள முடியும். கொடுமை என்பது நாம் பார்க்கும் பார்வையில் இருக்கின்றதே தவிர, செயலில் இல்லை. இப்பொழுது அவள் வாய் திறவாமல் இருந்திருப்பாளேயானால் தசரதன் பழிக்கு ஆளாவான். வாய் திறந்து பேசியதனால் பழியை அவள் ஏற்றுக்கொள்கிறாள். ஆகவே, தன்னுடைய அருள் நிரம்பிய உள்ளத்தால், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, கணவனைக் காப்பாற்றுவதுதான் தன்னுடைய கடமை, தற் கொண்டானைப் பேணுவதுதான் தன்னுடைய கடமை, கற்புடைய, மனைவியின் கடமை என்ற முடிவுக்கு வந்து ஒப்பற்ற தியாகத்தைச் செய்பவளாக, ஒர் உறுதிப்பாட்டோடு செயல்பட்டவளாகத்தான் - இந்தப் பாத்திரத்தை அமைத்திருக்கிறான் கம்பன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

கன்யா சுல்கக் கதை வெளிப்படையாகக் கம்பனால் பேசப்படா விட்டாலும், அயோத்தியா காண்டம் முழுவதையும் பார்க்கும் போது இதனை ஏற்றுக் கொண்டுதான் அவன் பேசுகின்றான் என்பதை அறிய முடிகின்றது.

கன்யா சுல்க நிகழ்ச்சியைத் தசரதன், கைகேயி என்ற இருவர் மட்டும் அறிந்ததோடு அல்லாமல் இராகவனும் அறிந்திருந்தான் என்பதைச் சந்தர்ப்பம் வரும்போது அவன் கூற்றாகவே வைத்துப் பேச வைக்கின்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். மூல நூலாகிய வான்மீகத்தில் இந்நிகழ்ச்சி இராமனும் பரதனும் காட்டில் சந்திக்கின்ற காலத்தில் பரதனிடம் இராமனே கூறுவதாக அமைந்துள்ளது. பரதன் கூட அதை ஒரளவு அறிந்திருந்தான் என்பதையும் அந்தப் பாடலின் மூலமே தெரிவிக்கின்றான். ஆழ்ந்து சிந்தித்தால் மந்திரப்படலத்தில் வருகின்ற பாடல் இந்தக் கருத்தை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதைக் காணமுடியும்.

மைந்தனை அழைத்து 'நீ இந்த அரசை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் தவம் செய்யப் போகிறேன்' என்று பதினான்கு பாடல்களில் தசரதன் பேசுகிறான். மூத்த பிள்ளையாகிய இராகவனே பட்டத்தை ஏற்கக் கடப்பாடுடையவன்; இதை உலகம் அறியும். 'மயில் குலம் முறை' என்று சொல்லப்படுகின்ற முறையில் தந்தைக்குப் பின் மூத்த மைந்தன் என்பது மரபு பற்றி வருவதேயாகும். இந்த அடிப்படை அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான் என்பதில் ஐயமே இல்லை.

அப்படியிருந்தும் மூத்த மைந்தனாகிய இராகவனை அழைத்துப் பதினான்கு பாடல்களில்

“சொல் மறா மகப் பெற்றவர் அருந்துயர் துறந்தார்” (1380)

'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய பிள்ளைகளைப் பெற்றவர்கள்தாம் உயர்ந்தவர்கள்.' என்றெல்லாம் மிகப் பெரிதாக ஒரு முன்னுரை பேசிவிட்டு, 'இந்தப் பட்டத்தை ஏற்றுக்கொள்' என்று சொல்லுகிறான் தசரதன். இவ்வாறு சொல்வதற்குத் தேவை என்ன ஏற்பட்டது?

இராகவன் தன் வேண்டுகோளை ஒருவேளை மறுத்து விடுவானோ என்ற அச்சத்தினால்தான் தசரதன் இவ்வளவு பெரிய முன்னுரை பேசுகிறான். அப்படியும் அச்சம் நீங்காமல் இறுதியாக,

இந்தப் பதினான்கு பாடல்களில், 'மைந்தர்கள் என்பவர்கள் தந்தைமார்கள் என்ன ஆணையிடுகின்றார்களோ அதைச் செய்ய வேண்டிய கடப்பாடு உடையவர்கள்' என்று கூறுவதோடு “நான் இவ்வளவு காலம் வானப்பிரஸ்தம் செல்லாமல் இல்லறத்தில் தங்கிவிட்டது பெருந்தவறு. ஐந்து பொறி புலன்களை அடக்கியாள வேண்டிய தவ வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய காலம் இப்போது வந்துவிட்டது” என்றெல்லாம் விரிவாகப் பேசி, இறுதியாக,

“.... ..............அருந் துயர்ப் பெரும் பரம், அரசன்

வினையின் என்வயின் வைத்தனன்” எனக்கொள வேண்டா

புனையும் மா முடிபுனைந்து, இந்த நல் அறம் புரக்க

நினையல் வேண்டும்; யான் நின்வயின் பெறுவது ஈது (1381)

என்று சொல்லுகின்றான் தசரதன். இந்த வார்த்தைகள் ஆழ்ந்து நோக்கற்குரியன. மைந்தனை அழைத்து,

“நின்னை வேண்டி, எய்திட விழைவது ஒன்று உளது" (1373)

எனவும்,

“ஓர் நெறிபுக உதவிட வேண்டும் (1374)

எனவும் கெஞ்சி, 'நான் வானப்பிரஸ்தம் செல்ல வேண்டும், நீ பட்டத்தை ஏற்றுக்கொள்'

“யான் நின்வயின் பெறுவது ஈது”

என்றும் கேட்க வேண்டிய தேவை என்ன வந்தது? ஆகவேதான் இதில் ஆழமான பொருள் ஏதோ புதைந்திருக்க வேண்டும்.

“இராகவன் கன்யா சுல்க அடிப்படையை அறிந்திருந்தான். எனவே, ராஜ்ஜியத்தை மறுத்துவிடுவான்.” என அஞ்சிய தசரதன், அவன் மறுப்பதற்கு வாய்திறக்கும் முன்னரே இதை வரமாகக் கேட்கின்றான்.

“யான் நின்வயின் பெறுவது ஈது”

என்று சொல்வானேயானால் மைந்தன் வாய் திறப்பதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது.

இந்த நிலையில் இராகவனுடைய மனநிலை என்ன என்பதைச் சொல்ல வருகின்ற கம்பன் மிக அற்புதமான ஒரு பாடலைப்பாடுகின்றான். அனைவரும் அறிந்ததுதான் அந்தப் பாடல் என்றாலும் அதிலுள்ள ஒருசில சொற்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியனவாகும்.

'தாதை அப்பரிசு உரைசெய தாமரைக் கண்ணன்' (1382)

தந்தையாகிய தசரதன் பதினான்கு பாடல்களில் விரிவாகப் பேசி, 'நீ இந்த வரத்தைத் தருவாயா' என்றவுடன் தாமரைக் கண்ணன் - இராகவன்  'காதல் உற்றிலன் இகழ்ந்திலன்' (1382)

பட்டம் வருகிறது என்ப்தற்காக அதை விரும்பவும் இல்லை. அதை இகழ்ந்து நோக்கவும் இல்லை.

“. . . . . . . . . . . . . . கடன் இது என்று உணர்ந்து
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
நீதி எற்கு? என நினைந்தும் அப்பணி தலைநின்றான்.”
(1382)

என்கிறார்.

"கடன் இது என்று உணர்ந்து”

என்ற சொல்லுக்கு 'பட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் தனக்குக் கடமை என்று நினைத்து என்று பலரும் பொருள் எழுதி யிருக்கிறார்கள். ஆனால், அவ்வாறு பொருள் செய்வதிலுள்ள இடர்ப்பாட்டைச் சிந்திக்க வேண்டும். இதுதான் தன்னுடைய கடமை என்று உணர்ந்துவிட்டான் இராகவன்.' என்று பொருள் கூறினால்

“யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
'நீதி எற்கு' என நினைந்து”

என்ற தொடருக்கு,

'சக்கரவர்த்தியின் ஆணை எதுவோ அதன் வழி நிற்பது நீதி' என்று பொருள் கூறுவது'நின்று வற்றுவதாக' முடிந்துவிடும். கடமை என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிற்பாடு, 'அரசன் என்ன ஆணையிட்டானோ அதனைச் செய்வதுதான் நீதியாகும் என்று நினைத்து, அரசன் இட்ட ஆணையை ஏற்றுக் கொண்டான் என்று சொல்வது அர்த்தமற்றதாகி விடும். ஆகவே,

"கடன் இது என்று உணர்ந்தும்”

என்ற சொல்லுக்கு வேறு பொருள் காண்டல் தேவைப்படுகிறது. 'கடன் இது என்று உணர்ந்தும்' என்றால் தசரதன் செய்தது அவ்வளவு சரியில்லை. பரதனுக்குத்தான் இப்பட்டம் உரியது என்று உணர்ந்தான். உணர்ந்துவிட்டபிறகு இரண்டு வகையில் இராகவன் செயல்படக்கூடும்.

ஒன்று, தந்தை என்ற முறையில் உறவு வைத்துக்கொண்டு, தந்தையைப் பார்த்து, "தாங்கள் செய்வது அவ்வளவு சரியாக இல்லை. இப்பட்டம் பரதனுக்கே உரியது” என்று கூறி மறுத்திருக் கலாம். அது ஒருவகை. இராகவன் அவ்வாறு செய்யவில்லை. மறுத்துப் பேசுவதற்கும் தசரதன் வாய்ப்பே கொடுக்கவில்லை. எனவே அடுத்த வழி என்ன? “சக்கரவர்த்தியின் ஆணை எதுவோ அதனைக் கேள்வி கேட்டகாத முறையில் , (.....Yours is not to question why? but to do and Die') ஏற்றுக்கொள்வதுதான் மற்றொரு வகையாகும்.

“யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
நீதி எற்கு”

என்ற இந்த இரண்டாவது வழியை மேற்கொள்கிறான்.

“யான் நின் வயின் பெறுவது ஈது”

என்று தந்தையோ கெஞ்சுகிறான். மகனோ 'கொற்றவன் ஏவியது' என்று சொல்லுகின்றான். இந்த இரண்டுக்குமுள்ள மாறுபாட்டை நன்கு சிந்தித்தல் வேண்டும்.

“யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
நீதி எற்கு”

என்று நினைக்கின்றான் இராகவன். ஆகவே, தசரதன் வரம் கொடு என்று கெஞ்சினாலும், அதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் 'சக்கரவர்த்தி தனக்கு ஆணையிட்டதாகவே நினைக்கின்றான் தசரத குமாரன். ஆகவே, கொற்றவனுடைய ஆணையை மீறுதல் என்பது யாருக்கும் இயலாத காரியம். அந்த முறையில் 'அது சரியோ, தவறோ அதைப்பற்றிக் கவலைப்படாமல் 'இது சக்கரவர்த்தியி னுடைய ஆணை. அதை நிறைவேற்றுவதே தன்னுடைய கடமை. அதுவே தர்மம்' என்ற கருத்தில் இருந்தான் என்று கம்பன் மிக அற்புதமாகச் சொல்வான்.

'அப்பணி தலைநின்றான்'

அவன் இட்ட பணியை மேற்கொண்டான்' என்று பேசுவதனால் இந்தக் கன்யா சுல்கக் கதை எந்த அடிப்படையில் இராகவன் மனத்தில் வேலை செய்கிறது என்பைத நாம் அறிந்துகொள்ள முடியும்.

இதற்கு இதுதான் பொருள் என்று அரண் செய்கின்ற முறையில் பின்னர் இராகவனுடைய கூற்று அமைந்திருத்தல் காண்டல் கூடும். சித்திரகூடத்தில் இராகவன் தங்கியிருக்கிறான். அவனை அழைத்துப்போவதற்காகப்படைகளோடும், நகர மக்களோடும் வந்த பரதன், நிமிர்ந்த சேனையைப் பின்வருக என்று கூறி அவர்களை நிறுத்திவிட்டு, முன்னே தனியாக வந்து இராகவனை வணங்குகிறான்.

பரதனுடைய மாசு படிந்த மேனியையும், தவக்கோலத்தையும் பார்த்து அசந்துபோனவனாகிய இராகவன், அவனிடம் பல கேள்விகளைக் கேட்டு, தந்தையினுடைய இறப்பு முதலானவற்றை எல்லாம் தெரிந்துவருந்தியபிறகு,'நீ இந்தக்தவக்கோலம்பூண்டதன் காரணம் என்ன?, என்று கேட்கின்றான். அப்போது 'நீ வந்து ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்' என்று பரதன் கூற அதற்கு இராகவன் கூறுவதாக உள்ள பாடல் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியதாகும்.

"வரனில் உந்தை சொல் மரபினால் உடைத்தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் அரசு நின்னதே ஆள்க' (2485) என அந்தப் பாடலில் சொல்கிறான் இராகவன். 'நீ பிறந்து விட்டதனாலே இந்த ராஜ்யம் உன்னுடையது ஆகிறது' என்று இராகவன் பேசுகிறான் என்றால் என்ன பொருள்? கன்யா சுல்கக் கதையை வேறு முகமாக, வேறு விதமாக இங்கே புகுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி. அதை நன்கு அறிந்திருந்தவ னாகிய இராகவன் பேசுகின்றான். .

"பரதா, நீ பிறவாமல் இருந்திருந்தால் இந்த ராஜ்யம் எனக்கு உரியதாக இருந்திருக்கலாம். ஆனால், கைகேயியின் வயிற்றில் நீ பிறந்துவிட்ட காரணத்தால் இந்தப் பூமி உனக்குச் சொந்தமாக ஆகி விட்டது. அதனை நீயே ஆள்வாயாக'

“நீ பிறந்து உரிமை ஆதலால் -
அரசு நின்னதே ஆள்க” (2485)

என்று இராகவன் கூறியதாக மிக அற்புதமான முறையில் அந்தக் கதையை மறுபடியும் நினைவூட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி. இத் தகைய ஒரு பாடலைக் கம்பன் மூல நூலாகிய வான்மீகத்தை நினைவில் கொண்டு பாடுகிறான். வான்மீகத்தில் இதே இடத்தில் கன்யா சுல்க வரலாற்றை மிக விரிவாகப் பரதனுக்கு இராகவன் எடுத்துக் கூறுவதாகப் பல பாடல்கள் அமைந்துள்ளன. (வான்மீகம், அயோத்தியா காண்டம்.)

தசரத குமாரன் அவ்வாறு பேசியவுடன் 'அது எப்படி?' என்று பரதன் கேட்டதாக இல்லவே இல்லை. அதற்குப் பதிலாக 'நீ பிறந்து விட்ட காரணத்தால் இந்த அரசு உனக்குச் சொந்தமானது' என்று இராகவன் சொன்னதை ஏற்றுக்கொள்கிறான் பரதன். அது தான் ஆச்சரியம். "முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றிலும் நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் என்னது ஆகில்யான் இன்று தந்தனென் மன்ன! போந்து நீ மகுடம் சூடு” (2486). இராகவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு, “நான் அரசன்தான்.இப்போது நான் ஆணையிடுகின்றேன். நீ போய் ராஜ்யத்தை ஆள்வாயாக’ என்று பரதன் கூறும் போது இராமன், பரதன் ஆகிய இருவருமே இந்தக் கன்யா சுல்கக் கதையை ஏற்றுக்கொண்டு அதற்கு வழி செய்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது. இப்படி வெளிப்படையாகச் சொல்லாமல் அதனை யார் யார் அறிந்திருக்க வேண்டுமோ அவர்கள் எல்லாம் அறிந்திருந் தார்கள் என்று குறிப்பாகக் கவிச்சக்கரவர்த்தி கதையைக் கொண்டு செல்லுகின்ற முறையில் பற்பல வெற்றிகளைப் பெற்றுவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும். தசரதனைப் பழிக்கு ஆளாக்காமல், 'வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்தவனாகச் செய்து விட்டாள் கைகேயி.

"படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை”
(2371)


என்று பரதன் கூறினாலும் உண்மையில் அத்தகையவள் அல்லள் அவள். மாபெருந் தியாகத்தைச் செய்த ஸ்திதப்பிரக்ஞ மனோ நிலையில் உள்ள ஞானியாக அவளை ஆக்கிப் படைத்துவிட்டான். ஆகவே, அந்த அடிப்படையில் அவள் மனமாற்றத்தைக் குறிக்க வந்த கவிஞன்,

"அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல் அருள் துறந்தனள் தூமொழி மடமான்”
(1484)

என்று மட்டும் கூறி நிறுத்தாமல், "தூமொழி மடமான்” என்று அவளுக்கு அற்புதமான அடைமொழி சூட்டுகின்றான் கவிச் சக்கரவர்த்தி.

எனவே, அவள் கூறிய கடுஞ்சொற்கள் எல்லாம் மேலோட்டமாகப் பார்ப்பதற்குக் கடுஞ்சொல்லாக அமைந்தனவே தவிர, உண்மையில் அவை மாபெரும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட 'தூமொழிகள்' என்பதை

“தூ மொழி மடமான்” (1484)

என்ற சொல்லின் மூலம் பெற வைத்துவிடுகின்றான். ஆக இந்தக் கன்யா சுல்கக் கதையை வெளிப்படையாகச் சொல்லாமல், மறை முகமாகவே கொண்டு செல்வதில் இத்தனை பல வெற்றிகளைக் கவிச்சக்கரவர்த்தி பெறுகின்றான் என்பதை நாம் அறிய முடிகின்றது.