உள்ளடக்கத்துக்குச் செல்

அரசியர் மூவர்/இளைய மென்கொடி (சுமித்திரை)

விக்கிமூலம் இலிருந்து


5. இளைய மென்கொடி

இருவகைப் படைப்புக்கள்

கம்பன் என்ற கலைஞன் படைத்த எழுநிலை மாடங்கள் இராமன், இராவணன், இலக்குவன், பரதன், சீதை போன்றவர்கள். இத்துணைப் பெரிய மாடங்களைப் படைக்கும் ஆற்றல்சால் கலைஞனாகிய கம்பனே, இரண்டங்குல உயரமே உடைய தந்தப் பதுமைகளையும் படைத்துளான். 'பெரிய கலைப் படைப்பில் மட்டுமே அவனது வன்மையைக் காட்ட வாய்ப்பு இருந்தது ; எனவே, அவற்றை ஒப்புயர்வற்ற முறையில் படைத்துவிட்டான்,' என்று யாரும் நினைத்துவிட வேண்டா. அளவால் மிகச் சிறிய படைப்புகளிலும் அவன் கலைத் திறனையும் படைப்பு வன்மையையும் நன்கு காணலாம். அவனைப் பொறுத்த வரை இவ்விருவகைப் படைப்புகளும் ஒன்று தான். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' அன்றோ? படைக்கின்ற அவனுக்கு இவை இரண்டும் ஒன்றேயாயினும், அனுபவிக்கின்ற நம்மைப் பொறுத்த வரை ஒரு வேறுபாடு உண்டு.

பெரிய படைப்புக்களை எளிதிற்காணலாம்; அனுபவிக்கலாம். இரண்டொரு நுண்மையான பகுதிகளை நாம் காணத் தவறி விட்டாலும், தீங்கு ஒன்றும் இல்லை. அதனால், கலைப் பொருளினது முழுத் தன்மை கெட்டுப் போவதில்லை. அந்நுண் பகுதிகளைப் பற்றிய சிறப்பை நாம் அறிந்து அனுபவிக்கவில்லை என்ற குறைபாட்டைத் தவிர, முழு அழகையும் அனுபவிக்க இத்தவறு குறுக்கே நிற்பதில்லை. மேலும் இத்துணைப் பெரிய படைப்பை அண்மையில் நெருங்கிக் காணாமல் தூரத்தே இருந்தபடியே கூட அனுபவிக்கலாம்.

மிக நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிறிய தந்தச் சிற்பத்தைக் கண்டு அனுபவிக்க வேண்டுமாயின், தூரத்தே இருந்து கண்டு பயனில்லை. மிகவும் அண்மையில் இருந்தே காண வேண்டும். பல சந்தருப்பங்களில் 'பெருக்காடி' (Magnifying glass) கொண்டு காண நேரிடுவதுமுண்டு. அப்பொழுதுதான் அச்சிற்பத்தின் முழு அழகையும் அனுபவிக்க முடியும். சில பகுதிகளைக் காணா விட்டாலும் தவறில்லை என்று இங்கே கூற முடியாது. சிறு பகுதிகளை விட்டு விட்டால், முழு அழகையுமே இழக்கநேரிடும். எனவே, மிகவும் கவனத்துடன் கையில் கொண்ட பெருக்காடியுடன் இச்சிற்பச் சிறப்பைக் கண்டுகளிக்க வேண்டும்.

இளையவளா, மூத்தவளா?

தசரதன் மனைவியும் இலக்குவன் தாயுமாகிய சுமித்திரை இராம காதையுள் இலைமறை காயாகவே இருந்து வருகிறாள். கோசலையும் கைகேயியும் பெற்ற அளவு பாடல்கள் கூட இவள் பெறவில்லை. அதிகப்பாடல்கள் பெறாமையின் இவளுடைய சிறப்புக் குறைந்துவிட்டதாக நினைத்துவிட வேண்டா. இராமனுடைய நிழல் என்று கூறும்படி இலக்குவன் உடனுறைவதைக் காண்கிறோம். அதே போல, இராமனைப் பெற்ற தாயான கோசலையின் நிழல் என்று கூறும்படி இலக்குவனைப் பெற்ற தாயான சுமித்திரை அமைந்து விடுகிறாள். கம்பராமாயணம் முழுவதிலும் இவளைப்பற்றி வரும் பாடல்கள் ஏறத்தாழப்பத்துக்குள்ளாகவே அமைந்துள்ளன. ஒரே ஒரு முறைதான் இம்மாதரசி வாய் திறந்து பேசுகிறாள். ஆம் இவளுடைய இரண்டாவது அருமை மைந்தன் சத்துருக்கனனும் ஒரே ஒரு முறை தான் பேசுகிறான். என்றாலும் என்ன?

“பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். (குறள்.649)



என்ற குறளுக்கு எதிர்மறை இலக்கியமாகிவிட்டனர் தாயும் மைந்தனும். காப்பியத்தில் இவ்வளவு சிறிய இடத்தைப் பெறினும், சுமித்திரை கற்பார் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுவிடுகிறாள். காப்பியத்தில் மட்டும் என்ன தசரதன் மனத்திலுங்கூட இவள் மிகச் சிறிய இடத்தையே பெற்றுள்ளாள் என்று நினைக்க வேண்டியுளது.

முதனூலாசிரியராகிய வான்மீகியார் சுமித்திரையைத் தரசத னுடைய இரண்டாம் மனைவியாகவும் கைகேயியை மூன்றாம் மனவிையாகவும் கூறுகிறார். ஆனால், கம்ப நாடன் கைகேயியை இரண்டாம் மனைவியாக்கிச் சுமித்திரையையே மூன்றாம் மனைவியாக்குகிறான். அதனால் சுமித்திரையை'இளைய மென்கொடி’(284) என்று குறிக்கிறான். இந்த முறை மாற்றம், மேலாகக் கவனிக்கும் பொழுது பெரிதாகப்படாமற் போயினும், ஆழமான உட்கருத்துடன் செய்யப்பட்டிருத்தலை ஆய்பவர் காண்டல் கூடும். கைகேயியை இளையாளாகக் கூறிய வான்மீகியார் இலக்குவன் கூற்றாகவும், தம் கூற்றாகவும் தசரதனைப் பன்முறையும் 'காம பரவசன்' என்று கூறிப் போகிறார். இவ்வாறு கூறாவிட்டாலுங்கூடக் கைகேயியை இளையாள் என்று கூறிய உடன் தசரதன் செயல்கட்குப் புதுப்பொருள் காணும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. கைகேயிக்குத் தசரதன் வரம் தந்த நிகழ்ச்சி இப்பொழுது புதிய கோணத்தில் காட்சி அளிக்கிறது. வாய்மையைக் காக்க வேண்டி அவன் வரமீந்தாலுங்கூட, அவ் வரத்தைப் பெற்றுக் கொண்ட கைகேயி இளமனைவி என்றால், பொருள் வேறாகிவிடுகிறதன்றோ? 'வாய்மை காப்பாற்றுவதைப் பற்றித் தசரதன் கவலையுறவில்லை. இளமனைவியைத் திருப்திப் படுத்தவே வரமீந்தான் போலும்' என்று சிலர் மனத்திலாதல் தோன்றக் கூடும். 'பனைமரத்துஅடியில் நின்று பாலைக் குடித்தாலும், உலகம் கள்ளெனக் கொள்ளும்,' என்ற தமிழ் நாட்டு முதுமொழி பெரும்பான்மை தவறுவதில்லை. வான்மீகியார் கூற்றின்படி தசரதனுடைய மூன்றாம் மனைவியாகக் கைகேயியைக் கூறினால், இந்தக் குற்றம் தசரதன்மேல் வருவதை யாரும் தடுக்கவியலாது. மாற்றக் காரணம்

இக்குறைபாட்டை நன்கு அறிந்தான் கம்பநாடன், வாலி முதல் அனைவராலும் தசரதன் 'வாய்மை காத்தவன்' என்று புகழப் படுகின்றான். “வாய்மையும் மரபுங் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன்" (வாலி 4018) என்பது வாலியின் கூற்று. இவ்வாறு தசரதன் புகழப்பட வேண்டுமாயின், அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. தசரதன் கைகேயிக்கு வரம் ஈந்தது, தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றவே அன்றி, அவளுடைய இளமை அழகில் மயங்கி அன்று என்பதை வெளிப்படுத்த வேண்டும். கைகேயியின் மாட்டுத் தான் கொண்ட கழிபெருங்காதலைப் பிறர் அறியும் படியே அரசன் காட்டிக்கொண்டு வாழ்கிறான். இந்நிலையில் அவள்தான் இளை யவள் என்று கூறப்படுமானால், அவனுடைய காதல் அவளுடைய புற அழகில் ஈடுபட்டுத் தோன்றியதே என்று கொள்ள நேரிடும். இந்த இடுக்கணைத் தீர்ப்பதற்குக் கம்பன் கையாண்ட வழியே சிறந்தது. இவ்வாறு அவளை மூத்தவளாக்கிச் சுமித்திரையை இளையாளாக்கியதால், மற்றொரு பயனும் கிடைக்கிறது. கைகேயி தான் இளையாள் என்ற காரணத்தால் தன் அழகைத் துணையாகக் கொண்டு தன் கருத்தை நிறைவேற்றிவிட்டாள் என்ற பழிச் சொல்லும் இல்லாமற் போகுமன்றோ? இளையாளாக சுமித்திரை இருக்கவும் தசரதன் கைகேயிமாட்டு அதிக அன்பு செலுத்தினான் எனின், அஃது அவளுடைய சிறந்த பண்பாட்டைக் கருதியே என்றுதான் நினைக்கத் தோன்றும். எனவே, தலையாய கலைஞனாகிய கம்பநாடன் வால்மீகியின் போக்கை மாற்றியமைத்ததால் இரண்டு பெரிய செயல்களைச் செய்துவிடுகிறான். முதலாவது, தசரதன் மீது ஏற்படும் அடாப்பழியைக் குறைத்தது. இரண்டாவது, கைகேயியின் மீது ஏற்படக் கூடிய பழியைக் குறைத்தது. மூலத்திலிருந்த கதைப் போக்கை மாற்றும் இடங்களில் எல்லாம் கம்பன் ஒரு பெரும்பயனை விளைக்க வேண்டியே மாற்றுகிறான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.  முதற்சந்திப்பு

சுமித்திரையை நாம் முதன்முதல் சந்திப்பது யாகசாலை யிலாகும். அவியுணவை மனைவியர் மூவர்க்கும் தரத்தொடங்கிய தசரதன், முதலில் கோசலைக்குத் தந்தான்; எஞ்சியுள்ளதில் ஒரு பகுதியைக் கைகேயிக்குத் தந்தான்; எஞ்சியதைச் சுமித்திரைக்குத் தந்தான். இவ்வாறு அவன் தந்த முறையிலும் சுமித்திரை தான் மூன்றாம் மனைவி என்பதைப் பெற வைக்கிறான் கவிஞன். அனைவர்க்கும் தந்த பிறகும் தட்டில் உதிர்ந்து கிடந்தது ஒரு சிறு பகுதி. அதனை வயதாற் சிறியவளாய சுமித்திரைக்கே மீட்டும் தந்தான். இவ்வாறு தசரதன் இரண்டாம்முறை சுமித்திரைக்கே தந்தது சாலவும் பொருத்தம் உடையது. உண்ணும் பொருள்களில் அதிகப்படியானதை இன்றும், ஆண்டில் இளையவர்க்குத் தருதலே மரபாகும். எவ்வளவு தான் கைகேயியிடம் மன்னன் அதிகப்பற்று வைத்திருப்பினும், அதை இப்பொழுது காட்டவில்லை. ஆண்டால் இளையவள் என்ற ஒரே காரணத்திற்காகப் போலும் எஞ்சியதைக் கைகேயிக்குத் தாராமல் சுமித்திரைக்கே தந்துவிட்டான் அவன் இருமுறை சுமித்திரைக்கு அளித்ததை இதோ கவிஞன் பாடுகிறான்.

"நமித்திரர் நடுக்குறும் நல்ங்கொள் மொய்ம்புடை
நிமித்திரு மரபுளான் முன்னர் நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன்; சுரர்க்கு வேந்து, 'இனிச் சமித்ததுஎன் பகை எனத் தமரொடு ஆர்ப்பவே.
“தன்னையும் சுமித்திரை தனக்கு நல்கினான்.”
(269.270)


(பகைவர்கள் நடுங்கும்படியான பலத்தையுடைய நிமி என்னும் அரசனது மரபில் பிறந்தவனாகிய தசரதன் சுமித்திரைக்குத் தந்தான். அவன் தந்தவுடன் தேவேந்திரன், 'என்பகை அழிந்தது' என்று சுற்றத்தோடு மகிழ்ந்தான். மறுபடியும் சிதறியதைத் தசரதன் அவளுக்கே அளித்தான்.) .

இவை இரண்டு பாடல்களின் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியை அறிய முடிகிறதே தவிர, கமித்திரையைப் பற்றி ஒன்றும் அறியக் கூட வில்லை. மன்னன் மறுமுறை தந்ததைத் தடை கூறாமல் ஏற்றுக் கொண்டாள் என்றுமட்டும் அறிய முடிகிறது. மேலும், தான் இளையாளாய் இருந்தும் மன்னன் தன்பால் ஒன்றும் தனிப்பட்ட முறையில் பரிவு காட்டவில்லையே என்று அவள் வருந்தவில்லை என்பது அறிய முடிகிறது. அன்றியும், ஆண்டில் மூத்தாளாய கோசலை முதலில் பெற்றதற்காக அவள் மாட்டுப் பொறாமை கொள்ளவில்லை என்றும் அறிகிறோம்.

இரண்டாம் சந்திப்பு

இனி அடுத்து நாம் சுமித்திரையைக் காண்பது அவள் கரு வுயிர்த்த காலத்திலாகும். அங்கு அவள் ஒன்றும் பேசக்கூடிய நிலையில் இல்லை. நாமும் அவள் பேசுவாள் என்று எதிர் பார்க்கவும் இல்லை. ஏனைய அரசியர் இருவரும் மைந்தரைப் பெற்றது போலவே அவளும் முதலில் ஒரு மைந்தனைப் பெற்றாள்.

“இளையவன் பயந்தனன் இளைய மென்கொடி” (284)

என்று கவிஞன் அதனைக் குறிக்கிறான். சுமித்திரை சிறிது நேரம் தாழ்த்து மீட்டும் ஒரு புதல்வனைப் பெற்றாள். முதலில் பிறந்த இலக்குவனுடைய பிறப்பைக் கூறவந்த கவிஞன் இந்திரன் மகிழும்படி பிறந்தான் என்றான்; ஆனால், சந்துருக்கனன் பிறப்பைக் கூறும் பொழுது இவ்வுலத்தார் மகிழ அவன் பிறந்தான் என்கிறான்.

“படங்கிளர் பல்தலைப் பாந்தள் ஏந்துபார்
நடங்கிளர் தரமறை நவில நாடகம்
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட
விடங்கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள்.” (285)

(ஆதிசேடனாலே தாங்கப்பெற்ற இப்பூமி மகிழ்ச்சி அடையவும், வேதங்கள் மகிழ்ச்சி நடனம்புரியவும் சிம்மராசியிலே மக நாண் மீனில் தவறாகப் பார்க்கின்றவர்களுக்கு விஷம் கக்கும் கூரிய விழியையுடைய சுமித்திரைமீட்டும் ஒரு மகனை ஈன்றாள்.)

ஏனையோர் போல ஒரு மகனை அல்லாமல் இரு மைந்தரைப் பெற்றதால் சுமித்திரை அதிகம் மகிழ்ந்தாளா, அன்றி வருந்தினாளா  என்பது பற்றிக் கவிஞன் ஒன்றும் கூறாமல் விட்டுவிட்டான். இப் பொழுதும் அவள் கூற்றாக ஒன்றும் பேச்சு இன்மையின், அவள் மனத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக்குக் கிட்டவில்லை.

சீற்றம் விளையாத நிலம்

சுமித்திரையை அனைவரும் மறந்துவிட்ட நேரம். தலைநகரம் அல்லோலகல்லோலப்படுகிறது. அரசன் கைகேயி கோயிலில் மயக்கமுற்ற நிலையில் இருக்கிறான். இராமனைக் காடு செல்ல உத்தரவிட்டுவிட்டாள் கைகேயி. இராமனும் கோசலை கோயில் புகுந்து அவள் வருத்தத்திற்கு ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்டு வருகிறான். வெளியே உயிரினும் இனிய தம்பி இலக்குவன் கடுஞ் சீற்றம் உற்றவனாய்ப் போருக்குத் தயாராகிறான். சுமித்திரையின் அடக்கம் எங்கே, அவள் அருமை மைந்தன் இலக்குவன் சீற்றமும் படபடப்பும் எங்கே! நினைக்கவும் முடியவில்லை இலக்குவன் சீற்றத்தின் எல்லையை

". . . . . . . . . . . . . . . .யாவராலும்
மூட்டாத காலக் கடைத்தீஎன மூண்டு எழுந்தான்."
(1716)
அவன் நின்ற நிலை ஆதிசேடனை நினைவூட்டுகிறது.
"அண்ணல் பெரியோன் தனதுஆதியின் மூர்த்தி -
ஒத்தான்."(1717)


இலக்குவனுடைய வில்லின் நானொலி கேட்டு இராமன் ஓடோடியும் வருகிறான். தம்பியின் கோலத்தைக் காணத் தமை யனுக்கு வியப்பே மேலிடுகிறது. இலக்குவன் கைகேயி மேலும் பரதன் மேலும் தீராத சினம் கொண்டுள்ளான் என்பதை அறிந்த இராமனுக்கு ஒரு கணம் சுமித்திரை நினைவு தோன்றுகிறது. அவளுடைய அடக்கமும், அன்பும், தியாக புத்தியும் நினைவுக்கு வருகின்றன. அமைதியே வடிவான சுமித்திரை மகனா இலக்குவன்  என்று அவன் வியப்படைந்துவிட்டான். தாய் தந்தையருடைய பண்பாடுகள் தாமே குழந்தைக்குப் படியும் என்று கூறுவார்கள்? அவ்வாறானால், இலக்குவனுக்கு இத்தகைய மனப்பான்மை எங்கிருந்து வந்தது? எங்கிருந்து வந்தாலும், அவன் தோன்றி வளர்ந்த அவ்வருமைத் தாயின் மனத்திலும் இத்தகைய சீற்றத்திற்கு இடமே இல்லை. இவ்வாறு நினைந்த இராமன் இலக்குவனை நோக்கி இதோ கேட்கிறான். "ஐயனே, நேர்மையான நீதிக்கு மாறாமல் உன் அறிவு அமைந்திருக்கும் அல்லவா? அழியாத அறம் கெடும்படியாகவும் நன்னெறிக்கு மாறாகவும் உள்ள கோபத்திற்குச் சற்றும் இடம் கொடாதவள் உன் தாய். அவள் வயிற்றில் வளர்ந்த உனக்கு இக்கோபம் எங்கே தோன்றியது?” என்னும் கருத்துப்பட இதோ பேசுகிறான்.

“இளையான் இதுகூற, இராமன், இயைந்த நீதி
வளையா வரும்நன் னெறிநின் அறிவுஆகும் அன்றே?
உளையா அறம்வற்றிடஊழ் வழுவுற்ற சீற்றம்
விளையா தநிலத் துஉனக்குஎங்ஙன் விளைந்தது?'
என்றான்.” (1730)


'விளையாத நிலத்துத் 'தோன்றிய' அல்லது பிறந்த உனக்கு எவ்வாறு வந்தது?' என்று தோன்றிய என ஒரு சொல் வருவித்து ஈற்றடிக்குப் பொருள் கொள்ளல் நலமோ என்று நினைக்க வேண்டியுளது. பிறர் இந்த அடிக்கு “விளையாத உன் மனத்தில் எங்ங்ணம் இக்கோபம் தோன்றிற்று?” என்று பொருள் கூறுகின்றனர். 'நிலத்து' என்ற சொல்லுக்கு 'மனத்தில்' என்று அவர்கள் பொருள் கூறுகின்றார்கள். ஆனால், 'நிலத்து' என்றசொல்லுக்கு(கமித்திரை)'வயிற்றில்' என்று பொருள் கொண்டு 'தோன்றிய' என்ற ஒரு சொல்லையும் வருவித்துக் கொண்டால் பெருள் சிறந்து விடுகிறது. 'விளையாத நிலத்துப் பிறந்த உனக்கு' என்று பொருள் கொள்வது சுமித்திரையைப் பற்றி இராமன் கொண்டிருந்த கருத்தையும் அறிய இடம் தருகிறது. இராமன் கமித்திரையைச் சந்திக்கும் இடத்தில் அவள் நடந்து கொள்ளும் விதம் இவ்வாறு பொருள் கொள்வது சரியே என்று சான்று பகர்கிறது. இராமன் பெருஞ்சீற்றத்துடன் இருந்த இலக்குவனை அமைதி யடையச் செய்தபின் இருவரும் சுமித்திரையிடம் செல்கின்றனர். இதற்குள் அப்பெருமாட்டிக்கு எவ்வாறோ செய்தி எட்டிவிட்டது. வருகின்ற மைந்தர் இருவரும் காடு செல்லும் உறுதியுடன் வருகின்றனர் என்ற கருத்துடன் அவர்களை அத்தாய் பார்க்கிறாள்.

“கண்டாள் மகனும் மகனும் தனகண்கள் போல்வார்
தண்டா வனம்சார் வதற்கே சமைந்தார்கள் தம்மை ;
புண்தாங்கு நெஞ்சத் தினளாய்ப் படிமேற்பு ரண்டாள்
உண்டாய துன்பக் கடற்குஎல் லைஉணர்ந்தி லாதாள்.”
(1744)


(தன் இரு கண்கள் போல்வாராகிய பெற்ற மகனும் பெறாத மகனும் வனம் சேர்வதற்குத் தயாராக வருவதைக் கண்ட சுமித்திரை, புண் நிறைந்த நெஞ்சத்தை உடையவளாகி பூமிமேல் விழுந்து புரண்டாள்.)

இருவரும் வருவதைக் கண்டாள் அவள், ஆனால், இராமன் காடு செல்ல வேண்டும் என்றுதான் கைகேயி கட்டளை இட்டாளே தவிர, இலக்குவனைப் பற்றி அவள் ஒன்றும் பேசவில்லையே! அவனும் வனம் போகப்போகிறான் என்று சுமித்திரையிடம் யார் கூறினார்கள்? இலக்குவன் தானும் உடன் வருவதைக் குறித்து (இராமனிடம் கூட) ஒன்றும் கூறவில்லையே அவ்வாறிருக்க, இருவரும் வனம் புகப் போகின்றனர் என்று சுமித்திரை நினைக்க என்ன நிகழ்ந்தது? ஒன்றும் இல்லை, என்றாலும், மகன் செல்லப் போகிறான் என்ற முடிவுடன் இருக்கிறாள் (அத்தாய்) என்றால், தான் பெற்ற மகன் என்ன செய்வான் என்பதை அறிந்திருந்தாள் என்பதே கருத்து. தாயும் மைந்தரும்

இலக்குவனைக் கண்டு அத்தாய் ஒரு சொல் கூடச் சொல்ல வில்லை. அவள் மைந்தன் என்ன செய்யக்கூடும் இத்தகைய சந்தருப்பத்தில் என்பதை நன்கு அறிந்தாள் எனில், அதற்குக் காரணம் யாதாய் இருத்தல் கூடும்? தன்னைத்தான் நன்கு அறிந்திருந்த சுமித்திரை, தன் வயிற்றில் பிறந்த மைந்தன் எவ்வாறு நினைப்பான் என்பதையும் அறிந்துள்ளதில் வியப்பொன்றும் இல்லை. 'தாயைத் தண்ணீர்த்துறையில் பார்த்தால் பிள்ளையை வீட்டிற் சென்று பார்க்க வேண்டா,' என்பது தமிழ் நாட்டு முதுமொழி. இராமன் மாட்டும், அவன் தாயாகிய கோசலை-மாட்டும் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தாள் சுமித்திரை. இவள் காட்டிய அன்பைக் கோசலையும் பிரதிபலிக்கிறாள்.

இராமனுடைய முடி சூட்டலைத் தோழிகள் மூலமே முதலிற் கேள்விப்படுகிறாள் கோசலை ; எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறாள். ஆனால், இராமனை வளர்த்தவளாகிய கைகேயியிடம் தன் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று ஏனோ அவள் நினைக்கவில்லை? அதற்கு மறுதலையாகச் சுமித்திரையிடம் செல்கிறாள் அம்மாதரசி. இராமன் பொருட்டுக் குல தெய்வத்தை வணங்க வேண்டும் என்று கருதிய அவள், சுமித்திரையை உடன் அழைத்துக்கொண்டு செல்கிறாள். கோசலையின் இச்செயலைக் குறிக்க வந்த கவிஞன், ஒர் அடைமொழி தருகிறான் சுமித்திரைக்கு.

"துன்னு காதல் சுமித்திரை யோடும்போய்
மின்னு நேமியான் மேவிடம் மேவினாள். (1404)

கோசலை தன் ஆசைக்குப் (காதல்) பாத்திரமான (துன்னு) சுமித்திரையோடும் திருமால் கோயிலுக்குச் சென்றாளாம் பூசனை புரிய, வயதால் முதிர்ந்த கோசலையின் ஆசைக்குப் பாத்திரமானவள் வயதால் இளைய சுமித்திரையா? முறைப்படி இருக்கவேண்டுமாயின்,  கோசலை தனக்கடுத்த கைகேயியிடம் அல்லவா அன்பு பாராட்ட வேண்டும்? மேலும், கைகேயி தானே இராமனைப் பரிவுடன் வளர்ப்பவள்? அவ்வாறிருந்தும், கோசலையின் காதல் சுமித்திரை யிடம் செல்லக் காரணம் யாது? விடை எளிதில் காணக் கூடியதே. ஆண்டால் இவர்கள் இருவரிடையேயும் வேறுபாடிருப்பினும், ஏனைய பல ஒற்றுமைகள் இலங்கக் காணலாம். அவற்றுள் தலையாய ஒன்று, இருவருமே தசரதனால் அதிகம் கவனிக்கப்படாதவர் என்பதுதான். கைகேயியிடம் அரசன் கொண்ட கழிபெருங்காதல் ஏனையோரைக் கவனியாதபடி செய்துவிட்டது. ஆண்டால் இளைய சுமித்திரையைக் கூட அவன் கவனியாமல் விட்டது வியப்பேயாகும். இந்த ஒரு காரணமே சுமித்திரையைக் கோசலைபால் செலுத்தி இருக்க வேண்டும். இருவரும் துன்புறுவது ஒரே காரணத்தாலாகலின், இருவரும் அதிகம் நெருங்கி ஒருவர் மாட்டு ஒருவர் அன்பு கொள்ளலாயினர். யாவரினும் மூத்தவளும் யாவரினும் இளையவளும் ஒன்று கூட இதைத்தவிர வேறு காரணம் காண்டல் அரிதாகும். மகிழ்ச்சி, துயரம் என்ற இரண்டையும் பகிர்ந்துகொள்ள இவ்விருவரும் ஒருவர் மற்றவரை நாடலின் உட்கருத்தும் இதுவேயாம்.

இக்காரணத்தோடல்லாமலும் சுமித்திரையின் இயற்கையான நற்பண்புகள் யாவராலும் போற்றப்பட்டன. கோசலை, இராமன் ஆகிய இருவரும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் பண்புடையவளாய்ச் சுமித்திரை இருந்ததை நன்கு அறிகிறோம். எனவே, அவள் மைந்தனாகிய இலக்குவனும் அவளுடைய நற்பண்புகளைப் பெற்றிருப்பான் என்று எதிர்பார்ப்பதிலும் தவறில்லையல்லவா? இதனை மனத்துட் கொண்டுதான் போலும் இராகவன் இலக்குவன் சீற்றத்தைப் பார்த்துக் கூறுகையில், -

“ விளையாத நிலத்து உனக்கு எங்ஙணம் விளைந்தது? என்றான்.”



தாய் துயரும் மகன் விடையும்

இந்த அடிப்படையில் சுமித்திரையைக் காணும்பொழுது அவள் செய்த செயலின் உட்கருத்தை நன்கு உணர முடிகிறது. மைந்தர் களைக் கண்ட மாத்திரையில் தரைமேல் வீழ்ந்து புரண்டு அழுத சுமித்திரையை மைந்தர் இருவரும் தேற்ற முற்படுகின்றனர். அவளுக்கு மன அமைதி கூறவந்த இராகவன் கூறியவார்த்தைகள் ஆழ்ந்து நோக்கற்குரியன.

“சோர்வாளை ஒடித் தொழுதுஏத் தினன்துன்பம் என்னும் ஈர்வாளை வாங்கி மனம்தேற் றுதற்குஏற்ற செய்வான்
'போர்வாள் அரசர்க்கு இறைபொய்த் தனன்ஆக்க
கில்லேன்
கார்வான் நெடுங்கான் இறைகண்டு இங்ஙணமீள்வன்,' என்றான்." (1745)

(மனம் சோர்ந்து வீழ்ந்த கமித்திரையின் திருவடிகளில் தொழுது அவள் மனத்தில் பதிந்த துன்பம் என்னும் வாளை எடுத்துவிட்டு மனந்தேற்றவந்த இராமன் கூறினான் : "சக்கரவர்த்தியைப் பொய்யனாக்க யான் விரும்பவில்லை. காட்டைச் சற்றுப் பார்த்துவிட்டு உடன் மீண்டு விடுகிறேன்.")

இப்பாடலின் மூன்றாவது அடி கவனித்தற்குரியது. 'அரசனைப் பொய்யனாக்க யான் விரும்பவில்லை, என்று இராமன் ஏன் கூற வேண்டும்? அரசன் பெயரிலோ, கைகேயி பெயரிலோ சிறிதும் ஐயங்கொள்ளவில்லையே சுமித்திரை கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் இன் னும் வெளிவரவில்லையே! அவ்வாறு இருக்க, இராமன் இதனை ஏன் கூறவேண்டும்? இதனை முதலிற்கூறிவிட்டு அடுத்தபாடலில், 'யான் எங்கிருப்பினும் அதுவே எனக்கு அயோத்தியாகும். எனக்கு யார் துன்பஞ் செய்யப்போகிறார்கள்? நீங்கள் என்பொருட்டுச் சிறிதும் வருந்த வேண்டா,' என்று கூறுகிறான். இது முறைதான். வருந்துகிறவர்களை 'வருந்த வேண்டா,' என்பதற்குக் காரணம் காட்டி,  'வருந்தற்க' என்று கூறுவது முற்றிலும் பொருத்தமானதே! ஆனால், இதனைக்கூடக் கூறுவதற்கு முன்னர் அரசனைப்பற்றிய குறிப்பு ஏன் வர வேண்டும்? அறிவிற் சிறந்த இராமன் இதை எளிதிற்கண்டு கொண்டான். அவன் தன் தாயாகிய கோசலையிடம் சென்றபொழுது அவள் ஒன்றும் அறியாதவளாய் நின்று கொண்டு அவனையே நோக்கி,

“நினைந்ததுஎன்? இடையூறு உண்டோ நெடுமுடி
புனைதற்கு? என்றாள்.” (1607)

ஆனால், தன்னைக் கண்ட மாத்திரையில் கீழ் வீழ்ந்து அழுகிறாள் சுமித்திரை என்றால், அவள் முன்னரே இது பற்றி அறிந் துள்ளாள் என்பது தானே கருத்தாகும்?

நடைபெற்ற நிகழ்ச்சி ஓரளவு கமித்திரைக்குத் தெரிந்து விட்டதென்பதை இராமன் அறிந்து கொண்டான், ஆனால், இது யாரால் நடைபெற்றது என்பதை அவள் அறிவாளா இல்லையா என்பதை அவன் அறியான். எனவே, அவள் கைகேயிமேல் ஐயப்பட்டு வீண் வருத்தம் கொள்வதைக்காட்டிலும் முதலிலேயே அவளுக்கு உண்மையை உண்ர்த்தி விடவேண்டும் என்று கருதினான். அவ் வாறாயின் உடனே அவள் வருத்தம் கணவனாகிய தசரதன் மேல் திரும்பிவிடலாமன்றோ? அதையும் இராகவன் விரும்பவில்லை. எனவே, மிகவும் ஆராய்ந்த சொற்களால் தசரதனும் வேறு வழி இல்லாமல் அகப்பட்டுக்கொண்டான் என்று கூறுவானைப் போலப் பேசுகிறான். “அரசனைப் பொய்யனாக்க'யான் விரும்பவில்லை,” என்று கூறுவதால், அரசன் முன்னரே வாக்குக் கொடுத்து அதில் அகப்பட்டுக்கொண்டான் என்ற கருத்தையும் தெரிவித்துவிட்டான். அறிவிற்சிறந்த சுமித்திரை ஒரு நொடிப் பொழுதில் இச்சொற்களின் உட்பொருளை உணர்ந்துகொண்டாள். இது தருமசங்கடமான நிலை என்பதும் அவளுக்கு விளங்கிவிட்டது. கணவன், மைந்தன் என்  இருவருள் ஒருவரை இழந்துதான் மற்றவரைக் காக்க முடியும் என்பதை அவளுடைய கூர்த்த மதி உடன் கண்டுகொண்டது.

எனவே, அவள் அடுத்துச் செய்யப்படவேண்டுவதைப் பற்றி ஒரு வினாடி நினைந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். இதுவரை இராமன் பேசும்பொழுது மிகவும் கவனத்துடன் தன்மை ஒருமையையே பயன் படுத்துகிறான். உடன் நிற்கும் இலக்குவனை அவன் உளப்படுத்தவே இல்லை.

'கான்இறை கண்டு இங்ஙன் மீள்வன்.'

'எனையார் நலிகிற்கும் ஈட்டார்?’ (1745,1746)

இவ்வாறு இராமன் கூறினாலும், சுமித்திரை இலக்குவன் விஷயத்தில் முன்னரே ஒரு முடிவிற்கு வந்துவிட்டாள்.

இலக்குவன் குறிப்பு

இந்நிலையில் கைகேயியிடமிருந்து வந்த பணிப் பெண்கள் மரவுரியைத் தாங்கி வந்தார்கள். அவர்கள் மரவுரியை இராமனுக்காகவே கொணர்ந்தாலும் தான் முன்னே நின்றமையின், இலக்குவனே அதைப் பெற்றுக்கொண்டான். பெற்றுக்கொண்ட பிறகே இலக்குவனுக்கு ஒர் ஐயம் தோன்றிற்று. இராமனுடன் வனஞ் செல்ல வேண்டும் என்று விரும்பிய தன்னைத் தாய் மனவமைதியுடன் ஏற்றுக்கொள்வாளா என்பதே அவனது ஐயம். தந்தையிடம் உத்தரவு பெற அவன் விரும்பவில்லை. அவனைப் பொறுத்த வரையில் தசரதன் ஒரு பகைவனே ஆகிவிட்டான். எனவே, அவனைப்பற்றி இலக்குவன் கவலைப்படவில்லை. என்றாலும், சுமித்திரையாது கூறுவாளோ என்ற ஐயம் மட்டிலும் அவனை வருத்துகிறது. இராமனையும் உடன் வைத்துக்கொண்டு தாயிடம் தன் கருத்தைக் கேட்பது நாகரிகம் அற்ற செயலாகும். கேளாவிட்டாலும், மிஞ்சிவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும். யாது செய்யலாம்? என்று நினைந்த இலக்குவன், ஒரு முடிவுக்கு வந்தான்; தாயின் நுண்ணிய அறிவை  நன்கு அறிந்தவனாகலின், தன் முடிபைக் குறிப்பால் அவளுக்கு உணர்த்த முடிவு செய்தான்.

மரவுரி தந்தவர்களிடமிருந்து அதைப் பெற்றுக் கையில் வைத் துக் கொண்டு, உடனே விழுந்து தாயை வணங்கினான். மரவுரியைக் கையிலேந்தி வணங்கியதால் தாய் அக்குறிப்பை அறிந்துகொள்வாள் எனக் கருதினான் மைந்தன். ஆனால், சுமித்திரை முன்னமே இது பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டதை அவன் அறிந்து கொள்ள வில்லை. இவ்வாறு பின்வரும் பாடலுக்குப் பொருள் கூறாமல் அவன் வாய்விட்டுக் கேட்டான் என்று கூறுவதால் ஏற்படும் சுவைக் குறைவை அறிக.

"அன்னான் அவர்தந்தன ஆதரத் தோடும் ஏந்தி
இன்னா இடர்தீர்ந்து, 'உடன்ஏகு எனஎம்பி ராட்டி
சொன்னால் அதுவே துணையாம்' எனத்தூய நங்கை
பொன்னார் அடிமேல் பணிந்தான்; அவளும் புகன்றாள்.” (1750)


'அதுவே துணையாம் என என்ற தொடருக்கு இவ்வாறு என் தாய் கூறினால் அதுவே நலமாகும் என்று நினைத்து' என்று பொருள் கொள்ளுதல் நேர்மையானது. 'என' என்ற சொல்லுக்கு 'என்று நினைத்து' என்று ஒரு சொல் வருவித்துப் பொருள் கொள்ளுதலி னால் தவறில்லை.

முதற்பேச்சு

இலக்குவன் இக்குறிப்பை மனத்தில் வைத்துக் கொண்டு வணங்கினவுடன் சுமித்திரை பேசுகிறாள். இராமாயண வரலாற்றில் இப்பொழுதுதான் வாய் திறந்து அம்மாதரசி பேசுகிறாள். இரண்டு பாடல்கள் அவள் கூற்றாய் அமைந்துள்ளன. 'இராமன் செல்லும் அந்த வனம் உனக்கு மட்டும் செல்லத் தகாதது அன்று (உடன் செல்லலே உனக்குத் தகுதி); அந்த வனமே உனக்கு இனி அயோத்தியாகும். மிகுதியும் உன்பால் அன்பு கொண்ட இராமனே மன்னனாவான். இவ்வுலகை இராமன் பரதனுக்கு ஈந்துவிட்டுக் காடு செல்கிறான் என்பதை அறிந்தும் உயிரை வைத்துக் கொண்டிருக்கும் நாங்கள் உன் தாயார் அல்லேம். சீதையே உன் தாயாவாள். உடனே புறப்படு. இனி நீ காலந் தாழ்த்தலும் முறையன்று' என்னும் கருத்துப்பட,

“ஆகாதது அன்றால் உனக்குஅவ் வனம்.இவ்வ யோத்தி,
மாகாதல் இராமன் அம்மன் னவன்;'வையம் ஈந்தும்
போகா உயிர்த்தாயர் நம்பூங் குழற்சீதை என்றே
ஏகாய்; இனிஇவ் வயின்நிற்றலும்ஏதம், என்றாள்.”
(1751)


இலக்குவன் தன்னுடைய தாய் எங்கே உத்தரவு தர மறுத்துவிடுவாளோ என்று ஐயுற்றதற்கு நேர்மாறாக, இவ்வாறு சுமித்திரை கூறிவிட்டாள். இச்சொற்களில் எவ்வளவு தூரம் அவளுடைய உள்ளக் கிடக்கையை வெளியிட்டுவிட்டாள்! தான் பெற்ற மகன் காடு செல்வதை எந்தத் தாய்தான் விரும்புவாள்? ஆனாலும், இதோ ஒரு தாய் மகனைச் செல்க என்று ஏவுகிறாளே! இது முறையா? இலக்குவன் மன நிலையை நன்குனர்ந்த தாயாகலின், இவ்வாறு பேசுகிறாள். தாமரைப்பூ நீரில் வாழும் இயல்புடையது. கொடிய பணியாயினும், கடு வெயிலாயினும், அது நீரில் நின்றால் செழித்து வளரும். ஆனால், பஞ்சுப் படுக்கையாகவே இருப்பினும், தாமரைக்கு அது ஏற்றதன்று. தாமரை மலரிடத்து நாம் கொண்ட, அன்பைத் தெரிவிப்பதற்காக அம் மலரை நீரிலிருந்து பறித்து மலர்ப் படுக்கையில் வைத்தாலும், அது வாடிவிடும். அதே போல, இராமன் உள்ள இடத்தில் செழித்து வாழக் கூடியவன் இலக்குவன். இராமன் அயோத்தியில் இருந்தாலும், வனத்திலி ருந்தாலும், அதுபற்றிக் கவலை இல்லை. இலக்குவனும் உடன் இருக்க வேண்டுபவனே தவிரத் தனித்து வாழக் கூடியவனல்லன். இதனை நன்கு அறிந்தமையின், சுமித்திரை, 'அவ்வனம் உனக்கு ஆகாததன்று,' என்று கூறினாள். இதுவரை இலக்குவன் இராமனைத் தமையன் என்றே கருதிவந்தான். ஆனால், இனி அது கூடாதென்று அறிவிப்பாள் போல,'இராமன் அம்மன்னவன்,' என்று குறிப்பிட்டாள். மன்னவன் ஏவல் ஏற்று நடப்பதே குடியின் கடமையும் இயல்புமாகும். அவ்வாணையை ஏன் என்று கேட்கவோ, அதன் நலந் தீங்குகளை ஆராயவோ குடிகட்கு உரிமை இல்லை. அதேபோல, இனி இராமன் கட்டளையைத் தலைமேல் தாங்கி நடப்பதே இலக்குவனுக்குக் கடமையாகும் என்பதைக் குறிப்பிட விரும்பிய அத் தாய், இராமனை 'மன்னவன்' என்று குறிப்பிட்டாள். மன்னன் பதவியை அப்பொழுது தான் துறந்துவிட்டு வந்த மகனை 'அம் மன்னவன்' என்று கமித்திரை குறிக்கும்பொழுது அவளது மனத்திட்பத்தை நாம் வியவாமல் இருத்தல் இயலாது. தசரதனும், கைகேயியும்-ஏன்? - உலகத்தாரனைவருமே கூடிக்கூட முடியை இராம னிடமிருந்து பறித்துப் பரதனுக்கு நல்கலாம். ஆனால், சுமித்திரை அச்செயலை ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவளைப் பொறுத்த வரை இராமனே இன்னும் மன்னவன்; அவன் காடு சென்றாலும் கவலை இல்லை; அவனே மன்னன். பிறரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறையாகவோ பழியாகவோ கூறாமல், தன் மனக் கருத்தைச் சந்தருப்பம் வந்தபொழுது அழுத்தமாகக் கூறும் இம்மாதரசியின் வன்மை சிந்திக்கத் தக்கது.

ஒப்புயர்வற்ற பேச்சு

இராமனை மன்னன் என்று மதித்து அவன் ஏவலின் வழி நிற்க எனக் கட்டளை இட்டுவிட்ட பிறகு என்ன தோன்றிற்றோ தெரிய வில்லை, சுமித்திரைக்கு! உடனே தன் சொற்களை மாற்றிவிட்டு, வேறு கூறுகிறாள்.

"மகனே, இவன் பின்னே செல்வாயாக. ஆனால், தம்பி என்ற கருத்துடன் செல்லாதே! அடியானைப் போல ஏவல் செய். இவன் இவ்வயோத்திக்கு வருவதுண்டாயின், பின்னே வா. அவ்வாறில்லை யாயின், இவன் முன்னம் முடிந்திடு,” என்ற கருத்தில் இதோ பேசுகிறாள். 

“பின்னும் பகர்வாள்.'மகனே! இவன்பின்செல்; தம்பி
என்னும் படியன்று; அடியா ரினின்ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன்வந் திடில்வா:அது அன்றேல்
முன்னம் முடி'என் றனள்வாள் விழிசோர நின்றாள்.”
(1752)


அரசனிடத்துக் குடிமகன் போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினால், அதனால் வரும் இடர்ப்பாட்டை உடன் கண்டு கொண்டாள் அவ்வரசி. குடிமக்கள் நலத்திற்காகத்தான் அரசன் இருக்கிறானே தவிர, அவன் நலத்திற்காகக் குடிமக்கள் இல்லையே! முற்கூறியபடி கூறிவிட்டால், இலக்குவன் நலந்தீங்குகளுக்காக இராமன் பொறுப்பாளியாக நேரிடும். எனவே, அக்கருத்தை மாற்றி அமைத்துவிட்டாள் அரசியான கமித்திரை.

'தம்பி என்று நினைத்துப் போதல் வேண்டா,' என்பதால், இலக்குவனைக் காக்கும் பொறுப்பு இராமனுக்கு இல்லையாதல் காண்க. அதே கருத்தை மேலும் வலியுறுத்தவும், கண்டதற்கெல்லாம் இராமன் கையை எதிர்பார்க்க வேண்டா என்பதை இலக்குவனுக்கு அறிவுறுத்தவும்,'அடியாரினின் ஏவல் செய்தி,' என்றாள். கொடுக்கப் பட்ட வேலையின் உயர்வு தாழ்வு கருதாமலும், அது தன்னால் இயலக் கூடியதா என்பதை ஆராயாமலும், உயிருள்ளவரை செய்து தீர்க்கும் கடப்பாடு ஏவலாளர்க்கே உண்டு. அதேபோல், இலக்குவன் நினைந்து வாழவேண்டும் என்பதற்காகவே இதனைக் கூறினாள் சுமித்திரை. குடிமகன்போல நடந்துகொள்' என்று கூறும்பொழுதே இவ்வாறு ஆணை வழி நடத்தல் வேண்டும் என்ற குறிப்பும் பெறப்பட்டதேயாயினும், அதனால் வரும் இடையூற்றை அழகான முறையில் நீக்கிவிட்டது அறிந்து மகிழ்தற்குரியது. இனி அடியானுக்கும் ஆண்டானுக்கும் உள்ள தொடர்பையும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். குடிமகன் கடமையைச் செய்துகொண்டு கூட மன்னனிடத்தில் அன்பில்லாதவனாய் இருக்கலாம். மன்னனிடம் பகைமை பாராட்டாமலும் அன்பு பாராட்டாமலும் இருந்துவிட்டால், அதில் தவறு கூறுவதற்கு ஒன்றும் இல்லை. 'நொதுமலர்' என்ற முறையில் இலக்குவன் இருந்துவிடக்கூடாதென்பதை அறிவுறுத் தவே ஆண்டான் அடிமை உறவு முறையைக் குறித்தாள் மூவரினும் மேம்பட்ட அக்கற்பரசி. அடிமை ஆண்டானிடம் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு அன்பு பாராட்ட வேண்டும். தனக்கென ஒரு நிலை இல்லாதவனாய் இருத்தலே அடிமையின் இலக்கணம். ஆண்டானிடத்து முழு அன்பு பாராட்டி அவனுடைய நலம் தீங்குகளே தன்னுடைய நலம் தீங்குகளும் ஆகும் என்று நினைத்து வாழும் மன நிலையே அடிமையின் இயல்பாகும். இந்த மனநிலையுடன் இலக்குவன் காட்டில் வாழவேண்டும் என்றே கமித்திரை குறிக்கிறாள்.

இந்த அளவோடும் விடாமல், இன்னும் ஒருபடி மேலே சென்றும் ஒரு கட்டளை இடுகிறாள் மூன்றாம் அடியில். எத்துணைச் சிறந்த அடிமையிடமும் இதனை எதிர்பார்த்தல் ஆகாது; அவ்வாறு எதிர் பார்த்தல் முறையும் அன்று. ஆண்டானிடம் அன்பு பூண்டு பணி புரியும் ஓர் ஏவலன் அவ்வாண்டான் இறக்க நேரிட்டால் தானும் இறந்துவிட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. மிகச்சிறந்த அடிமையாயின், தன் உயிரைத் தந்தேனும் ஆண்டானுக்கு உண்டாகும் இடரைத் தீர்க்க முயல வேண்டும். ஆனால், ஆண்டான் விதியால் இறக்க நேரிட்டால், அதனை நீக்க அடிமை செய்யத்தக்கது யாதுமில்லை. இதனையும் மாற்றிச் சுமித்திரை ஏவுகிறாள். 'அடிமையாகச் செல்கிற நீ, உன் ஆண்டானாய இராமன் இவ்வூருக்கு மீண்டால், மீண்டு வா; அவ்வாறு இல்லையாயின், அவனுக்கு முன்னே முடிந்துவிடு,' என்னும் கருத்தில்,

"'மன்னும் நகர்க்கே இவன்வந் திடில்வா:அது அன்றேல்,
முன்னம் முடி'. என்றனள்.”

இவ்வாறு மகனைக் கட்டளை இடும் தாயை இதுவரையிற் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. அதுவும் மாற்றாள் மகனுக்காகத் தன் மகனை இவ்வாறு கட்டளை இடும் தாயை மானிடப் பிறவியில் சேர்க்காமல் தெய்வப் பிறவியாகவே கொள்ளல் தகும். இவ்வாறு கூறுவதிலும் ஓர் அழகு பொருந்தக் கூறுவதையும் காண்டல் வேண்டும். 'மன்னும் நகர்க்கே இவன் வந்திடில் வா,' என்று கூறிய அத்தெய்வம், அதனையடுத்து யாது கூறியிருத்தல் வேண்டும்? 'அவ்வாறன்றி, அவனுக்கு ஏதேனும் தீங்கு நேருமாயின், அவன் முன்னரே நீ முடிந்துவிடு, என்றுதானே கூறல் வேண்டும்? அவ்வாறு கூறினாலும் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால், 'இராமனுக்குத் தீங்கு நேர்ந்தால் என்ற அமங்கலமான சொல்லை வாயாற் கூறக்கூட அம்மானிடத் தெய்வம் அஞ்சு கிறது. 'விராவரும் புவிக்கெலாம் வேதமே என' இராமனுக்குத் 'தீங்கு நேர்ந்தால்' என்று கூற எவ்வாறு நாத்துணியும்? எனவே, அதனைச் சொற்களாற் கூறாமல், குறிப்பால் பெற வைக்கிறாள்.

"'மன்னும் நகர்க்கே இவன்வந் திடில்வா;அது அன்றேல்,
முன்னம் முடி’ என்றனள்.”

'அது அன்றேல்' என்ற சொற்களாலேதான் அவள் அஞ்சிய அச்சத்தை வெளியிட முடிந்தது. ஆனால், தன் மகனைக் கூறும் பொழுது 'முன்னம் முடி,' என்கிறாள். 'இராமனுக்கு முன்னரே நீ இறந்துவிடு,' என்பதே இப்பகுதியின் பொருள். அயல் வீட்டிலிருந்து வந்து வாழ்க்கைப்பட்ட சீதைக்குக்கூட இச்சொற்களைக் கேட்டவுடன் ஒரு துணுக்கம் ஏற்படுகிறது.

சரியான நேரத்தில் சீதைக்கு இச்சொற்கள் நினைவுக்கு வருகின்றன. பிரமாத்திரத்தாலே கட்டுண்டு இறந்தவனை ஒப்பக் கிடக்கும் இலக்குவனைக் காண்கிறாள் பிராட்டி, தன்னால் நேர்ந்த இக்கொடும்பழியை நினைத்து ஆவிசோர்கிறாள் அக்கற்பரசி. காடு நோக்கிப் புறப்படுகையில் தன் மாமி கூறிய இச்சொற்கள் பிராட்டியின் நினைவுக்கு வருகின்றன. உயிர் துடிக்க, உள்ளந் துடிக்க, இதனைக் கூறுகிறாள். 'தீவினையின் பயனாய்க் கடுமையான  காட்டுவழியில் எங்கள் இருவரோடும் செல்லப் புறப்பட்டபொழுது 'இளையாய்! அறிவுடையோனே! உனக்கு மூத்தவனாகிய இராமன் விதியால் இறக்க நேரிட்டால் அவனுக்கு முன்னரே முடிந்துவிடு,' என்று கூறிய உன் தாயாரின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து விட்டாயோ!' என்ற கருத்தில்,

"மேதா! இளையோய் விதியார் விளைவால்
போதா நெறிஎம் மொடுபோ துறுநாள்
'மூதான் அவன்முன் னம்முடிந் திடு'எனும்
மாதா உரையின் வழிநின் றனையோ?” (8689)

என்றும் கூறியழக் கேட்கிறோம்.

இரண்டு பாடல்கள் அளவே வாய் திறந்து பேசும் சுமித்திரையை ஓரங்குல உயரத் தந்தத்தில் கடைந்து செய்யப்பட்ட ஒப்பற்ற சிற்பமாகச் செய்து விட்டான் கம்பநாடன்! அவள் கூற்றாகிய இரண் டாம் பாடலை நோக்க, அவள் கோசலையினும் மேம்பட்டவளாகவே காட்சியளிக்கிறாள்.



Printed By: BALAJI OFFSET PRINTERS

Chennai - 106, Ph:4759094, 4751794.