உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னொரு உரிமை/‘வெட்டி’ மனிதர்கள்

விக்கிமூலம் இலிருந்து

‘வெட்டி’ மனிதர்கள்

ரிகளின் ஊளை அடங்கி, காட்டுக் கோழியின் கேவலா அல்லது கூவலா என்று கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு மிகையான ஒலி, அவனை உசுப்பியது. சிதம்பரம், அவிழ்ந்திருந்த வேட்டியை, படுத்தபடியே கட்டிக்கொண்டான். ஒரு கிலோ மீட்டருக்கும் சற்றுக் குறைவான கிராமத்தில் இருந்து, ஒரு கோழிச் சத்தம், அவனுக்கு நன்றாகக் கேட்டதென்றால், அது அந்த கோழியின் பெருத்த சத்தமென்று அர்த்தமாகாது. அந்த நொண்டிக் கோழியின் சத்தத்தைக் கேட்கும்படி எங்கும் நிலவிய நிசப்தம் அனுமதித்தது. வினாடிபோல் கழிந்த இரவின் இறுதிக் கட்டத்தில், யுகம்போல் எழும் பகலை எதிர்நோக்கிப் புரண்டான்.

சிதம்பரம், கண்களை கசக்கிக்கொண்டே எழுந்தான். சுவரோடு சேர்த்துப் போட்டிருந்த பெஞ்சில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியைப் பார்த்தான். அவனது ஒரு கால், தனியே கிடப்பதுபோல் தரையில் கிடந்தது. அரணைக் கயிறு கால் சட்டைப் பட்டைக்கு மேலே பாதியும், வயிற்றில் பாதியுமாக மிதந்தது. சிதம்பரத்திற்குத் தம்பியை எழுப்ப மனமில்லை. அந்தப் பையன், ஆயுள் காலத் துக்கத்தையெல்லாம் அன்றே தூங்கிவிடப் போகிறவன் போலவும், வேலைமிக்க பகல்பொழுதைச் சந்திக்க மறந்தவன் போலவும், மறுப்பவன் போலவும், தொடையில் கடித்துக்கொண்ருந்த கட்டெறும்பின் கடிமானம் தெரியாமல் கட்டையாகக் கிடந்தான். சிதம்பரம் கீழே விழுந்த காலைத் தூக்கி, பெஞ்சியில் போட்டுவிட்டு, கட்டெறும்பை அந்தச் சிறுவனின் தொடையில் வைத்தே தேய்த்துவிட்டு, தட்டிக்கதவை திறந்தான். ஹரிக்கேன் விளக்கைப் பற்ற வைத்தான். தொலைவில் கம்பீரமாகத் தெரிந்த மலையுச்சிக் கோவிலில் ஆலய மணி அடிபட்டுக் கொண்டிருந்தது.

பாய்லரின் அடிப்பாகத்தைத் தட்டிவிட்டு, கரிப்படிமங்களை துடைத்துவிட்டு, ‘ஸ்டவ்’ அடுப்பைப் பற்றவைத்தான். பாய்லரில் கரியைப் போட்டுவிட்டு, அதன் மேல்வாய் வழியாக, சிமெண்ட் தொட்டியில் இருந்த தண்ணிரை, ‘டப்பு’ மூலம் மொண்டு மொண்டு ஊற்றினான். ஸ்டவ்வில், இருபக்கமும் இரும்புக் கடுக்கன் போட்ட ‘கடாயை’ தூக்கி வைத்தான். அது சுட்டது. கடலையெண்ணெயை ஊற்றிவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின்பு, இரவில் அரைக்கப்பட்டிருந்த மாவை பிடித்துப்போட, அவை மசால் வடைகளாக எண்ணெய்யில் மிதந்தன. தோசை சுடவேண்டும். தம்பியைப் பார்த்தான். அவன் படுத்துக்கிடந்த விதம் அவனுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது உண்மைதான். பயந்துபோனவன்போல், தம்பியின் அருகே போய், மூக்குப் பக்கத்தில், நான்கு விரல்களை சேர்த்தாற்போல் அடுக்கி, நேராகக் கொண்டு போனான். மூச்சு வந்துகொண்டுதான் இருந்தது.

இதற்குள் ஊருக்குள் அரவம் கேட்டது. சிலர் நடந்து வரும் சத்தமும் கேட்டது. முதலில் பால்காரர் வந்தார். கேனில் இருந்த பாலை அளந்து கொடுத்துவிட்டு, ‘டீக்காக’ காத்திருந்தார். துரங்கிக்கொண்டிருந்த பையன், ‘மரித் தெழுந்தவன் போல்’ எழுந்து, நேராக ஸ்டவ் அருகே தோசைமாவுடன் வந்தான். அதிகப்படியாகத் தூங்கிவிட்ட குற்றவுணர்வில், அவன் ‘ஒண்ணுக்குப்’ போவதைக்கூட கட்டுப்படுத்திக் கொண்டான்.

பலர் வந்தது தெரியாமலே வந்துவிட்டார்கள், மூன்று இளம்பெண்கள் நான்கு தடுத்தர வயதுப் பெண்கள். இளம் பெண்களின் சேலைகள், மரப்பட்டைகள் போல் மங்கிப் போயிருந்தன. ஒருத்தி கொடுத்து வைத்தவளாக இருக்க வேண்டும். இல்லையானால், இரண்டு சேலைகளைச் சேர்த்துக் கட்டியிருக்கமாட்டாள். ஒன்றின் ஓட்டையை, இன்னொன்று அடைத்து நிற்க, அவள் அடைக்கமுடியாத கண்களால் வெளியே எட்டிப் பார்த்தாள். ‘பனி இன்னும் கொட்டுதேன்’னு சொல்லப் போனவள், பசிக் கொட்டத்தில், அது ஒரு கொட்டே இல்லை என்று நினைத்தவள் போல் பேசாதிருந்தாள். ஒரு சில பெண்களின் தலையோரங்கள், காய்ந்துபோன அருகம்புல் போல் பழுத்துக் கிடந்தன. ஒரே ஒருத்தி மட்டும், ‘கிடாயில்’ துடித்த கடலெண்ணெய்யை சற்றுக்கோதி, உடம்பெங்கும் தேய்த்துக் கொண்டாள். பூச்சி புழுக்கள் கடிக்காது. ஆடவர்கள். கதகதப்பாக, பாய்லர் பக்கம் போய் நின்றுகொண்டார்கள். மகாத்மா காந்தி எப்படி இருந்தார் என்பது தெரியாமலே, அவரைப் போல் ஆடை அணிபவர்கள். அவருக்காவது, தோளில் போர்வை மாதிரி துண்டு. இவர்களுக்கு, கோவணம் மாதிரி; கோவணம் துண்டாவதும், துண்டு கோவணமாவதும், இவர்களுக்கு, மலையில் ஏறுவது—இறங்குவது மாதிரி,

சிதம்பரம், ஒவ்வொருவருக்கும் ‘டீ’ போட்டுக் கொடுத்தான். ஆளுக்கொரு மசால் வடையை நீட்டினான். சிலர் காக கொடுத்தார்கள். சிலர் கண்களால் கடன் சொன்னார்கள். ஆடவரில் ஒருவர் ‘ரெண்டு தோச போடு சிதம்பரம்’ என்று ‘தையலையை’ சிதம்பரம் எடுக்கப் போனபோது, இன்னொருவர். “டேய், மலைக்குப் போயிட்டுவந்து அரக் இலோ அரிசியும், கால் கிலோ ஆட்டுக் கறியும் வாங்கி, குழந்தை குட்டியோட தின்னேண்டா! அனாவசியமா காச கரியாக்குறான்” என்றார். மெளனப் பூனைக்கு. அவர் மணி கட்டிவிட்டதால், பலர் சேர்ந்தும் தனித்தனியாகவும் பேசினார்கள்.

"பாவம் சாப்புடப் போன மனுஷன, தடுத்திட்டியே!"

'இவன் வாய அடச்சா, இவன் பிள்ளக்குட்டி வாய திறக்கலாம், நான் அதத்தான் செஞ்சேன்.'

'எப்பவுமா சாப்புடுறார்... ஏதோ இன்னையப் பாத்து ஆச வந்துட்டு....'

'நம்மள மாதிரி ஆளுங்களுக்கு, இந்தமாதிரி ஆச வரப்படாது சாமி! எனக்கு மட்டும் ஆசயில்லியா... பரிதாபத் ஷதுக்கு வேணுமுன்னால் வாரிகளா... முப்பது தோசய தின்னு காட்டுறேன்! நான் எதுக்கு சொல்லுரேன்னா... இன்னைக்கி தோசன்னா, அப்புறம் பீடி பிடிக்கது மாதுரி அது ஒரு பழக்கமாயிடும். அதனால தான். ஏய்.... வேணுமுன்னா சாப்புடுப்பா! என் காசுலயா சாப்புடுற!'

'வேண்டாம்பா, ஆசைய அடக்கணுமுன்னு நேத்துதான் வாரியார் கோவுலுல சொன்னாரு. நமக்கு இருக்க ஒரே ஆச பசியாவ வாட ஆசதான். நாமளும் நம்ம பங்குக்கு அது அடக்காண்டாமா? அடக்கியாச்சு. ஏ, வாடாப்பூ! நேத்து ஒங்கப்பன் ஒன்ன அடிச்சானா?'

'தப்பு மச்சான் இந்தப் பயமவா அவர அடிச்சிருப்பா.

வாடாப்பூ, வட்டியோடு கொடுத்தாள்.

'மாமா, பொண்டாட்டிகிட்ட அடிபடுற பழக்கத்த எப்படிச் சொல்றாரு பாரு!'

'பொண்டாட்டிங்க எங்க அடிக்கிறா! அவளுவளவும் நம்மையும் சேர்த்து ரேஞ்சர்லா அடிக்கான்!'

'ஏ, வாடாப்பூ! நீயாச்சு; என் மாமாவாச்சு. என்னை ஏண்டி இழுக்கற; கல்யாணம் ஆவு முன்னே ஒனக்கிருக்கிற ஆச இப்படியா இருக்கணும்! அது நான் செய்த தவாச சொல்லணும்!'

'சரி, பொறப்படுங்க. நேரமாவு துல்லா. சீக்கிரமா வந்துருணும். வழில அவனுக பாத்துட்டா, அவனுக வீட்டு வரைக்கும் நம்மள நடக்க வச்சு, விறகுக் கட்ட விடுவாங்கல்லா....'

எல்லோரும் எழுந்தார்கள். திடீரென்று ஒருத்தி 'அதோ தேளு' என்றாள். குரலில் எவ்வித கலக்கமும் இல்லாமல், அவள் சொன்னவிதம் நல்ல பாம்பாக இருந்தாலும் அப்படித் தான் ஒரு வேளை சொல்லியிருப்பாள். சிதம்பரம், தேளைப் பார்ப்பதற்கு முன்பே ஒருவர் ஓலையில் ஏறிய அதை ஓலையோடு எடுத்து, வெளியே கொண்டு போனார். 'ஜாக்கிர தையா பிடி... இது கருந்தேளு! கடிச்சா. உயிருல நிக்கும்' என்றார் ஒருவர்.

எல்லோரும் எழுந்து புறப்பட்டார்கள். ஒவ்வொருவரும் கமண்டலம்மாதிரி அமைப்புள்ள பெரிய கம்பை வைத்திருந்தார்கள். ஒளிக்கற்றை ஊடுருவாத அதிகாலைப் பொழுதில் பூச்சிப் பொட்டுக்கள் இருக்கிறதா என்று முன்பாதைப் புதரை குத்திப் பாக்கவும், மலையில் இருந்து விறகுக்கட்டுக்களோடும், புல்கட்டோடும் இறங்கும்போது, தலைச்சுமை வலியாக மாறும் போது இந்த கம்பின் கமண்டலப் பகுதியில் சுமையை இறக்கி வைத்து சிறிது இளைப்பாறவும், இந்தக் கம்புகள் பயன்படுகின்றன.

சிதம்பரம் எதையோ நினைத்துக்கொண்டு, அந்த நினைலை உதறிவிடுபவன் போல், தலையை உசுப்பிவிட்டுக் கொண்டான். தோசை சாப்பிடப் போனவரை, இன்னொருவர் தடுத்தவுடனேயே, அவனுக்கு வியாபாரம் போய் விட்டதே என்பதைவிட, அதைப் பசிக்காரருக்கு பறிமாற முடியவில்லையே என்று வருத்தப்பட்டான். நினைத்துப் பார்த்தபோது, அவரின் உள்விழுந்த கண்களும், விழுது விட்ட மோவாயும், ஏக்கமான பார்வையும், அவனுக்கு என்னவோ போலிருந்தது. திடீரென்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன்போல், தம்பியைப் பார்த்துப் பேசினான்.

'இன்னைக்கு மாவு ஆட்டாண்டாம்.

'ஏன்னா?'

'நம்மலிலெ... நாம்லமாதுரி இருக்கவங்களுக்கு ஆசவந்து இருக்கிற காசு போயிடப்படாது. நாளையில இருந்து மசால் வட மட்டும் போட்டா போதும்.'

சிறுவன் நெற்றியில் கோடுகள் விழும்படி, புருவங்களை சுழித்துக்கொண்டிருந்தபோது, ஒரு போலீஸ்காரர் வந்தார். யூனிபாரத்தில் இரண்டு கோடுகளும், ஒரு நட்சத்திரமும் இருப்பதுபோல் தோன்றின.

'என்னடா... தோச ரெடியா!'

சிதம்பரம் பதிலளிக்காமல் இலையைப் போட்டான். போலீஸ்காரர் இலையைத் தின்னப்போகிறவர்போல், அதைத் தூக்கிப் பிடித்துப் பார்த்தார்.

'இல ஓட்டையா இருக்கு. வேற இல போடு!'

வேறு இலையில் வேறு வேறு தோசைகள் போடப் பட்டன. கொஞ்சம் சட்னி ஊத்துடா. ஏண்டா சட்னில காரம் இல்ல. தண்ணி கொடுடா. நல்ல தண்ணியா கொடுடா. வேற கிளாஸ்ல கொடு. இதுல ஒரே அழுக்கு.

போலீஸ்காரர் சாப்பிட்டுவிட்டுக் கையைக் கழுவிவிட்டு, 'கப் டீயா போடு' என்று சொல்லி வீட்டுத்தான் வாயைத் துடைத்தார். சிதம்பரம் இந்தத் தடவை கேட்டுவிடுவது என்று தீர்மானித்தான். எத்தனை நாளைக்கு இப்படி ஓசியில் தோசை போடுவது, பசிக்கிற மனுஷனுக்கு தோசை போட முடியல. தோசைக்காவே பசியை வரவழைக்கிற மனுஷன்கிட்ட கேட்கிறதுல என்ன தப்பு. அதோடு ஒரு மாசம் தினமும் இப்டி வந்து சாப்பிட்டா, இதே அளவு விறகு வெட்டப்போறவரு ஒருவர் சாப்பிட்டிருந்தா ஒரு ரூபாய் நாற்பது நயாபைசா கல்லாவுல விழுந்திடுமே!'

சிதம்பரத்திற்குக் கொஞ்சம் பயந்தான். காரைக்குடியில் நாட்டுக்கோட்டை செட்டியார் வீட்டில் பத்து ஆண்டுகள் சமையல் செய்துவிட்டு, இந்த மலையடிவாரப் பகுதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் வந்தான் கையிலிருந்த கொஞ்ச நஞ்ச பணத்தை, இந்தக் கடையில் போட்டான். மண்சுவர்தான். ஒலைக் கூரைதான். பட்டா இல்லாத இடம். இருந்தும் ஐநூறு ரூபாய் கொடுத்து இந்த இடத்தை வாங்கினான். விற்றவன், அந்த ஐநூரை பட்டச் சாராயத்தில் போட்டு ஆயிரம் ஆயிரமாகப் புரட்டுகிறான். சில சமயம் அவரைப்போல் 'அம்போவாக' அருகிலேயே இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கும் சிலர் வருவார்கள். வந்தவர்கள் கலர் கிலர் குடிப்பார்கள் என்றாலும், அவனது நிரந்தர வாடிக்கையாளர்கள், மலைக்கு விறகுக்குப் போகிறவர்கள்தான். விறகுக் கட்டோடு கடனுக்குச் சாப்பிட்டு விட்டு, பிறகு விற்ற பணத்தை வீட்டுக்குக் கொண்டுபோகு முன்னாலயே இவன் கணக்கை முடிப்பார்கள். ஆனால் இந்தப் போலீஸ்காரர்... இவருக்குக் கணக்கு தேவையில்லை. இவர் சாப்பிடுவதைவிட இவரே விடை கண்டுபிடிக்க முடியாத கணக்காகிவிட்டார். சிதம்பரம் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு 'ஸார்' என்றான்.

'என்னடா...

அய்யா தப்பா நினைக்கக்கூடாது. நான்... ஏழு...

"நீ சொல்லியாடா எனக்குத் தெரியணும்? தண்ணிக் குள்ளயும் தடம் கண்டுபிடிக்கிற ஆளு நான்! ஜாக்கிரதையா இருந்துக்க!"

"அய்யா என்ன சொல்றீக!

'வரவர ஒன் கடையிலேயே கள்ளச்சாராயம் கொண்டு வந்து சிலரு குடிக்கரதா கேள்விப்பட்டேன், ஜாக்கிரதையா இருந்துக்க. இல்லன்னா கடைய சீல் வச்சு ஒன்னையும் சீல் வச்சுடுவேன்!'

 'சீல் வைக்கிறதுக்குக் கதவுகூட இல்லியே' என்று சொல்லப்போன சிதம்பரம், போலீஸ்காரர் உருட்டிய கண்களையும், லத்திக் கம்பையும் பார்த்து பயந்துவிட்டான். காசு கேட்கப்போனவன் கடன் கேட்கப் போனவனைப் போல் மிரண்டு பார்த்தான். போலீஸ்காரர் போய்விட்டார். நாளைக்குத்தான் வருவார். சிதம்பரம் தம்பியைப் பார்த்து 'சாயங்காலம் தோசைக்கு மாவு ஆட்டு" என்றான். பையன் அவனை முரண்பட பார்த்தபோது சிதம்பரமே ஒரு ஈயப் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அரிசியை நனையப் போட்டான். போலீஸ்காரருக்கு தோசை போடவில்லை யானால், அவர் அவனை போட வேண்டிய இடத்தில் போட்டுவிட்டால்-தோசையைப் புரட்டுவது மாதிரி...

எவரும் அங்கே வந்து சாராயம் குடித்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை தனக்குத் தெரியாமலே யாரும் போட்டிருக்கலாமோ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது. சைக்கிள் மணி அடித்தது. மணியோசையுடன் சிதம்பரம்...சிதம்பரம்... ஒன்னத் தாண்டா... என்று குரல். காட்டிலாக. அதிகாரி ஒருவர் சைக்கிள் பிடலை விட்டு காலை எடுக்காமலே, ஹாண்ட்பாருக்கும் சீட்டுக்கும் இடையே உடம்பைக் கொண்டுவந்து நிறுத்திக் கொண்டு, 'ஒரு கலர் எடுத்தா. கூடவே கொரிக்கதுக்கு ஒரு மசால்வடயும் எடு' என்றார். கடையில் உட்கார்ந்திருந்த ஒரு வாடிக்கைச் சிறுவன், 'கேட்டது ஓசி. இதுல வேற அதிகாரம்' என்று சத்தம் போட்டே பேசினான். காட்டிலாக் காக்காரர் அவன் சொன்னது கேட்டது போல் நிமிர்ந்தார்.

சிதம்பரத்திற்கும் எரிச்சலுக்கு மேல் எரிச்சல். 'இங்கே வந்து குடியேண்டா பிச்சைக்காரா' என்று மனதுக்குள்ளே அவன் சொல்லிக்கொண்டிருந்தபோது, அதிகாரி 'ஏய்! நான் சொல்றது காதுல விழல!' என்றார். சிதம்பரம் ஒரு கலர் பாட்டலை எடுத்துக்கொண்டே, பிச்சைக்காரன் மாதிரி ஓடினான். அதிகாரி அந்தக் கலர் பாட்டலை காலி செய்து

அவனுக்குப் பெரிய உபசாரம் செய்தது மாதிரிப் பார்த்தார். சிதம்பரம் தோசை சாப்பிட மனமிருந்தும், பணமிருந்தும் சாப்பிடாமல் 'வெட்டி’யாய்ப் போன விறகு வெட்டியை தன்னையறியாமலே நினைத்துப் பார்த்தான். அந்த நினைவு அந்த அதிகாரி மீதிருந்த பயவுணர்வை துரத்தியது. எத்தனை நாளைக்கி இப்படி ஒசியில கலர் குடித்து, அதுவும் ஒரு நாளைக்கு ரெண்டு தடவ. காட்ல முயல் கறியோட சாராயம் குடிக்கையில அஞ்சாறு சோடா அவுட்டாவுது. ஒசிக்கும் ஒரு லிமிட் வேண்டாமா. சரி, காலி பாட்டலுவள யாவது சீக்கிரமா கொண்டுவந்து குடுக்கானா...

சிதம்பரம் தைரியத்தை வலிய வரவழைத்துக்கொண்டு காசு கேட்கப் போனான். இதற்குள் அந்த அரசுப் பிரதிநிதி 'டேய்' ஒன் கடையில, சந்தனக் கட்டைங்கள குப்பன் கொண்டுவந்து அடுக்கி வைக்கதா கேள்விப்பட்டேன். நல்லா இல்ல! அவ்வளவுதான் சொல்லுவேன். ஜாக்கிரதை, அப்புறம் எங்க ஆபீசரு கேம்ப் வாரார். வந்தார்னா ஜீப்ப அனுப்புறேன். பத்து கலர் பாட்டலையும் ஆறேழு சோடா பாட்லயும் போடு, எவனையும் அண்டவிடாத விறகுக் கட்டை எவனாவது போடுறான்னா... முடியாதுன்னு சொல்லிடு... ஏன்னா உள்ள சந்தனக் கட்ட இருக்கலாம். அப்புறம் ஒனக்குத்தான் காப்பு கிடைக்கும். சந்தனத்தை அரைக்கதுமாதிரி அரச்சுடுவோம்.

சிதம்பரத்திற்கு வியர்த்துக் கொட்டியது. ஒரு தடவை ஒரு சின்னஞ்சிறு சந்தனக்கட்டையை, வீட்டில் பெரியாளான மகளுக்காகக் கொண்டுவந்த ஒரு விறகு வெட்டிக் கிழவனை, இந்த அதிகாரி அடித்த அடி பார்த்த இவனுக்கே வலித்தது. அதிகாரி அனாவசியமாக நீட்டிய பாட்டலை பயத்தோடு வாங்கிக்கொண்டு சிதம்பரம் பாய்லருக்கருகே போனான். எவன் சந்தனக் கட்டையைக் கொண்டுவந்தான். யாருமே கொண்டு வந்ததா தெரியலியே... எதுக்கும் ஜாக்கிரதயா இருக்கணும். கேக்கிறபோதல்லாம் கலர் கொடுக்கணும். காலிபாட்லகூட நாமா கேக்கப்படாது.

இதற்குள் விறகுக் கட்டுகளுடன், மலையிலிருந்து மனித உருவங்கள் இறங்கின, கட்டை சுமந்து கட்டையாய்ப்போன அந்த மனிதர்கள். கடைக்கு வந்ததும் விறகுக்கட்டுக்களை இறக்கினார்கள். ஒருவன் பாய்லருக்கு அருகே கட்டைப் போட்டான். சிதம்பரம் எதோ சொல்லப்போனான். 'கட்டை எடுத்து வெளிய போடுய்யா' என்று கேட்கப் போனான். கட்டு கொண்டு வந்தவர், குனிந்து கால் பாதத்தில் தாங்கியிருந்த ஒரு முள்கட்டையை ஊக்கால் குத்திக்கொண்டே வலி பொறுக்காதவர் போல் 'எப்பாடி’ என்றபோது, சிதம்பரத்திற்கு கேட்கப்போனதை கேட்க முடியவில்லை.

இதற்குள், காட்டிலாகா ஜீப் வந்து உறுமியது, சிதம்பரம், ஏழெட்டு கலர் பாட்டில்களோடும், ஆறேழு சோடா பாட்டில்களோடும் ஒடினன். ஒருவேளை இதுக்குக்கூடவா காசு கொடுக்கமாட்டாங்க. கேக்கலாமா... தந்தா வாங்கிக்கலாம், கேட்டு அந்த கட்ட பிரிடான்னு கேட்டாங்கன்னா ஒருவேள அதுக்குள்ள சந்தனக்கட்ட இருக்கலாம்! முந்தாநாள் ராமசுப்புவ, போட்டு போட்டு பூட்ஸ் காலால உதச்சாங்களே.

ஜீப் போய்விட்டது. விறகுக் கட்டுக்களைச் சுமந்து வந்தவர்களும், டீயை குடித்துவிட்டு, பஜாரைப் பார்த்துப் போனார்கள். விறகுக்கு இந்த மலையேறிகளுக்கு மூன்று ரூபாய் கிடைக்கலாம். உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்கும் 'கட்டைத் தொட்டிக்காரர்களுக்கு' ஆறு ரூபாய் கிடைக்கும். அவர்களுக்கும் சேர்த்து இவர்கள் மலையேறுகிறார்கள். இவர்களுக்கும் சேர்த்து, அவர்கள் சாப்பிடுகிறார்கள்.

பிறகு வெட்டி மனிதர்கள் போய்விட்டார்கள். உச்சி வெயில். இனிமேல் கூட்டம் கூடாது, சாயங்காலம் ஒரு சிலர் வருவார்கள், அவர்களுக்கு 'டீ' மட்டும் போதும். சிதம்பரம் பாய்லரை இறக்கி வைக்கப்போனான். பிறகு 'டீ' குடித்து  விட்டு இறக்கலாம் என்று நினைத்தவன்போல் தம்பிக்கும் தனக்குமாக இரண்டு இரண்டு தோசைகளை எடுத்துக் கொண்டு உட்காரப்போனான். இருவரும் இரண்டுதடவை 'டீ' குடித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

திடீரென்று ஒரு அதட்டுக் குரல்.

'டேய்... சிதம்பரம்! காலையிலயே நாலு தோசை பார்ஸல் அனுப்புன்னு ஆள்மூலம் சொன்னேனே, ஏண்டா அனுப்பல?'

தேவஸ்தானத்தில் ஒரு சின்ன அதிகாரி. ஆனால் சிதம்பரத்திற்கோ பெரிய அதிகாரி. அதட்டினார். சைக்கிளை அனாவசியமாகப் பிடித்திருத்தார்.

'ஏண்டா பேசமாட்டங்கே! தேவஸ்தானம் நிலத்துல , கடை போட்டிருக்கே! லைசன்ஸ் இன்னும் கொடுக்கல. இதுக்குள்ள இவ்வளவு திமுறா! என்னடா, நினைச்சிக் கிட்டே! உங்களெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கனும்!'

சிதம்பரம் ஒன்றும் நினைக்காதவன்போல், சாப்பிடப் போன நான்கு தோசைகளையும், சட்னியுடன் சேர்த்துப் பார்ஸலாகக் கட்டி சைக்கிளில், வைக்க வேண்டிய இடத்தில் வைத்தான். கொடுக்கமாட்டேன் லைசென்ஸ் என்று சொல்லிட்டா, அதோட இவரு, போலீஸ்காரன், காட்டு அதிகாரி-இவங்களவிட நல்ல மனுஷன் வாரத்துல ரெண்டு தடவ, இல்லன்னா, மூணுதடவதான் தோசப் பார்ஸல் கேட்பாரு.

ஒருமாதம், ஒடுவது தெரியாமல் ஓடியது. சிதம்பரத் தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கலர் சோடா போடு கிறவர் அவற்றை நிறுத்தியதுடன் பாக்கியைக் கேட்டார். பால்காரர், வரவர தண்ணீர் பாலை கொடுக்கிறார். ஒவ்வோருவர் பாக்கிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர். அரிசி வாங்க பணம் இல்லை. கடையில் பொறைகள் மட்டுந்தான்

இருந்தன. சிதம்பரத்தின் தம்பி, படுத்த படுக்கையாகக் கிடக்கிறான். எத்தனை நாளைக்கு வெறும் டீயையும் மசால் வடையையும் மட்டும் சாப்பிடுவது. சிதம்பரம், கடையை விற்கப் பார்த்தான். ஆளில்லை. செட்டியார் வீட்டுக்கும் போய்ப் பார்த்தான். வேலையில்லை.

அன்று எப்படியோ கஷ்டப்பட்டு தோசை போட்டிருந்தான். பகல் பதினொரு மணி. விறகுக்கட்டுக்கள் வெளியேவும், அதைச் சுமந்தவர்கள், கடைக்குள்ளும் இருந்தார்கள். மனது பொறுக்காத ஒருவர் சிதம்பரத்தின் நிலையை அறிந்த ஆத்திரத்தில் 'ஒனக்கு முன்னால... கடை வச்சிருந்தவன், ஒசித் தோச கொடுத்து, காட்ல பாதிய அமுக்கி, கள்ளச்சாராயம் வடிச்சு, இப்போ பங்களா கட்டிட்டான்! நீ என்னடான்னா, இருக்கிற கடையைக் கூட தேய்ச்சுப்புட்ட!' என்றார்.

சிதம்பரம் எதுவும் பேசவில்லை. கலர் பாட்டில்கள் இருந்த 'ரேயை'. வெறுமயாகப் பார்த்துக்கொண்டான். கடைக்குள்ளே கனல் கக்கப் பிதற்றிக்கொண்டிருந்த தம்பியை நிமிடத்திற்கு நிமிடம் நோட்டம் விட்டுக் கொண்டே பாய்லர் பக்கம் சுவரில் சாய்ந்துகொண்டு நின்றான். ஜீப்பில் போன கலர் பாட்டல்கள் இன்னும் திரும்பவில்லை. ஒரு தடவை கேட்டதுக்கு 'எந்த இடத்துல எதக் கேக்கணுமுன்னு இல்லியா! இரு! இரு' என்று எச்சரிக்கை.

திடீரென்று காட்டிலாகா அதிகாரியும், போலீஸ்காரரும், ஒரு பத்து வயதுச் சிறுவனை, அவன் கைகள் பின்னால் வளைக்கப்பட்டு ஒரு காட்டுக்கொடியில் கட்டப்பட்டிருக்க அவனை பிடறியில் அடித்துக்கொண்டே கொண்டு வந்தார்கள். சிறுவன் இடறி விழுந்தான். பிறகு கட்டையில் மோதி, அவன் நெற்றியில் காயம். யாரோ ஒருவர் தூக்கி விட்டார்.

அடித்த களைப்பு தீருவதற்காக, போலீஸ்காரரும், காட்டிலாகாவும் கடைக்குள் வந்தார்கள். 'மலையில போய், சந்தனமரத்தை வெட்டுறான். இந்த வயசுலேயே புத்தியப் பாரு! ஸ்டேஷனுக்கு வா! இனிமே நீ ஜென்மத்துலேயும் மலையேற முடியாமப் பண்றேன்’ என்று போலீஸ்காரர் சபதம் போட, 'காட்டு' அதிகாரி கண்களால் அதை. அங்கீகரிக்க இருவரும் உட்கார்ந்தார்கள். சிதம்பரம், இருவர் முன்னாலும் இலை போட்டு சுடச்சுட தோசை போட்டான். 'கப்' டீயாக போட்டுக் கொடுத்தான். ஒரு தடவை, காட்டிலாகா மனிதர் காதில் விழும்படி பேசிய அதே சிறுவன்தான், வெளியே கைக்கட்டோடு நின்றான்.

இருவரும் கை கழுவிவிட்டு, டம்ளர்களை காலியாக்கி: விட்டு அந்தச் சிறுவனை 'நடடா... ராஸ்கல்! திருட்டுச் சோம்பேறி!' என்று சொல்லிக்கொண்டே கடைவாசலைக் கடக்கப்போனபோது சிதம்பரம் சாவகாசமாகக் கேட்டான்.

'ஸார்... காச வச்சிட்டு நடங்க!'

இருவரும் அவனைக் கோபத்துடன் பார்த்தபோது சிதம்பரம் சீறினான்.

"இப்ப சாப்பிட்ட காசு மட்டுமில்ல! இதுவரைக்கும் சாப்பிட்ட கணக்க தீர்க்காமல் ஒரு அடிகூட நகரக்கூடாது. யாருய்யா திருட்டுச் சோம்பேறி, ஒரு மாசமா என்னை மிரட்டி ஒசில சாப்பிட்ட நீங்க திருட்டுச் சோம்பேறியா! இல்ல, வயித்துக்காவ மலைக்குப்போன இந்தப் பையனா! இவனப் பிடிக்க, ஒங்களுக்கு என்னய்யா யோக்கியத இருக்கு? சரிசரி, காச வையுங்க இல்லன்னா தொப்பியக் கழட்டுவேன்.

போலீஸ்காரர் தன்னையறியாமலே கத்தினார்.

'யாருகிட்ட பேசுறோமுன்னு நெனச்சுப் பேசுடா... ஒன் கடைய குளோஸ் பண்ண அதிகநேரம் ஆகாது.'

சொன்னவர், தான் செயல்வீரர் என்பதை நிரூபிக்க கையை ஒங்கினான்.



திடீரென்று கூட்டத்தில் ஒருவருடைய குரல் கம்பீரமாக ஒலித்தது.

'ஒன்ன குளோஸ் பண்ணவும் அதிகநேரம் ஆவாது! எங்கள செக் பண்ண ஓங்களுக்கு என்னடா உரிமை இருக்கு.

இன்னொருவர் எழுந்தார்.

"ஏண்டா பேசுர... தேவடியா மவனுவள! தூணுல வச்சுக் கட்டுங்க! முந்தா நாளு, நம்ம... பொன்னம்மா கிழவிய அடிச்சிருக்கா. நேத்து நம்ம ராமன செருப்ப வச்சே மூஞ்சில அடிச்சிருக்கான். இவன் கடையை, ஒசில தின்னுதின்னே உருப்படாமப் பண்ணிட்டான், இனுமயும் நாம பொறுத்தால் இவங்க நம்மள அடிச்சத நியாயப்படுத்துறதா ஆயிடும்.

வேகமாக வெளியேறப் போன இரண்டு அதிகாரிகளையும் சிதம்பரம் இன்னைக்கி எல்லாக் கணக்கையும் தீர்த்தாகனும் என்று சொல்லிக்கொண்டே கைநீட்டி வழிமறித்தான். இதுவரை மெளனத்தையே ஒரு பண்பாக போற்றி வந்த சிதம்பரத்தின் காடு தாங்காத சினத்தில் தொத்திக் கொண்ட அத்தனை ஏழை-பாழைகளும் சேர்ந்தாற்போல் எழுந்தார்கள். ஒருவன் சிறுவனின் கைக்கட்டை அவிழ்த்து விட்டான். அந்தப் பயலோ ஒரே ஓட்டமாக ஓடலாமா அல்லது நிற்கலாமா என்று யோசிப்பதுபோல் நடந்து மீண்டும் திரும்பி வந்தான். இப்போது 'நான் மரத்துக் இட்ட சும்மா நின்னேன். வெட்டல. வெட்டல’ என்று எல்லோருக்கும் கேட்கும்படியாகக் கத்தினான்.

சுற்றிலும் மலைசூழ சூன்யமே சூழலாகச் சுழலும் அந்தக் காட்டுப் பகுதியின் ஆஸ்ரமம் போல் தோன்றும் சிதம்பரத் தின் டீக்கடைக்குள் சத்தம் வலுத்துக்கொண்டே போகிறது. குரல்கள் ஓங்கிக்கொண்டே போகின்றன. இது எதில் முடியும் என்று யூகிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட ஆசாமிகள் சின்ன அதிகாரிகள் என்றாலும், அவர்கள்தான்  அந்தப் பகுதிக்கு அரசின் ஆயுத பாணிப் பிரதிநிதிகள். மேல்மட்ட அதிகாரிகளை 'சப்ளை' என்ற பாசத்தாலும், 'சர்வீஸ்' என்ற பந்தத்தாலும் கட்டிப்போட்டிருப்பவர்கள்.

'மரம் வெட்டி' மனிதர்கள், 'மனித வெட்டி' அதிகாரிகளைச் சூழ்ந்துகொண்டார்கள்.

ஒருவேளை நாளைக்கு பிரபல பத்திரிகைகளைப் புரட்டினால் 'சாராய கோஷ்டி அதிகாரிகளைத் தாக்கியது பலர் கைது' என்று செய்தி படிக்கலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயம். நாளைக்கு வரக்கூடிய அந்தச் செய்தி நாளையோடு முடிகிற செய்தியாக இருக்காது.