உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னொரு உரிமை/சுமைதாங்கிகள்

விக்கிமூலம் இலிருந்து

சுமைதாங்கிகள்


ந்தக் கூட்டத்தைப் பார்த்த உடனேயே, சுலோச்சனா தன்னையறியாமலேயே பெருமிதப்பட்டாள். அவளே அந்தக் கட்டடமாக உயிர்ப்புடன் உருமாறியது போன்ற ஒரு உணர்வு. அந்தக் கட்டடம் தன்னையே பார்த்து, "என்னைக் கட்டி முடித்தவள் கீதா; அதற்குக் காரணமானவள் நீதான்" என்று சொல்வதுபோல் அவளுள்ளே ஒரு குரல் கேட்டது. 'இது என்ன... எனக்கு பயித்தியமா...' என்று உள்ளத்தில் ஒலித்த வார்த்தைகள் உதட்டோரம் சிரிப்பாக உருவெடுக்க, அவள் நின்ற இடத்திலேயே நிலை இழக்காமல் நின்றாள். இவ்வளவுக்கும் அது சின்னக் கட்டடம்தான். ஆனாலும், அவள் மைத்துணி மாதிரியே அழகான கட்டடம். இந்த மழைக்காலம் நின்றதும் மாடி கட்டி, அதில் பிரசவ சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்தப்போவதாக கீதா அவரிடம் சொன்னது நினைவிற்கு வந்தது.

சுலோச்சனா, அந்தக் கட்டடத்தில் காக்கா பொன் நிறத்திலான நான்குப் படிக்கட்டுகளை இரண்டு இரண்டாகத் தாவி, கடப்பா கற்களால் மஞ்சள் பிரகாசத்தில் மின்னிய வராண்டாவில் நடந்து கீதாவின் அறைக்கதவைத் திறக்கப் போனாள். உள்ளே சத்தம் கேட்டது. போதாக்குறைக்கு 'டாக்டர் ஈஸ் இன், பிளீஸ் பீ சீட்டட்' என்ற வாசக பலகை கண்ணில் முட்டியது. அதோடு, அவள் வரிசையை கலைப்ப  தாக நினைத்து அறை முழுதும் மொய்த்த நோயாளி கும்பல் அவளைப் பார்த்து முனங்கின. அதைப் புரிந்து கொண்ட சுலோச்சனா, வரிசையின் வால்பக்கம் வந்து அமர்ந்தாள்.

சுலோச்சனா அங்கிருந்த நோயாளிகள் கூட்டத்தை நோட்டமாய் பார்த்தாள். இந்த வயதிலும் கண் துல்லியமாகத் தெரிவதில் அவளுக்கு சந்தோஷம். அதோ அந்த சிறுமி மாதிரிதான் என் கீதாவும் ஒடுக்கு துணிப்போட்டு இருமுவாள். இதோ இந்த பயல்மாதிரிதான் சுரேஷும் 'மெட்ராஸ்' ஐ தாங்கமுடியாமல் ஊளையிட்டான்.

சுலோச்சனா காத்திருந்தாள்.

உள்ளே கீதா பேசப்பேச இவளுக்கு மகிழ்ச்சியாக இருத்தது. "வயதானவர்களுக்கு உடல் வலி வருவது முதுமையின் இயல்பு என்று டாக்டர்கள் சொல்வது மூடத்தனம். மனித உடம்பில் எந்த வயதிலும் வலியில்லாமல் ஜீவனுடன் இருக்க நவீன மருந்துகள் இருப்பதைத் தெரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட அறியாமை. இதைத் தான் நான் கான்ப்ரன்ஸில் பேசப்போறேன்" என்று கீதா ஆங்கிலத்தில் வெளுத்துக்கட்டியது. சுலோச்சனாவிற்குப் பெருமையாக இருந்தது. உள்ளே இருப்பவர்கள் வெளியே வந்ததும், உடனடியாக கீதாவைப் பார்த்தாக வேண்டும்; தான் சொல்லப்போகிற நல்ல செய்தியைக் கேட்டு, கீதா முகத்தில் படரும் மகிழ்ச்சியை ரசிக்க வேண்டும்... சும்மா சொல்லக் கூடாது. கீதா நல்ல ரசனைக்காரி, நல்ல செய்தியைக் கேட்டதும் அல்லிப்பூ விரிவதுபோல அவள் முகம் விரியும்.

சுலோச்சனாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளே இருந்த டாக்டர்கள் அறுத்துக்கொண்டிருப்பதில் அவளுக்குக் கோபம். அந்த மகிழ்ச்சியான செய்தியை பிரசவ வலிபோல் தாங்கிக்கொண்டாள். நல்லவேளையாக உள்ளேயிருந்து உதவிப் பையன் வந்தான். எல்லா கிளினிக்குகளிலும் அலட்டலாக இருப்பான்களே, அப்படிப்பட்ட பையன்தான்.

அவளைப் பார்த்துவிட்டு அவசரமாக உள்ளே போனான். அதே வேகத்தில் திரும்பிவந்து அவளிடம், “சொல்லிட்டேன்” என்று சொன்னான். சுலோச்சனா அவள் கூப்பிடப் போகிற ஒரு நிமிட கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்வதுபோல், அவசர அவசரமாகக் கண்பக்கம் விழுந்த முடியை தலைப்பக்கம் கொண்டுபோனாள். கண்களைத் துடைத்துக்கொண்டே வாசல்பக்கம் வந்து நின்றாள். அவள் எதிர்பார்த்ததுபோல் கீதா வெளியே வந்து, “என்ன அண்ணி, இங்கேயே நிக்கறிங்க?” என்று கேட்க வரவில்லை.

சுலோச்சனா காத்து நின்றாள்... காத்து நின்றாள்... கடிகாரம் அரைவட்டம் அடிக்கும் அளவிற்கு காத்து நின்றாள். கீதாவோ கூப்பிடவில்லை. உள்ளே இருந்த சத்தமோ ஓயவில்லை. ராகுகாலம் வருவதற்குள், வீட்டுக்குப் போயாக வேண்டும். இப்படி நின்றால், ராகுகாலம் போய்ச் சேர்ந்து, எமகண்டமும் வந்துவிடும். ஆபத்துக்குப் பாவமில்லை. அவசரத்திற்கு இங்கிதங்கள் தேவையில்லை.

சுலோச்சனா, கதவைத் திறந்துகொண்டு நிதானித்துப் பார்த்தபடி, உள்ளே போனாள். சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்த கீதா ஒரு வார்த்தையைப் பாதியில் முடித்தபடி அவளைப் பார்த்தபோது எதிர் இருக்கைகளில் இருந்த மூவர் அவளை நோயாளியைப் பார்ப்பதுபோல் நோகடித்துப் பார்த்தனர். கீதா கேட்டாள்:

“கொஞ்சம் வெளியில் இருங்களேன் கூப்பிடுறேன்.” - இன்டர்நேசனல் கான்ப்ரன்ஸ்பற்றிப் பேசும்போது டொமஸ்டிக் பெண் வந்துவிட்டதில் லேசான கோபம். சுலோச்சனா தயங்கியபடியே சொன்னாள்:

“நேரம் இல்லம்மா. அதோட நல்ல சமாசாரத்த நாலுபேர் முன்னால சொல்லறதுல தப்பு இல்ல.”

“விடமாட்டீங்களே, சரி சொல்லுங்க!”

“உன் மருமகள் மல்லிகாவிற்கு நல்ல வரன் வந்திருக்கும்மா. மாப்பிள்ளை பெங்களூரில சொந்தமா கம்பெனி நடத்துறார். அவங்க அப்பா எனக்கு தூரத்து சொந்தம். அவங்களே வந்து நகை நட்டு வரதட்சணை எதுவும் தேவை. யில்லன்னு கேக்கறாங்க!”

“அப்படியா... அப்போ மாப்பிள்ளைக்கு ஏதாவது கோளாறு இருக்கப்போறது?”

“நல்லா விசாரிச்சிட்டோம். எதுவும் கிடையாது. ஆனாலும்... நீ வந்து அப்ரூவல் கொடுத்த பிறகுதான் ஆக்‌ஷன், இன்னிக்கி 12 மணிக்கு வறாங்க.”

“எனக்கு எங்கே நேரம் இருக்குது? அம்மாவோட திதிக்கே வரமுடியல! ரொம்ப பிஸி... நீங்க பார்த்தா சரி தான்.”

சுலோச்சனா கீதாவை உற்றுப்பார்த்தாள். பச்சை சேலையில், சிவப்பு சிவப்பாய் மின்னிய அவளைப் பெருமையோடும், சிறுமையோடும் பார்த்தாள். பிறகு “எதுக்கும் டிரை பண்ணு!” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். உள்ளே கீதா மீண்டும் பேசினாள்: “இவங்க எங்க அண்ணி. நான் எம்.பி.பீ.எஸ். படிக்கக்கூடாதுன்னு அண்ணா குதிச்ச போது இவங்கதான் என்னை விடாப்பிடியா படிக்க வைச் சாங்க” என்றல்ல; “இன்டர்நேசனல் கான்பிரன்ஸை பேஸ் பண்றதுக்கு நர்வஸா இருக்கு டாக்டர். என் பேப்பர் டிஸ்கஷனுக்கு வரும்போது யாரெல்லாம் என்ன சொல்லப்போறாங்களோ!”

பஸ் நிலையத்தை நோக்கி நடந்த சலோச்சனா கண் முன்னால் ஒரு பல்லவன் பஸ் ராகுகாலம் மாதிரி வந்து நின்றது. ‘அய்யய்யோ... இந்நேரம் பிள்ளை வீட்டார் வந்திருப்பாங்களே’ -சுலோச்சனா எதிரே வந்த ஆட்டோவில் ஏறியபடியே, “திருவல்லிக்கேணி” என்றாள். அந்த ஆட்டோ துடித்ததுபோல், அவள் மனம் துடித்தது. அது உறுமிக்கொண்டே ஓடியதுபோல் அவள் மனம் பொருமியது.

‘கொஞ்சநாளா கீதா ஒருமாதிரிதான் இருக்காள். ஆனால், உட்காருன்னு சொல்லாத அளவிற்கு இப்போதான் மாறிப்போனாள். அம்மாவின் திதியாம், அம்மாவின் திதி! இருபத்தியெட்டு வருடங்களுக்கு முன்பு நான் அவரோட கையைப் பிடித்தபோதே ஒரு காலுல பக்கவாதம் பட்டு முடங்கிக் கிடந்தவர் மாமியார். அம்மாவைக் கவனித்தால் படிப்புக் கெட்டுவிடும் என்று ஒப்புக்கு சும்மா பார்த்தவள் கீதா, தப்பு... தப்பு... நானும் அவள் படிப்பு கெடக்கூடாது என்பதில் குறியாய் இருந்தேன். இவளோட அம்மா-என் னோட மாமியார் போன வருஷம் உயிருக்குப் போராடினப்போ இவளோட நர்சிங்ஹோமில் சேர்க்காமல், பிள்ளைத்தாச்சியான இவளுக்கு சிரமம் கொடுக்கப்படாதுன்னு ஆஸ்பத்திரில சேர்த்து ராவும், பகலுமா நடந்தவள் நான், அவளோட முக்கல் முனங்கல்களையும் கோபதாபங்களையும் சுமந்தவள். மாமனாரோட எஜமானத்தனத்தை தாக்குபிடிச்சவள். இவளையும் இவள் தம்பி சுரேஷையும் காலையில் எழுப்பி விடுவதிலிருந்து இரவில் படுக்க வைப்பது வரைக்கும் எல்லாமே செய்தவள். அவரோட வாதாடி இரண்டுபேரையும் படிக்க வைத்தவள். அவர் கொடுக்கிற 600 ரூபாய்ல வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி படாதபாடுபட்டவள். அதுவும் வயிற்றை எப்படிக் கட்டினேன்? சொந்தக் குழந்தை, அந்த குழந்தைகளுக்கு குறுக்கே நிற்கக் கூடாது என்பதற்காக வயித்திலே கரு வளராமல் கட்டிப் போட்டவள். ஏழாண்டு திட்டத்திற்குப்பிறகுதான் மல்லிகா உற்பத்தியானாள்! இதனால்தான் பேத்திக்குக் கல்யாணம் செய்து பார்க்கவேண்டிய இந்த வயதில், மகளுக்கு மாப் பிள்ளை பார்க்கிறேன்!’

ஆட்டோ ராயப்பேட்டை வந்து பாரதி சாலைக்குள் நுழைந்து டிரைவர், “வீடு எந்தப் பக்கம்மா?” என்று. கேட்டபோதுதான் சுலோச்சனா சுயமானாள். தன்னையே தண்டித்துக் கொள்வதுபோல் உதடுகளை கடுமையாகக் கடித்தாள். எதைச் சொல்லிக் காட்டினாலும் ஒருவருக்குச் செய்யும் உதவியை சொல்லிக் காட்டக்கூடாது, மனசுக்குள்ள கூடப் பேசிக்கக்கூடாது.

அவள் காட்டிய வீட்டின் முன்னால் ஆட்டோ நின்ற போது அவள் அவசர அவசரமாக இறங்கினாள். எதிரே வீட்டுக்கும் வாசலுக்குமாய் துடித்துக் கொண்டிருந்த ‘அவர்’ ஓடிவந்தார். அந்த வயதிலும் அட்டகாசமான கம்பீரம்.

“ஏன் இவ்வளவு லேட்டு? பிள்ளை வீட்டிலேர்ந்து வந்துட்டாங்க.”

“ஐய்யய்யோ... சரி சரி... ஆட்டோவுக்குப் பணம் கொடுங்க, நான் உள்ளே போய் ஆகவேண்டியதைக் கவனிக்கிறேன்!”

சுலோச்சனா அவசர அவசரமாக உள்ளே வந்தாள். நான்கைந்து போர்ஷன்களைத் தாண்டி, இறுதியாக இருந்த இட வாசலுக்குள் நுழைந்தாள். ஆச்சரியத்தோடும், ஆனந்தத்தோடும் வட்டமிட்டுப் பார்த்தாள். ‘பிள்ளை நல்லாத்தான் இருக்கான். யோகாசன பயிற்சி செய்தது போன்ற உடம்பு. வெளுத்துப் போகாத சிவப்பு. அதோ அவன் அப்பாவும், அம்மாவும் இவனை உரிச்சுவச்சது மாதிரியே இருக்காங்க. அடடே... சுரேஷ் கூட வந்திருக்கானே!’

சுலோச்சனா அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக வணக்கம் போட்டாள். பிறகு, “எப்போ சுரேஷ் வந்தே” என்று கேட்டபடியே பிள்ளையின் அப்பாவிடம், “இவன் என் பிரதர்-இன்-லா. பேராசிரியர் சுரேஷ், மைசூர் பல்கலைக் கழகத்துல காமர்ஸ் டிப்பார்ட்மெண்டில் ஹெட், மனோ வந்தாளா, சுரேஷ்!”

“லாட்ஜில் இருக்காள்.”

“என்னப்பா இது!”

ஒரு செமினாருக்காக வந்தோம். அவங்களே அசோகா ஓட்டல்ல ரூம் போட்டாங்க. அண்ணா போன் செய்ததும் அவளும் வாறதாத்தான் இருந்தது. ஆனால் திடீர் தலை வலி. நான் கூட சிக்கிரமாய் போகணும். அவள் தனியா இருப்பாள்.”

சுலோச்சனா சித்தப்பாவின் பக்கம் அடக்கமாக நின்று கொண்டிருந்த தனது பிளஸ்-டு மகன் சங்கரை கண்களால் சுட்டிக்காட்டியபடியே கேட்டாள்:

“இவனுக்கு உங்க யுனிவர்சிட்டில இன்ஜினியரிங் சீட் தேடற முயற்சி எப்படியிருக்கு?”

“எனக்கென்னமோ அண்ணி சங்கரை டைப்பிங்ல சேர்த்துட்டா நல்லதுன்னு தோணுது. அப்புறம் வேலையில் சேர்ந்துகிட்டே ஏ.எம்.ஐ. ஈ. படிக்கலாம்!”

“உன் அண்ணா உனக்குச் சொன்னதை நீ இவனுக்குச் சொல்றீயா?”

“என்ஜினியரிங் படிப்பு உங்க சக்திக்கு மீறினதாச் சேன்னு சொல்ல வந்தேன்!”

“கவலப்படாதப்பா... உன்னையே இந்த அளவுக்கு ஆளாக்கின னங்களுக்கு, எங்க பிள்ளையையும் அதே அளவுக்கு ஆளாக்கத் தெரியும். உன்கிட்ட உதவி தேடி வர மாட்டோம்!”

“சரி நான் வர்ரேன்... அவளுக்கு எப்படியிருக்குதோ!”

“பிளீஸ் டு அட்டென்ட் ஆன் ஹர்!”

சுரேஷ் தர்மசங்கடமாக எழுந்து கோபத்தோடு வெளியேறினான். உடனே பிள்ளையின் அம்மா அந்தச் சூழலை மாற்ற நினைத்தவள்போல் கேட்டாள்:

“உங்களுக்கு இங்கிலீஷ் நல்லா வருதே...”

சுலோச்சனாவின் பிளஸ்-டூ மகன் சங்கர்- மைசூரில் சித்தப்பா வீட்டில் தங்கி பொறியியல் படிக்கலாம் என்று கனவு கண்ட அந்தச் சின்னஞ்சிறுசு, இப்போது யதார்த்த சூட்டில் பெரிய மனிதன்போல் விளக்கம் அளித்தான்:

“எங்கம்மா அந்தக் காலத்திலேயே கிராஜவேட். ஸ்டேட்ஸ்லேயே மூணாவதா வந்தாங்க. கை நிறைய சம்பளம் வாங்கி வேலை பார்த்தவங்க. தாத்தா, பாட்டிக்காகவும், அதோ போகிற சித்தப்பாவுக்காகவும், தியாகராய நகர் டாக்டர் அத்தைக்காகவும் நோயாளியாய் ஆனவங்க!”

சுலோச்சனாவிற்கு மகனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு. அழவேண்டும்போல் இருந்தது. மகனே... மகனே... உன்னை ஆளாக்கிக் காட்டறேண்டா என்று அரற்ற வேண்டும்போல் இருந்தது. அதற்குள் பிள்ளையின் அப்பா சமயோசிதமாகப் பேசினார்.

“அடடே... நீயே உங்க அம்மாவைப் பெத்தது மாதிரி பேசறியேப்பா...”

“தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க. உங்கள விட்டுட்டு, அவன்கிட்ட பேசி குடும்ப விவகாரத்த கிளப்பி விட்டது தப்புதான்”

“நீ என்னம்மா... உன்னைப்பற்றி இன்னிக்குத்தான் தெரியும் என்கிற மாதிரி பேசறியே! எனக்கு எல்லாம் புரியுது. உங்க குடும்பத்துல சம்பந்தம் வைக்க எனக்குக் கொடுத்து வைக்கணும். எங்க குடும்பம் பெரிய குடும்பம். உங்க பொண்ணு சொத்துக்களையும், எங்களையும் கவனிச்சுக்கிட்டா போதும். பொண்ண கூட்டிட்டு வாம்மா!”

சுலோச்சனா வருங்கால சம்பந்தியை கண்களால் கும்பிட்டபடியே உள்ளே போனாள். போகும்போதே மனம் பின்னுக்குச் சென்றது. இதேமாதிரிதான் 28 ஆண்டுகளுக்கு முன்னால் ‘அவரோட’ அப்பா சொன்னார். மனைவியோட பக்கவாத நோயைப் பற்றிச் சொல்லி, மகனுடைய அரசாங்க வேலையைச் சுட்டிக்காட்டி விவாகத்திற்குப் பிறகு, வேலையில் இருக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். இவளுக்கும் சம்மதம்தான். ராணி மாதிரி வந்து கடைசியில் தேனி மாதிரி... சீ... சீ... உழைத்ததை சொல்லிக் காட்டக்கூடாது. மனசுக்குள்ள கூட...

சுலோச்சனா உள் அறைக்குள் போனாள்.

அம்மா அலங்காரம் செய்வதற்குப் பதிலாகத் தனக்குத் தானே சிங்காரித்துக் கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டதற்காக மல்லிகா கத்தினாள்:

“நாத்தனாரோட கொஞ்சிக் குலாவ இன்னிக்குத்தான் நேரம் கிடைச்சுதா?”

“என்கிட்ட எதையும் கேக்காதம்மா. ‘அம்மாவோட திதிக்குகூட வரமுடியல. இதுக்கு எப்படி வரமுடியுமு’ன்னு மூஞ்சில அடிச்சாப்பல சொல்லிட்டாம்மா!”

தாய் மகளாகி, மகள் தாயாகி நின்றபோது ―

சுலோச்சனாவின் ‘அவர்’ வந்தார். பிள்ளை வீட்டாருக்குக் கேட்காத குரலில் கஷ்டப்பட்டுக் கத்தினார்:

“இன்னிக்கு என்னடி வந்துடுத்து உனக்கு? என் தம்பி கிட்டதட்ட அழுதுகிட்டே போறான். அவன்கிட்ட என்ன பேசின? நம்ம பேமலி ஒரு பேராசிரியரோட பேமிலின்னு பிள்ளை வீட்டுல நினைக்கிறதுக்காக, நானே அவன் இருப்பிடத்த கண்டுபிடிச்சி கூட்டிவந்தேன்... துரத்திட்டேயே...”

“அதை அப்புறம் பேசலாம். முதல்ல இவளைக் கூட்டிக்கொண்டு போவோம்!”

“ஆட்டோ ரிக்‌ஷால வேற வந்து தொலைச்சே, பஸ்ஸுல வந்தா என்ன கேடு? ஒரு ரூபாய் செலவ 15 ரூபாயா இழுத்து வைச்சிட்டுயே! நீ வெளிய போய் சம்பாதிச்சா உனக்கு பணத்தோட அருமை தெரியும். வேல வெட்டி இல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கிறவளுக்கு என்ன தெரியும்? சரி, சரி, அவளைக் கூட்டிக்கிட்டு வா!”

“நில்லுங்க அப்பா...”

வெளியே போய்க்கொண்டு இருத்தவர் திடீரென்று நின்று, மகள் மல்லிகாவை ஏறிட்டுப் பார்த்தார். அவள் காபி தம்ளர்களையும், பிஸ்கட்டுகளையும் சுமந்த டிரேயைக் கீழே வைத்துவிட்டுத் தந்தையை நோக்கினாள். தந்தையிடம் சொன்னாள்:

“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல! நீங்களா போய் சொல்றீங்களா... நானே சொல்லட்டுமா...?”

“என்னம்மா இது? உனக்குமா கோளாறு...”

“கோளாறு இல்லப்பா! அது தெளிஞ்சிருக்கு... உங்களையும், உங்க பெற்றோரையும் தஞ்சமுன்னு வந்து, கடைசில உங்க குடும்பத்துக்கே தஞ்சம் கொடுத்த அம்மாவ சம்பாதிக்காதவள்ன்னு சொல்லி ஒரு டாக்டரையும், பேராசிரியரையும் உருவாக்கின. அவளோட உழைப்பை உதாசீனப்படுத்திட்டீங்க. கிராஜுவேட் அம்மாவுக்கே இந்த நிலைமைன்னா, அண்டர்-கிராஜுவேட்டான எனக்கு எந்த நிலையோ? படித்து முடித்து வேலைக்குப் போகாமல் இந்தப் பையனைக் கட்டி வீட்டுக்குள் முடங்கி உங்ககிட்டே அம்மா வாங்கிக் கட்டிகிட்டதுமாதிரி நான் வாங்கிக்கத் தயாராயில்ல!”

“உங்கம்மா, சித்தப்பாவ துரத்தினது உனக்கு பெரிசா தெரியல!”

“துரத்தவேண்டிய ஆசாமியைத் தான் அம்மா தொரத் திட்டாங்க நன்றி கெட்டவங்களுக்கு இந்த வீட்டுல இடம் கிடையாது.”

“எனக்கு வாரக் கோபத்துக்கு உன்ன...”

“சும்மா நிறுத்துங்கப்பா... ஆரம்பகாலத்திலேயிருந்தே சித்தப்பாவுக்கும் அத்தைக்கும் எங்கம்மா செய்த பணி விடையை, அவங்க சேவையா நினைக்காமல் வேலைக்காரத் தனமாய் நினைக்கும்படியா நீங்க நடந்துக்கிட்டீங்க. அவங்க முன்னாலேயே இந்த அப்பாவியை இந்த ‘தெரே சாவை’ விரட்டி விரட்டி அவங்க மனசுல தங்களுக்கு இவள் சேவை செய்யுறது, நாய் வாலை ஆட்டுறதுமாதிரி ஒரு சாதாரண காரியம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தினீங்க. இதனால வீட்டுநாயான இவள்தான் நன்றியோட இருக்கணும். நாம நன்றியோட இருக்க வேண்டியதில்ல என்ற எண்ணத்தை அவங்ககிட்டே ஏற்படுத்தினீங்க. நீங்க கணவனா நடந்துகிறதுக்குப் பதிலாய், ஒரு ஆணாய்தான் நடந்துகிட்டிங்க! நான் இப்போ மகள் என்கிற முறையில் பேசாமல் ஒரு பெண் என்கிற முறையில் சொல்றேன். படித்து வேலைக்குப் போய் சொந்தக்காலில் நிற்கும்வரை எனக்கு எந்தக் கல்யாண சொந்தமும் தேவையில்ல!”

தந்தை தத்தளித்தார். மகளைப்பற்றி அவருக்குத் தெரியும். பிடித்தால் ஒரே பிடிதான். அவர் மனைவியை எங்கோ தொலைந்துபோனவள்போல் தன்னைத்தானே தேடிக்கொண்டிருப்பவள் போல் தோன்றிய சுலோச்சனாவை―கண்களால் கெஞ்சினார். யாசகக் குரலில் கேட்டார்:

“சுலோ... உன் மகள்கிட்ட சொல்லுடி! நல்ல இடம்டி! புத்தி சொல்லுடி!”

சுலோச்சனா வாயில் புடவையை இழுத்துச் சுற்றினாள். நொய்ந்துபோன உடம்பை நிமிர்த்தினாள். அவரை வழக்கத்திற்கு மாறாக, நேருக்கு நேராய்ப் பார்த்து அடுத்த பேச்சுக்கு அவசியம் இல்லை என்பதைப்போல் அதட்டலாகப் பதிலளித்தாள். “புத்தி சொல்லவேண்டியது அவளுக்கில்ல. அவள் சொன்னது சரிதான்! இந்தக் கல்யாணத்துல இஷ்ட மில்லைன்னு நீங்களா சொல்றீங்களா… இல்ல நானே போய் சொல்லட்டுமா? வீட்டுக்குள்ளேயே ஒரு லாக்கப்பில் ― அதுவும் ஜாமீன் இல்லாத ஒரு லாக்கப்பில் ― அவள் மாட்டிக்க எனக்கு சம்மதம் இல்லை. போய் சொல்லுங்க!”

‘அவர்’ நொண்டியடித்துப் போய்க் கொண்டிருந்தார்.