114
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
இச்செய்தியைக் களவழி நாற்பதின் பழைய உரைக்காரர் கூறுவதி லிருந்து அறிகிறோம். அவர் கூறுவது: “சோழன் செங்கணானும் சேரமான் கணைக்காலிரும்பொறையும் திருப்போர்புரத்துப் பொரு துடைந்துழிச் சேரமான் கணைக்காலிரும்பொறையைப் பற்றிக் கொண்டு சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று.”
புறம் 74ஆம் பாட்டின் அடிக்குறிப்பு துஞ்சினான் என்று கூறுகிறது. துஞ்சினான் என்பதற்கு இறந்து போனான், தூங்கினான் என்று இரண்டு பொருள்கள் உண்டு. களவழி நாற்பதின் இறுதி வாசகம் ‘பொய்கையார் களம்பாடி வீடுகொண்டார்’ என்று கூறுகிறது. அதாவது களவழி நாற்பது பாடி, சிறையிலிருந்த கணைக்காலிரும்பொறையை விடுவித்தார் என்று கூறுகிறது. எனவே, கணைக்காலிரும்பொறை இறக்கவில்லை என்பதும் அவன் விடுதலையடைந்தான் என்பதும் தெரிகின்றன. இதனால், கணைக்கால் இரும்பொறை செங்கணானுக்குக் கீழடங்கி இருந்தான் என்பதும் செங்கணான் கொங்கு நாட்டின் அரசனானான் என்பதும் தெரிகின்றன. சோழன் செங்கணானும் கணைக்கால் இரும்பொறையும் ஏறத்தாழக் கி.பி. 200க்கும் 250க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்தவராகலாம்.
சங்க காலத்துக் கொங்கு நாட்டு வரலாறு கணைக்கால் இரும்பொறையோடு முடிவடைகிறது. சேர அரசர் பரம்பரையில் இளைய வழியினரான பொறையர் கொங்கு நாட்டை ஏறத்தாழ கி. பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் ஏறத்தாழ இருநூறு ஆண்டு அரசாண்டார்கள். அவர்களில் கடைசி அரசன் கணைக்கால் இரும்பொறை. கணைக்கால் இரும்பொறை, சோழன். செங்கணானுக்குக் கீழடங்கிக் கொங்கு நாட்டை நெடுங்காலம் அரசாளவில்லை. ஏறத்தாழக் கி.பி. 250இல் தமிழகத்தைக் களப்பிரர் அல்லது களப்பாளர் என்னும் பெயருள்ள அயல்நாட்டு அரசர் கைப்பற்றிக்கொண்டு அரசாண்டார்கள். களப்பிரர், சேர சோழ பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஏறத்தாழ முந்நூறு ஆண்டு அரசாண்டார்கள். அப்போது கொங்கு நாடு களப்பிரர் ஆட்சிக்குட்பட்டிருக்க வேண்டும்.
களப்பிரர் ஆட்சிக் காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகத் தெரிகிறது.
✽ ✽ ✽