உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. வேறு கொங்குச் சேரர்

சங்க இலக்கியங்கள், அரசர் வரலாறுகளைத் தொடர்ச்சியாகவும் வரன்முறையாகவும் கூறவில்லை. அவ்வாறு கூறுவது அச்செய்யுள்களின் நோக்கமும் அன்று. ஆகையால், அவை கூறுகிற அரசர் வரலாறுகளைச் சான்றுகளுடன் சீர் தூக்கிப் பார்த்து ஆராய்ந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் கொங்கு நாட்டுச் சேர அரசர் பரம்பரையை ஆராய்ந்தோம். சங்க இலக்கியங்களில் காணப்படாத கொங்குச் சேரர் சிலர் அக்காலத்துப் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றனர். கொங்கு நாட்டுப் புகழியூரில் ஆறுநாட்டார் மலைக் குகையில் எழுதப்பட்டுள்ள இரண்டு பிராமி எழுத்துச் சாசனங்கள் மூன்று கொங்குச் சேர அரசர்களின் பெயரைக் கூறுகின்றன. இந்தப் பெயர்கள் புதியவை. இரண்டு சாசனங்களும் ஒரே விஷயத்தைக் கூறுகின்றன. இளவரசனாக இருந்த இளங்கடுங்கோ என்பவன், அமணன் ஆற்றூர்ச் செங்காயபன் என்னும் முனிவருக்கு ஆறு நாட்டார் மலைக் குகையில் கற்படுக்கைகளை யமைத்துத் தானஞ் செய்ததை இவை கூறுகின்றன தானங் கொடுத்த இளங்கடுங்கோவின் தந்தை பெருங்கடுங்கோவையும் அத்தந்தையின் தந்தையாகிய கோ ஆதன் சேரலிரும்பொறையையும் இந்தச் சாசனங்கள் கூறுகின்றன. இச்சாசனங்களின் வாசகங்கள் இவை:

1. “அமணன் ஆற்றூர் செங்காயபன் உறைய கோஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோ இளங்கோ ஆக அறத்த கல்.”

2. “அமணன் ஆற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் கடுங்கோ இளங்கடுங்கோ ஆக அறத்த கல்.”

இவ்விரண்டு கல்வெட்டுகளும் ஒரே செய்தியைக் கூறுகின்றன. இவற்றில், பாட்டனான கோ ஆதன் சேரலிரும்பொறையும் தந்தையான பெருங்கடுங்கோனும் அவனுடைய மகனான இளங்கடுங்கோனும் கூறப்படுகின்றனர். இளங்கடுங்கோ, இளவரசனாக இருந்த போது இந்தத் தானத்தை இம்முனிவருக்குச் செய்தான். இந்த மூன்று அரசர்களைப் பற்றிப் புகழியூர்க் கல்வெட்டில் கூறியுள்ளோம்.