122
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
ஆதனவினி
கொங்குச் சேர அரசர் பரம்பரையைச் சேர்ந்தவன் ஆதனவினி. இவன் கொங்கு நாட்டின் ஒரு சிறுபகுதியை யரசாண்டிருக்கவேண்டு மென்று தோன்றுகிறது. ஐங்குறுநூறு முதலாவது மருதத்திணையில், வேட்கைப் பத்து என்றும் முதற்பத்தில் இவன் பெயர் கூறப்படுகிறது.
“வாழி யாதன் வாழி யவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க.”
“வாழி யாதன் வாழி யவினி
விளைக வயலே வருக விரவலர்.”
“வாழி யாதன் வாழி யவினி
பால்பல வூறுக பகடுபல சிறக்க.”
“வாழி யாதன் வாழிய வினி
பகைவர் புல்லார்க பார்ப்பா ரோதுக.”
“வாழி யாதன் வாழி யவினி
பசியில் லாகுக பிணிசேண் நீங்குக.”
“வாழி யாதன் வாழி யவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக.”
“வாழி யாதன் வாழி அவனி
அறம்நனி சிறக்க அல்லது கெடுக.”
“வாழி யாதன் வாழி யவினி
யரசுமுறை செய்க களவில் லாகுக.”
“வாழி யாதன் வாழி யவினி
நன்று பெரிது சிறக்க தீதில்லாகுக.”
“வாழி யாதன் வாழி யவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க.”
இவ்வாறு இவன் பத்துச் செய்யுட்களிலும் வாழ்த்தப்படுகிறான். இதன் பழைய உரை, “ஆதனவினியென்பான் சேரமான்களிற் பாட்டுடைத் தலை மகன்” என்று கூறுகிறது. இவ்வரசனைப் பற்றி வேறொன்றுந் தெரியவில்லை.