உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

283


வருவதாகக் கூறிக் கோயிலிலிருந்த பெருமாளையும் அழைத்துக் கொண்டு மூவருமாகப் புறப்பட்டுப் போயிவிட்டார்கள். பெருமாள் போய்விட்டதையறிந்த அரசன், அவர்களை மீண்டும் நகரத்துக்கு வரும்படி அழைத்தான். அதற்கு உடன்பட்டு ஆழ்வாரும் கணிகண்ணரும் பெருமாளுடன் காஞ்சிக்குத் திரும்பிவந்தனர் என்று இவருடைய வரலாறு கூறுகிறது. காஞ்சியை விட்டுப்போய் இவர்கள் ஓர் இரவு தங்கியிருந்த ஊருக்கு ஓரிரவிருக்கை என்று பெயர் உண்டாயிறு. இவ்வூர் காஞ்சிக்குத் தெற்கே இரண்டு மைலுக்கப்பால் இருக்கிறது.

கணிகண்ணரை அரசன் நகரம் கடத்தியதும் அவருடன் திருமழிசையாழ்வார் சென்றதும், அரசனைப் பாடாததற்காகக் கொடுக்கப்பட்ட தண்டனையன்று. சமய சம்பந்தமாகக் காஞ்சியில் ஏதோ கலகம் ஏற்பட்டிருக்கலாம்; அக்கலகத்தில் கணிகண்ணரும், மறைமுகமாக ஆழ்வாரும் தொடர்புகொண்டிருக்கலாம். இதனால்தான் இவர்கள் நகரத்தினின்று வெளியேற்றப்பட்டனர் என்று கருதுவது தவறாகாது. பின்னர், அக்கலகம் சமாதானமுறையில் அடக்கப்பட்டபிறகு இவர்கள் நகரத்திற்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு திருமழிசையாழ்வார், காஞ்சிமா நகரத்தைவிட்டுக் குடந்தை என்னும் கும்பகோணத்திற்குப்போய் அங்கே கடைசிவரையில் தங்கியிருந்தார். குடந்தைக்குப் போகிறவழியில், பெரும்புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் தங்கினார். சிதம்பரத்தில் தங்கிய இவர், தில்லைத் திருச்சித்ர கூடத்தைப் பாடவில்லை. ஏனென்றால் இவர் காலத்தில் தில்லைக் கோவிந்தராசப் பெருமாளுக்குத் திருக்கோயில் அமைக்கப்படவில்லை. இவருக்குப் பின்வந்தவரான திருமங்கையாழ்வார் காலத்தில் தில்லைக் கேவிந்தராசனுக்குத் திருக்கோயில் அமைக்கப்பட்டிருந்தபடியால், திருமங்கையாழ்வார் தில்லைத் திருச்சித்ர கூடத்தைப் பாடியிருக்கிறார்.

திருமழிசையாழ்வார் தமது பாடல்களில் பௌத்தர் சமணர், சைவர் ஆகிய மூன்று சமயத்தவரையும் கண்டிக்கிறார். இவர் இயற்றிய இயற்பா - நான்முகன் திருவந்தாதி, அந்தாதித் தொடையாக அமைந்த தொண்ணூற்றாறு வெண்பாக்களையுடையது. இவர் பாடிய திருச்சந்த விருத்தம் நூற்றிருபது ஆசிரிய விருத்தத்தைக் கொண்டது. “அன்புடன் அந்தாதி தொண்ணூற்றா றுரைத்தான் வாழியே” என்றும்,