பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
357
ஏறிக்கொண்டு திருக்கயிலாயஞ் சென்றார். அதனையறிந்த சேரமான் பெருமாள் குதிரை ஏறி, சுந்தரரைத் தொடர்ந்து சென்று கயிலாயம் அடைந்தார். அடைந்து, தாம் இயற்றிய ஆதியுலா என்னும் திருக்கயிலாய ஞான உலாவை அரங்கேற்றினார். அவ்வுலா பின்னர் திருப்பிடவூரிலே வெளியிடப்பட்டது.
இவர் இயற்றிய பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, ஆதியுலா என்னும் திருக்கயிலாய ஞானவுலா ஆகிய மூன்றும் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.
சேரமான் பெருமாள் நாயனாரின் விரிவான வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணத்தில், கழறிற்றறிவார் புராணத்தில் (சேரமான் பெருமாள் நாயனார் புராணத்தில்) காண்க.
சுந்தரமூர்த்தி சுவாமிகள், தமது திருத்தொண்டத் தொகைப்பதிகத்தில், “கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்” என்று இவரைச் சிறப்பித்திருக்கிறார்.
நரசிங்கமுனையரையர்
இவர் குறுநில மன்னர், திருமுனைப்பாடி என்னும் நாட்டிற்கு அரசர். பல்லவ அரசன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்தவர். இவரைப் பற்றிப் பல்லவர் சாசனங்களில் கூறப்படவில்லை. ஆனால், அவ்வரசர் காலத்தில் இருந்தவர் என்பது நன்கு அறியப்படுகிறார். இவர் பகைவரைப் போரில் வென்றார் என்று கூறப்படுகிறபடியால், தெள்ளறெறிந்த நந்திவர்மனுக்குத் துணையாக இருந்து இவர் பகைவர்களை வென்றிருக்கக்கூடும். நரசிங்க முனையரையர் பகைவர்களைப் போரில் வென்று, சிவபக்தி யுடையவராக வாழ்ந்திருந்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது.
“இம்முனையர் பெருந்தகையார்
இருந்தரசு புரந்துபோய்த்
தெம்முனைகள் பலகடந்து
தீங்குநெறிப் பாங்ககல
மும்முனைநீள் இலைச்சூல
முதற்படையார் தொண்டுயீபரி
அம்முனைவர் அடிஅடைவே
அரும்பெரும்பே றெனஅடைவார்”[1]
- ↑ 19