360
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
மணமகளுடைய கரியநீண்ட கூந்தலைக் கண்ட மாவிரத முனிவர், “இந்த மயிர் பஞ்சவடிக்குத் தகுந்தது” என்று கூறினார். பஞ்சவடி என்பது மயிரினால் செய்யப்பட்ட பூணூல். மயிரினால் அகலமாகப் பின்னப்பட்ட பூணூலையும் எலும்பினால் செய்யப்பட்ட மணியையும் மாவிரதிகள் அணிவது வழக்கம். மகளின் மயிர் பஞ்சவடிக்கு உதவும் என்று கூறியதைக் கேட்ட மானக்கஞ்சாறர். முன்பின் சிந்திக்காமல், தமது உடைவாளை எடுத்துத் தமது மகளின் கூந்தலை அடியோடு அரிந்து அவரிடம் கொடுத்தார். அவள் மணப்பெண் என்பதை அவர் சிறிதும் சிந்திக்கவில்லை.
அடுத்த நாள் மணமகனாகிய ஏயர்கோன் கலிக்காமனார் வந்து நிகழ்ந்ததை அறிந்து, அவரும் சிவனடியார் ஆகையால், மானக்கஞ்சாறரின் செயலுக்கு மகிழ்ந்தார். ஆனாலும், முண்டிதம் ஆன பெண்ணை மணஞ் செய்யலாமா என்று தயங்கினார். அப்பொழுது சிவபெருமானே வந்து அப்பெண்ணை மணஞ் செய்துகொள்ளும்படி கூற, அவர் மணம் செய்து கொண்டார்.
இவ்வாறு மானக்கஞ்சாறர் சிறந்த சிவபக்தராய் விளங்கிப் பின்னர் சிவபதம் அடைந்தார்.22
“மலை மலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன்” என்று இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் பாராட்டியுள்ளார்.
ஏயர்கோன் கலிக்காமர்
கலிக்காமர் சோழ நாட்டுத் திருமங்கலக்குடி என்னும் ஊரில் ஏயர்குடியில் பிறந்தவர்; ஆகையால், ஏயர்கோன் கலிக்காமர் என்று கூறப்படுகிறார். அரசரிடம் சேனாபதித் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறந்த சிவபக்தர். இவரைப் போலவே, சேனாபதித் தொழில் புரியும் குடும்பத்தைச் சேர்ந்த, மானக்கஞ்சாற நாயனாரின் மகளை இவர் திருமணஞ் செய்துகொண்டு வாழ்ந்தார்.23 இவர், திருப்புன்கூர் என்னும் ஊரிலேயுள்ள திருக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்து கொண்டிருந்தார்.
அக்காலத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பரவையாரிடத்தில் சிவபெருமானைத் தூது அனுப்பிய செய்தியைக் கலிக்காமர்