உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

453


சிலப்பதிகாரத்தின் முதல் இரண்டடிகளுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், நெய்தற்றிணையைக் கூறுமிடத்தில் “கடற்றெய்வங் காட்டிக்காட்டி, என்பதனால் வருணனும்... கூறுகிறார்” என்று எழுதுவது காண்க.

சங்க இலக்கியங்களிலே வருணனைப்பற்றி அதிகமாகக் காணப்படாததன் காரணம் என்னவென்றால், கடல் தெய்வமாகிய பழைய வருணனுக்குப் பதிலாக மற்றொரு கடல் தெய்வம் புதிதாகப் புகுத்தப்பட்டதுதான். புதிதாகப் புகுத்தப்பட்ட கடல் தெய்வத்தின் பெயர் மணிமேகலை என்பது.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே அசோக சக்கரவர்த்தி காலத்திலே பௌத்த சமயம் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பரவிற்று. (மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய ‘பௌத்தமும் தமிழும்' என்னும் நூலில் காண்க.) பௌத்த மதம் பரவியபோது பௌத்த மதச் சிறு தெய்வங்களின் வழிபாடும் பரவிற்று. அவ்வாறு பரவிய பௌத்தச் சிறு தெய்வ வழிபாட்டில் ஒன்று மணிமேகலை வணக்கம். மணிமேகலை வணக்கம் புகுத்தப்பட்ட பிறகு வருணன் வணக்கம் மெல்ல மறைந்து விட்டது.

கடல் தெய்வமாகிய மணிமேகலையைப் பற்றிப் பௌத்தமத நூலில் ஒரு கதை உண்டு. சக்கன் (சக்கரன்) ஆகிய இந்திரன், கடலில் கப்பல் யாத்திரை செய்கிறவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஆபத்துக்குட்பட்டவர் நல்லவராக இருப்பார்களானால், அவரைத் துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மணிமேகலா தெய்வத்தைக் கடற்காவல் தெய்வமாக ஏற்படுத்தினான் என்பது அக்கதை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்கு ஐந்தாம் நூற்றாண்டுவரைப் பௌத்த மதம் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தபடியால், பௌத்தமதத் தெய்வமாகிய மணிமேகலை வழிபாடும் தமிழ்நாட்டில் செல்வாக்குப்பெற்றது. பெறவே, பழைய கடல் தெய்வமாகிய வருணன் வணக்கம் பையப்பைய மறைந்து விட்டது. மணிமேகலைத் தெய்வ வழிபாடு எவ்வளவு ஆழமாகப் பரவியிருந்தது என்பதைச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் நூல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மணிமேகலை என்னும் தெய்வத்தின் பெயரைத் தனக்குப் பெயராகக் கொண்ட மணிமேகலை என்னும் பெண்ணின் வரலாறு தான் மணிமேகலை காவியம்.