உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

459



“இதன் பொருள்: ஓதலும் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லும் செலவு தலைவியோடு கூடச் சேறலின்று... இனி இச்சூத்திரத்திற்குப் 'பொருள் வயிற் பிரிவின்கட் கலத்திற் பிரிவு தலைவியுடன் சேறலில்லை; எனவே, காலிற்பிரிவு தலைவியுடன் சேறல் உண்டு' என்னும் பொருள் கூறுவார்க்குச் சான்றோர் செய்த புலனெறி வழக்கம் இன்மை உணர்க”.

இதில், நச்சினார்க்கினியர் இளம்பூரணர் கருத்தை மறுக்கிறார். தரை வழியாக அயல்நாடுகளுக்குச் செல்லும் போது பெண்டிரையும் உடன்கொண்டு செல்லும் வழக்கம் உண்டு என்று இளம்பூரணர் கூறியதை இவர் மறுக்கிறார். அதாவது, கடல் வழியாக அயல் நாடுகளுக்குச் செல்லும் தமிழன் தன்னுடன் மனைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை. அன்றியும் தரை வழியாக அயல் நாடுகளுக்குச் செல்லும் தமிழனும் தன்னுடன் மனைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை என்று கூறுகிறார்.

இவ்வுரையாசிரியர்கள் இதில் மாறுபடக் கூறுகின்றார்கள். எனவே இளம்பூரணர் உரை சரியா, நச்சினார்க்கினியர் உரை சரியா என்பதை ஆராய்வோம். இதற்கு, எபிகிறாபி என்னும் சாசனம் எழுத்துச் சான்றும், ஆர்க்கியாலஜி என்னும் பழம்பொருள் ஆராய்ச்சிச் சான்றும் உதவி புரிகின்றன.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே (அதாவது கடைச் சங்க காலத்திலேயே) தமிழ் நாட்டிலிருந்து தமிழ் வாணிகர் (சாத்துக் கூட்டத்தினர்) கலிங்க தேசத்துக்குச் சென்று வாணிகம் புரிந்ததையும், அவர்கள் நாளடைவில் அங்குச் செல்வாக்குப் பெற்றுக் கலிங்க நாட்டின் ஆட்சிக்கு ஆபத்தாக விளங்கினார்கள் என்பதையும், அந்த ஆபத்தை அறிந்த அக்காலத்தில் கலிங்க நாட்டை அரசாண்ட காரவேலன் என்னும் அரசன் அத்தமிழ் வாணிகச் சாத்தை அழித்து ஒடுக்கினான் என்பதையும் கலிங்க நாட்டிலுள்ள ஹத்திகும்பா குகைச் சாசனம் கூறுகின்றது. இந்த ஹத்திகும்பா குகைச் சாசனத்தை எழுதியவன் காரவேலன் என்னும் அரசனே. இவன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலிங்க தேசத்தையரசாண்டான். இவன் தன்னுடைய பதினோராவது ஆட்சி ஆண்டில் (கி.மு. 165 இல்) தமிழ்நாட்டு வாணிகச் சாத்தை அழித்தான். அந்தத் தமிழ் வாணிகச் சாத்தினர், அவர்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு 113 ஆண்டுகளாகக்