474
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
தன்னுடைய நாட்டுக்கு வருமாறு அழைக்க, புத்தர் தம்முடைய சீடர்களோடு அங்குச் சென்றார். மணியக்கன் மணியாசனத்தில் புத்தரை அமர்த்தி அவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு கொடுத்தான். உணவு கொண்டபிறகு புத்தர் மணியாசனத்தில் அமர்ந்து தருமோபதேசம் செய்தார் என்று மகாவம்சம் கூறுகிறது.23
இவற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், இலங்கையில் பழங்காலத்தில் நாகர் என்னும் இனத்தவர் வாழ்ந்திருந்தனர் என்பதும், அவர்கள் இலங்கையின் வடபகுதியிலிருந்த நாகநாட்டிலும் இப்போதைய யாழ்ப்பாணம்), இலங்கையின் நடுப்பகுதியான மலையநாட்டிலும், இலங்கையின் மேற்குப்பகுதியான கலியாணி நாட்டிலும் வாழ்ந்திருந்தனர் என்பதும் தெரிகின்றன.
சங்ககாலத் தமிழகத்திலேயும் இயக்கர், நாகர் என்னும் இனத்தவர் வாழ்ந்திருந்தார்கள் என்பதைச் சங்கநூல்களிலிருந்து அறிகின்றோம். தமிழ்நாட்டு இயக்கரும் நாகரும் தமிழரின் ஒரு பிரிவினர். அவர்கள் பிற்காலத்தில் தமிழரோடு கலந்துபோனார்கள்.
விசயன் வருகை
இந்தியாவின் மேற்கே இலாடதேசத்திலிருந்து (இப்போதைய குஜராத்து நாட்டிலிருந்து) விசயன் என்னும் அரசகுமரன் தன்னுடைய எழுநூறு தோழர்களோடு இலங்கைக்கு வந்தான். விசயன் வங்காள தேசத்திலிருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறுவதும் உண்டு. அவன் வந்ததும். புத்தர் பரிநிருவாணம் அடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆனால் இலங்கை நூல்கள் புத்தரை இலங்கையோடு தொடர்பு படுத்துவதற்காக, அவர் பரிநிருவாணம் அடைந்த அதேநாளில் விசயன் இலங்கைக்கு வந்ததாகக் கூறுகின்றன. புத்தர்பெருமான் வடஇந்தியாவில் குசி நகரத்தில் பரிநிருவாணம் அடைந்தஅன்று, சக்கன் (தேவேந்திரன்) அவரிடம் சென்றான். பரிநிருவாணம் அடைகிற நிலையில் இருந்த புத்தர் இந்திரனிடம், 'விசயன் இலாடதேசத்திலிருந்து இலங்கைக்கு வருகிறான், இலங்கையில் பௌத்த தர்மம் பரவப்போகிறது; ஆகையால், அவனையும் அவனுடைய தோழர்களையும் காப்பாற்றுக' என்று கூறினாராம். அதுகேட்ட இந்திரன், உற்பல வண்ணனை (நீலத்தாமரை வண்ணனை) அதாவது திருமாலை (விஷ்ணுவை) இலங்கையில் பாதுகாப்பாளராக நியமித்தானாம்.24