உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2


கொண்டான். அவன் சேதியா என்னும் பெயருள்ள இயக்கியின் உதவியினால் தன்னுடைய அம்மப்போரில் கொன்றான். கடைசியில் தன்னுடைய மூத்த அம்மானாகிய அபயனையும் வென்று சிங்கள இராச்சியத்தைக் கைப்பற்றினான்.

பாண்டுகாபயன், பழைய தலைநகரான உபதிஸ்ஸ கிராமத்தை விட்டு, அநுராதபுரத்தைத் தலைநகரமாக்கினான். இவன் அநுராதபுரத்தின் காவல்தெய்வங்களாக இயக்கரை அமைத்தான். நகரத்தின் கிழக்குப் பக்கத்தின் காளளேள என்னும் இயக்கரை நியமித்தான். அபயவாவி என்னும் ஏரியின் (இப்போதைய பசவக்குளம்) கரைமேல் சித்தராசன் என்னும் இயக்கத் தெய்வத்தை அமைத்தான். அநுராதபுரத்தின் தெற்குவாயிலில் இயக்கிக்கு ஒரு கோயில் கட்டினான். அரண்மனையை அடுத்து, போரில் தனக்கு உதவிசெய்த சேதியா என்னும் இயக்கிக்குக் கோயில் அமைத்தான். இந்த இயக்கத் தெய்வங்களுக்கும் வேறு இயக்கத் தெய்வங்களுக்கும் இவன் பூசைகளையும் விழாக்களையும் நடத்தினான். நாட்டில் குடிமக்களாக இருந்த இயக்கர்களை மகிழ்விப்பதற்காக இத்தெய்வங்களைக் கொண்டாடினான் என்று தெரிகிறது.

திருவிழாக்காலங்களில் இவன் சித்தராசன் என்னும் இயக்கத்தெய்வத்தின் அருகில் அமர்ந்து விழாவைக் கொண்டாடினான்.32 பாண்டுகாபயன் அநுராதபுரத்தில் முடிசூடி எழுபது ஆண்டு (கி.மு. 377 - 307) அரசாண்டான். சித்தராசன் என்னும் இயக்கத் தெய்வங்களைக் கண்கண்ட தெய்வங்களாகக் கொண்டும், இயக்க பூதங்களை நண்பர்களாகக் கொண்டும் அரசாண்டான்.33

விசயன் இலங்கையில் சிங்களராச்சியத்தை அமைத்தபோது, அவன் இயக்கருடைய இராச்சியத்தை இயக்கியாகிய குவண்ணியின் உதவியினால் கைப்பற்றினான். அதனால், இயக்கர் அவனுக்குப் பகைவராக இருந்தனர். அவர்கள் தங்களையும் தங்கள் அரசனையும் காட்டிக்கொடுத்த குவண்ணியைக் கொன்றுவிட்டார்கள். ஆனால், பாண்டுகாபயன் இயக்கருடைய உதவிகொண்டு தன்னுடைய அம்மான்களை வென்று சிங்கள இராச்சியத்தை அமைத்தான். இவன் இயக்கரைப்போற்றி அவர்களுக்கு உயர்ந்த இடங்கொடுத்து, இயக்கத் தெய்வங்களுக்குக் கோயில்கட்டித் திருவிழாசெய்து வழிபட்டான். இவனுக்குக் குடிமக்களான இயக்கர் ஆதரவு இருந்தது.