482
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2
கிராமங்களைத் தானஞ்செய்ததையும், அந்த ஏழு கிராமங்களின் பெயர்களையும் இச்சாசனம் கூறுகிறது. இவ்வரசர்கள் எழுதியுள்ள 16 பிராமி எழுத்துச் சாசனங்கள் வெவ்வேறு இடங்களில் காணப்படுகின்றன. அந்தச் சாசனங்களின் இறுதியில் இவர்களுடைய மீன் அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. மீன் அடையாளம் அந்த அரசர் பாண்டிய மரபைச் சேர்ந்தவர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றது. இந்தப் பிராமி எழுத்துச் சாசனங்களையும் அதன் வாசகங்களையும் அச்சாசனங்களின் இறுதியில் பொறிக்கப்பட்டுள்ள மீன் உருவங்களையும் பரணவதானே அவர்கள் தொகுத்துப் பதிப்பித்துள்ள இலங்கைச் சாசனங்கள் முதலாம் தொகுதியில் காணலாம்.39
உரோகண நாட்டை அரசாண்ட காமணி அபயன் என்னும் (மீனன், பாண்டிய பரம்பரையரசன்) அரசனுக்குப் பத்து மக்கள் இருந்தனர். அவர்களுக்குத் தசபாதிகர் என்று பெயர் இருந்ததை முன்னமே கூறினோம். (தசபாதிகர் - பத்துச் சகோதரர்). அந்தப் பத்துச் சகோதரர்களில் மூத்தவன் பெயர் தர்மராசன் என்றும், அவனுடைய மகன் பெயர் மகாதிஸ்ஸ ஐயன் என்றும் போவட்டெகல பிராமி எழுத்துச் சாசனம் கூறுகிறது. ‘காமணி அரசனுடைய குமாரர்களான தசபாதிகர்களில் மூத்தவன் பெயர் தர்மராசன். அவனுடைய மகனான மகாதிஸ்ஸன். மகாசுதர்சனம் என்னும் பெயருள்ள இந்த மலைக் குகையைப் பௌத்த சங்கத்துக்குத் தானங்கொடுத்தான்’ என்று இந்தக் குகைச்சாசனங் கூறுகிறது.40 இந்த மலைக்குகையில் உள்ள இன்னொரு சாசனம். 'காமணி அரசனுடைய மகன் உதிராசன், உதிராசனுடைய மகன் அபயன். அபயனுடைய மகள் அநுராதி என்பவள், இந்தக் குகையைப் பிக்குகளுக்குத் தானஞ் செய்தாள்' என்று கூறுகிறது.41 உரோகண நாட்டையாண்ட பாண்டிய மரபைச்சேர்ந்த காமணி அரசனுடைய பரம்பரையைப்பற்றிக் கொட்டதாமூஹெல குகையில் உள்ள பிராமி எழுத்துச் சாசனங்களும் கூறுகின்றன. ‘தர்மராசனின் மகனான மகாதிஸ்ஸ ஐயனுடைய மகளும், அபயராசனுடைய மகனின் மனைவியுமான செவெர, புத்தசங்கத்துக்கு இந்தக் குகையைத் தானங் கொடுத்தாள்’ என்று ஒரு சாசனம் கூறுகிறது.42 'தர்மராசனுடைய மகனான மகாதிஸ்ஸ ஐயனுடைய மகளும், அபய அரசனுடைய மகனான திஸ்ஸனுடைய மனைவியுமான சவர இந்தக் குகையைப்