உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

503




ஆடித் திங்க ளகவையி னாங்கோர்
பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப
மழைவீற் றிருந்து வளம்பல பெருகிப்
பிழையா விளையுள் நாடா யிற்று (சிலப். உரைபெறுகட்டுரை 3)

கஜபாகு வேந்தன் இலங்கையில் பத்தினித்தெய்வ வழிபாட்டை ஏற்படுத்தினான் என்று சிலப்பதிகாரம் கூறுவதை இலங்கை நூல்களான மகாவம்சமும் துபவம்சமும் கூறவில்லை. அந்த நூல்கள் இலங்கை அரசர்கள் பௌத்த மதத்துக்குச் செய்த தொண்டுகளையும் சிறப்புகளையும் கூறுவதையே நோக்கமாகக்கொண்டு பௌத்தமதப் பிக்குகளால் எழுதப்பட்ட நூல்கள். ஆகவே, கஜபாகு பௌத்த மதத்துக்குச் செய்த தொண்டுகளை மட்டும்கூறி, பௌத்தமதமல்லாத இந்துமத சார்பான பத்தினி வணக்கத்தைப் பற்றி ஒன்றும் கூறாமல்விட்டன. அந்த நூல்கள் பொதுவான வரலாற்று நூல்கள் அல்ல; பௌத்தமதச் சிறப்புக் கூறுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்கள். பௌத்தமதச் சார்பான அந்த நூல்கள் புறமதச் சார்பான பத்தினி வழிபாட்டைப்பற்றிக் கூறாமல் விட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

கஜபாகுவுக்குப் பிறகு அவனுடைய மைத்துனனான மஹல்லக நாகன் ஆறு ஆண்டுகள் (கி.பி. 193-199) அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகனான பாதிக திஸ்ஸன் இருபத்து நான்கு ஆண்டுகள் (கி.பி. 199 - 223) அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான கனிட்ட திஸ்ஸன் பதினெட்டு ஆண்டுகள் (கி.பி. 223-241) அரசாண்டான். அவனுக்குப்பிறகு அவனுடைய மகனான குஜ்ஜநாகன் ஓராண்டும், பிறகு அவனுடைய தம்பியான குஞ்சாதன் இரண்டு ஆண்டுகளும் (கி.பி. 241-243) அரசாண்டார்கள்.

ஏறக்குறைய இந்தக் காலத்தில் கடைச் சங்ககாலம் முடிவடைகிறபடியால் இந்த வரலாற்றை இதனோடு நிறுத்துகிறோம்.

சங்ககாலத்து இலங்கையில் தமிழர் வாணிகம்

சங்ககாலத்து இலங்கையில், இலங்கையை அரசாண்ட சிங்கள மன்னர்களைப் பற்றியும் இடையிடையே அரசாண்ட தமிழ் மன்னர் ஆட்சியைப்பற்றியும் மகாவம்சம், தீபவம்சம் என்னும் இலங்கைப் பௌத்த நூல்களின் ஆதாரத்தைக் கொண்டு சுருக்கமாகக் கூறினோம்.