பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
505
காரணமாகவும் தமிழ்ச் சொற்கள் சிங்களமொழியில் கலந்துவிட்டன. இவ்வாறு அரசியல் காரணமாகத் தமிழர் இலங்கையில் குடீயேறினது மட்டுமல்லாமல், வாணிகத்தொடர்பு காரணமாகவும் தமிழ் வாணிகர் இலங்கையில் சென்று தங்கி வாணிகம் செய்தார்கள். அந்த வாணிகக் குழுவினர் அந்தக் காலத்தில் தங்கள் வாணிகப் பொருள்களின் பாதுகாப்புக்காகச் சிறுசேனைகளை வைத்திருந்தார்கள். தமிழ்நாட்டிலேயும் வாணிகச் சாத்துக் குழுவினர் வாணிகப் பொருள்களை வெவ்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் கொண்டுபோனபோது, இடைவழியில் கொள்ளைக்காரர் வந்து கொள்ளையடிப்பதைத் தடுக்கும பொருட்டு, வில்வீரர்களை அழைத்துச் சென்றதை, சங்க இலக்கியத்தில் பார்க்கிறோம். அதுபோலவே, இலங்கைக்குச சென்று வாணிகஞ்செய்த தமிழர் தங்களுடைய பொருள் பாதுகாப்புக்காக வில்வீரர்களை வைத்திருந்தார்கள்.
சேனன், குட்டகன் என்னும் இரண்டு தமிழ் வாணிகர், சூரதிஸ்ஸன் என்னும் சிங்கள அரசனை வென்று அரசாட்சியைக் கைப்பற்றி இருபத்திரண்டு ஆண்டுகள் (கி.மு. 177-155) அரசாண்டார்கள் என்பதைக் கண்டோம். அந்தப் பழங்காலத்திலே தமிழ் வாணிகர் இலங்கையில்தங்கி வாணிகம் செய்தபோது வணிகச் சாத்தை (வணிகச் சங்கத்தை) நிறுவி வாணிகஞ்செய்ததை அக்காலத்துச் சாசன எழுத்துகளிலிருந்து அறிகிறோம். இலங்கையின் பழைய தலைநகரமான அநுராதபுரத்திலே தமிழ் வாணிகரின் வாணிகச் சங்கக்கட்டடம் இருந்ததைச் சமீபகாலத்தில் இலங்கை அரசாங்கத்துத் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை கண்டுபிடித்தது. அந்தப் பழைய வாணிகச் சங்கக் கட்டடம் பிற்காலத்தில் இடிந்து தகர்ந்து மண்மூடி மறைந்து போயிற்று. அந்தக்கட்டடத்தைச் சார்ந்திருந்த கற்பாறைகளில் எழுதப்பட்டுள்ள அக்காலத்துப் பிராமி எழுத்துக்கள் அக்கட்டடம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தது என்பதைத் தெரிவிக்கின்றன. இலங்கையில் இலுபரத என்னும் ஊரில் வாழ்ந்திருந்த ஸமன என்று பெயர் பெற்றிருந்த தமிழ் வாணிகத் தலைவன் அநுராதபுரத்தில் அந்த வாணிகச் சங்கக் கட்டடத்தைக் கட்டினான் என்று அந்த எழுத்துகள் எகூறுகின்றன. ஈடு என்னும் பழைய சிங்கள மொழியில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ள அந்தக் கல்வெட்டெழுத்தின் வாசகம் வருமாறு: