உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/வெள்ளைக் காக்கை

விக்கிமூலம் இலிருந்து

இரையைத் தேடிக் காகம் ஒன்று
சுற்றி வந்தது.
எங்கள் வீட்டுக் கூரை மீது
வந்த மர்ந்தது.

தரையில் கொட்டிக் கிடந்த நல்ல
தானியங்களைத்
தடையில் லாமல் புறாக்கள் கூடி
மேயக் கண்டது.

கள்ளத் தனமாய்ப் புறாக்க ளோடு
சேர்ந்து நாமுமே.
களித்து இரையைத் தின்ன வேண்டும்.
எனநி னைத்தது;


வெள்ளை வர்ணத் தொட்டி ஒன்றை
நாடிச் சென்றது;
மேனி முழுதும் அதில் நனைத்து
வெளியில் வந்தது.

திரும்பி வந்து புறாக்கள் நடுவே
சேர்ந்து கொண்டது.
திருட்டுத் தனமாய்த் தானி யத்தைத்
தின்ன லானது.

கறுப்புக் காகம் வெள்ளை யாக
வந்தி ருப்பதைக்
கண்டு பிடிக்க வில்லை, அந்தப்
புறாக்கள் கூட்டமே.

களிப்பு மிகவும் கொண்ட காகம்
தன்னை மறந்தது;
‘காகா’, ‘காகா’, ‘காகா’ என்றே
கத்த லானது.

எளிதில் உண்மை கண்டு கொண்ட
புறாக்கள் யாவுமே
எதிர்த்து அதனைக் கொத்திக் கொத்தி
விரட்டி அடித்தன.

தப்பிப் பிழைக்க எண்ணிக் காகம்
உடன் பறந்தது.
தனது இனத்துக் காகக் கூட்டம்
தனை அ டைந்தது.


அப்போ தந்தக் காகக் கூட்டம்
என்ன செய்தது?
ஆவ லோடு ‘வருக’, ‘வருக’
என்ற ழைத்ததா?

இல்லை, இல்லை. வெள்ளை பூசி
வந்த காக்கையை
ஏதோ பறவை என்றே அவையும்
எண்ணி விட்டன!

தொல்லை கொடுக்கும் பறவை யென்று
கருதி விட்டதால்,
துரத்தித் துரத்திக் கோப மாக
விரட்டி அடித்தன.

பிறரை ஏய்க்க நினைத்துக் காகம்
வேஷம் போட்டது.
பிறந்த இனத்துப் பறவை கூடத்
துரத்தி அடித்தது.

பறந்து பறந்து இங்கும் அங்கும்
அலைந்து திரிந்தது.
பாவம், பின்னர் அந்தக் காகம்
என்ன ஆனதோ!