உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

69



களப்பிரர் காலத்து இருக்குவேள் அரசர்

பாண்டி நாட்டின் வடக்கு எல்லைக்கும் சோழ நாட்டுத் தெற்கு எல்லைக்கும் இடைநடுவே கொடும்பாளூர் இருந்தது. கொடும்பாளூரைக் கொடும்பை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இப்போதைய புதுக்கோட்டை மாவட்டத்தில் அடங்கியுள்ள கொடும்பாளூர் புதுக்கோட்டை நகரத்துக்கு இருபத்தைந்து கல் தொலையில் இருக்கிறது. சங்க நூல்களில் கொடும்பாளூரைப் பற்றியும் அதனை யரசாண்ட அரசர்களைப் பற்றியும் கூறப்படவில்லை. அக்காலத்தில் கொடும்பாளூர் வட்டாரம் மிழலைக் கூற்றம் என்று பெயர் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டைக் களப்பிரர் அரசாண்ட காலத்தில் கொடும்பாளூர் வட்டாரத்தை இருக்குவேள் அரசர் அரசாண்டனர். இருக்குவேளிர், களப்பிரருக்குக் கீழடங்கி அரசாண்டனர் என்று தெரிகின்றனர். கொடும்பாளூர் மூவர்கோவில் கல்வெட்டு இருக்குவேள் பரம்பரையில் வந்த அரசர்களின் பெயர்களைக் கூறுகிறது. மூவர்கோவில் கல்வெட்டுச் சாசனம் கி.பி.1907 ஆம் ஆண்டில் பழம்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1907-08 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்தச் சாசனத்தைப் பற்றிய செய்தி வெளியிடப்பட்டது (Annual Report on Epigraphy, Madras, 1907-08).

இந்தச் சாசனத்தில் தொடக்கமும் இறுதியும் உடைந்துபோன படியால் இது எழுதப்பட்ட காலத்தையறிய இயலவில்லை. இது சோழக்கிரந்த எழுத்தினால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சாசனத்தை ஆராய்ந்து திரு. நீலகண்ட சாஸ்திரி 1933 ஆம் ஆண்டில் ஒரு கட்டுரை எழுதினார் (Journal of Oriental Research, Madras, 1933, pp. 1-10). பிறகு இதை இவர் தாம் எழுதிய சோழர் என்ற வரலாற்று நூலிலும் எழுதினார் (K. A. Nilakanta Sastri, The Colas, Vol. 1, 1935). மூவர் கோவில் சாசனத்தின் எழுத்து அமைப்பைக் கொண்டு, இது கி.பி. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று சாஸ்திரி கருதினார்.

மூவர் கோவில் கல்வெட்டுச் சாசனத்தை ஆராய்ந்த ஹீராஸ் அடிகள், இச்சாசனத்தில் காணப்படுகிற வரலாற்றுச் செய்திகளைக்-