பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு
201
போர்களில் நெடுமிடல் அஞ்சி தோல்வியும் அடைந்தான். இச் செய்தியைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம்.
நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் பொருமலை யானையோடு புலங்கடை இறுத்து (பதிற்றுப்பத்து நாலாம் பத்து2:10-11)
என்றும்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர் (அகம் 266: 12)
என்றும் கூறுவது காண்க.
பாண்டியனின் துளு நாட்டுப் போர்
துளு நாட்டு நன்ன அரசர் தங்கள் நாட்டுக்கு அருகில் இருந்த வடகொங்கு நாட்டில் ஆதிக்கம் பெற முயன்றார்கள் என்று கூறினோம். அதனால், வடகொங்கு நாட்டைக் கைப்பற்ற முயன்ற பசும்பூண் பாண்டியனுக்குத் துளு நாட்டரசர் பகைவராயினர். பசும்பூண் பாண்டியன் துளுநாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். பாண்டியன் சேனையை, அவனுடைய சேனைத் தலைவனான அதிகமான் நெடுமிடல் அஞ்சி நடத்திச்சென்று துளு நாட்டில் புகுந்தான். அவனை நன்னன் (இராண்டாவன்) உடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் பாழி என்னும் ஊருக்கருகில் எதிர்த்துப் போர் செய்தான். அப்போரில் அதிகமான் நெடுமிடல் அஞ்சி கொல்லப்பட்டு இறந்தான். இதை
கறையடி யானை நன்னன் பாழி ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேம மாகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து ஒள்வான் அமலை ஆடிய ஞாட்பு (அகம் 142:9-14)
என்று அகப்பாட்டுக் கூறுகிறது.
அதிகமான் நெடுமிடல் அஞ்சி துளு நாட்டில் பாழிப் போரில் இறந்த செய்தியைக் கேட்டு அவன்மேல் வெறுப்புக் கொண்டிருந்த கொங்கர் மகிழ்ச்சி கொண்டாடினார்கள் என்று குறுந்தொகைச் செய்யுள் கூறுகிறது.