உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

159


இருந்த நடுகல் நடும் வழக்கத்தையும் தமது நூலில் கூறினார். “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்” எனத் தொடங்கும் சூத்திரத்தின் இறுதியில்,

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மறபிற் கல்லொடு புணர்

(தொல். புறத்திணையியல்)

என்று கூறினார்.

போரில் புறங்கொடாமல் வீரப்போர் செய்து களத்தில் வீழ்ந்த வீரனுக்கு நடுகல் நடும்போது, அதற்குரிய கல்லைத் தேடித் தெரிந்தெடுத்தலும், அக்கல்லைக் கொண்டுவருதலும், அக்கல்லில் இறந்தவன் இறந்த விதத்தையும் எழுதி நீராட்டுதலும், அக்கல்லை நடுதலும், அவ்வீரனுடைய புகழை வாழ்த்திப் போற்றலும் என்னும் நிகழ்ச்சிகள் நடந்தன. (சீர்தகு சிறப்பில் பெரும்படை என்பது, போரில் புறங்கொடாமல் இறந்த வீரன் அரசனாக இருந்தால் அவனுக்கு நடுகல் நட்டு அதன்மேல் பெரும்படையாகக் கோவில் அமைப்பது. இதுபற்றித் தனியே கூறுவோம்.)

தொல்காப்பியருக்குப் பிறகு, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலே இயற்றப்பட்ட சிலப்பதிகாரமும் நடுகல்லைப் பற்றித் தொல்காப்பியர் கூறியதையே கூறுகின்றது. “காட்சி கால்கோல் நீர்ப்படை நடுகல், வாழ்த்து” என்று சிலப்பதிகாரப் பதிகம் (வரி. 84, 85) கூறுகின்றது. அதற்கேற்பவே காட்சிக்காதை, கால்கோட்காதை, நீர்ப்படைகாதை, நடுகற் காதை, வாழ்த்துக் காதை என்று ஐந்து காதைகளையும் கூறுகின்றது. வீரருக்கு நடுகல் அமைத்தது போலவே வீரபத்தினியாகிய கண்ணகிக்கும் வீரக்கல் அமைத்து அவரைப் போற்றியதைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம்.

நடுகல் நடும் வழக்கம் தமிழ் நாட்டில் நெடுங்காலமாக இருந்து வந்தது. அண்மைக்காலம் வரையில், கி.பி. 14ம் நூற்றாண்டு வரையில், அதாவது பிற்காலச் சோழர் ஆட்சியின் இறுதிக்காலம் வரையில் வீரக்கல் அமைக்கும் வழக்கம் இருந்து வந்தது.

திருவள்ளுவர் தமது திருக்குறளிலே நடுகல்லைப் பற்றிக் கூறுகிறார்: