உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

209



அயிரிமலையும் பெரியாறும்

சேரநாட்டின் கிழக்கு எல்லையாக இருந்தது சையமலைத் தொடர் என்று கூறினோம். சையமலைத் தொடரில் உள்ள ஒரு மலைக்கு அயிரிமலை என்பது பெயர். அயிரிமலை மேல் பேரியாறு (பெரியாறு) தோன்றிப் பாய்ந்தது. அந்த இடத்தில், அந்த ஆற்றுக்கு அயிரியாறு என்பது பெயர். அயிரிமலைமேல் அயிரியாறு தோன்றிய இடத்துக்கு அருகில் கொற்றவை கோயில் இருந்தது. அந்த கொற்றவைக்கு அயிரிக் கொற்றவை என்பது பெயர். அயிரிக் கொற்றவை சேர அரசர்களின்..... அகநானூறு 177-ம் பாடலிலும் (அகம். 177. 11), 253-ம் பாடலிலும் (அகம். 253. 20) கூறப்படுகிற அயிரை ஆறு வேறு. அந்த அயிரையாறு எருமை நாட்டில் (மைசூர் நாட்டில்) இருந்தது. பதிற்றுப்பத்தில் கூறப்படுகிற அயிரை ஆறு, சேரநாட்டு அயிரிமலைமேல் தோன்றி சேரநாட்டில் பாய்ந்த பெரியாற்றின் வேறு பெயர்.4

அயிரிமலைமேல் தோன்றி, அம்மலைமேல் அயிரியாறு என்று பெயர் பெற்ற ஆறு, தரையில் இழிந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் விழுந்தது. தரையில் பாய்ந்தபோது அந்த ஆற்றுக்குப் பேரியாறு என்று பெயர். இதைப் பெரியாறு என்றும் வழங்குவர். பெரியாற்றுக்குச் சுள்ளி ஆறு என்னும் பெயர் உண்டு.4 பெரியாறு வரலாற்றுச் சிறப்புடையது. பெரியாறு மலைமேலிருந்து தரையில் இழிந்து சம நிலத்தில் பாய்கிற இடத்தில், சேரன் செங்குட்டுவன் ஆண்டுதோறும் வேனிற்காலத்தில் பாசறை அமைத்து, சுற்றத்தோடு, அங்குத் தங்கியிருந்து வேனிற் காலத்தைக் கழித்தான். இந்தச் செய்தியைச் செங்குட்டுவனைப் பாடிய பரணர் கூறுகிறார்:

பல்பொறிமார்ப! நின்பெயர் வாழியரோ
நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவில்
பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை
மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே5

வேனிற்காலத்தில் பெரியாற்றங்கரையில் செங்குட்டுவன் தங்கியிருந்த காலத்தில், அவனுடைய இளவலான இளங்கோவடிகளும் சீத்தலைச்