உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

217



கோட்டை மதிலுக்கு வெளியேயும் மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் நகரத்துக்குப் புறத்திலே (வெளியிலே) குடியிருந்தபடியால் புறக்குடி மக்கள் என்று கூறப்பட்டனர். அவர்கள் கோட்டை மதில்களுக்கு வெளியே குடியிருந்தபடியால், கோட்டையைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையிடுபவர் போலக் காணப்பட்டார்கள்.

வாங்குவில் தானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரும் உழிஞைவெம் படையும்
போல் புறஞ்சுற்றிய புறக்குடி

41

இதுகாறும் சேரநாட்டுத் தலைநகரமான வஞ்சிமா நகரத்தின் அமைப்பைப் பற்றிக் கூறினோம். இனி, அதனோடு தொடர்புடைய முசிறித் துறைமுகப்பட்டினத்தைப் பற்றிக் காண்போம்.

......வஞ்சிமாநகரத்துக்கு மேற்கே சுள்ளிப்பேரியாறு கடலில் கலந்த இடத்தில், அதன் வடகரைமேல் கடற்கரையையொட்டி முசிறித்துறை முகமும் முசிறிப்பட்டினமும் இருந்தன. அக்காலத்தில் அது பெரிய நகர மாகவும் இருந்தது. அக்காலத்தில், முசிறி உலகப் புகழ் பெற்ற பேர் போன நகரமாக இருந்தது. கிரேக்க யவனர் இந்தப் பட்டினத்தை முசிறிஸ் என்று கூறினார்கள். வடஇந்தியர் இந்தப் பட்டினத்தை மிரிசி பதனம் என்று குறிப்பிட்டனர். முசிறி என்பதைத் தான், அவர்கள் மிரிசி என்று திரித்துக் கூறினார்கள். அந்தக் காலத்தில் சேரநாட்டிலிருந்து மிளகு பெருவாரியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாயிற்று. ஆகவே, சமஸ்கிருத மொழியில் மிளகுக்கு, மிரிசி என்று பெயர் கூறப்பட்டது. முசிறிப் பட்டினமாகிய மிரிசி பட்டினத்திலிருந்து வந்தமையால் வட மொழியாளர் அந்த நகரத்தின் பெயரையே மிளகுக்கு மிரிசி என்று கூறினார்கள்.

சுள்ளிப்பேரியாறு கடலில் கலந்த புகர்முகத்தில் முத்துச் சிப்பிகள் விளைந்தன. அந்த சிப்பிகளிலிருந்து முத்துக்கள் எடுக்கப்பட்டன. இந்தச் சேரநாட்டு முத்தினைக் கௌர்ணெயம் என்று கௌடல்லியரின் அர்த்தசாத்திரம் கூறுவதை முன்னமே குறிப்பிட்டோம். முசிறியை மிரிசி என்று கூறியதுபோலவே வடமொழியாளர் சுள்ளி (பேரியாறு) யாற்றைச் சூர்ணி என்று கூறினார்கள். சூர்ணி ஆற்றில் உண்டான முத்து சௌர்ணெயம் என்று பெயர் பெற்று, பிறகு அந்தச் சொல் கெளர்ணெயம் என்றாயிற்று.