உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை - முதற்பகுதி/நற்றிணை தெளிவுரை

விக்கிமூலம் இலிருந்து

நற்றிணை தெளிவுரை

அமுதச் செந்தமிழ் மொழியினை அன்னையினும் மேலாகப் பேணிக் காக்கவேண்டும் என்னும் ஆர்வம், நம்முன்னோர்க்கு நிரம்ப இருந்தது.

இந்த ஆர்வத்தோடு இதற்கான செவ்விய முயற்சிகளையும் நிறைவாகச் செய்தார்கள் அவர்கள். இந்த வகையில் அமைந்தனவே தமிழறிஞர் அவைகளான சங்கங்களும், அச்சங்கங்களால் ஆய்ந்து தொகுக்கப் பெற்றவான சங்கத்தமிழ்ச் செல்வங்களும் ஆகும்.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்திலிருந்தது கடைச்சங்கம். அத் தமிழ்ச்சான்றோர் அவையில் திட்பமாக ஆராயப்பெற்றுத் தொகுக்கப்பெற்றன பல நூல்கள். அவற்றுள் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் மிகமிகச் சிறந்தனவாகும். அக்காலத்தினும், அதற்கும் முற்பட்ட காலத்தினும் வாழ்ந்த தமிழ் மக்களின் செறிவான வாழ்வியல் நுட்பங்களையும், வரலாற்றுச் செய்திகளையும், அறிவுச் செழுமையினையும், கலையுணர்வையும் அவை விளக்கமாக உரைத்துக்காட்டுகின்றன. 'அந்தப் பெருமித வாழ்வினரின் வழிவந்தோர் நாம்' என்னும் பெருமையை நமக்கும் அவை வழங்குகின்றன.

எட்டுத்தொகையுள் ஒன்றாகத் திகழ்வது இந்நற்றிணையாகும். நூல்களைத் தொகுத்த சான்றோர்கள் சில மரபுகளை வகுத்துக்கொண்டுதான் தொகுத்திருக்கின்றனர். அகப்பொருள் சார்ந்த நெடுந்தொகை, நற்றிணை, குறுந்தொகை என்னும் மூன்று தொகைநூல்களும், செய்யுட்களின் வளமையோடு அடியளவையும் கருத்திற்கொண்டு தொகுக்கப் பெற்றுள்ளன: ஒவ்வொன்றும் நானூறு செய்யுட்களையும் கொண்டுள்ளன.

இவற்றுள், நற்றிணை ஒன்பது அடிச் சிறுமையையும் பன்னிரண்டடிப் பெருமையையும் கொண்ட செய்யுட்களின் தொகுப்பாகும்.

குறிஞ்சிக்கு 132; பாலைக்கு 106; நெய்தலுக்கு 101; மருதத்துக்கு 32; முல்லைக்கு 29 என்ற அளவிலேயே இந்நூலின் செய்யுட்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. இது தொகுப்பாளர்களின் மதிப்பீட்டில் செறிவானவாகத் தோன்றிய செய்யுட்கள் மட்டுமே தொகுக்கப்பெற்றுள்ளன என்பதனையும் காட்டும்.

ஒவ்வொரு தொகை நூலினையும் 'தொகுப்பித்தான்' இவன் என, அத் தொகுப்பிற்குத் தேவையான பொருள் மற்றும் உதவிகளைச் செய்த அரசனின் பெயர் காணப்படும். அவன் துணையோடு தொகுத்துத்தந்த தமிழ்ச்சான்றோரின் பெயரும் காணப்படும். இவ்வகையில், நற்றிணையைத் தொகுப்பித்தவன் பாண்டியன் பன்னாடு தந்தான் மாறன் வழுதி எனக் காண்கின்றோம். 'பன்னாடு தந்தான்' என்னும் சிறப்புப்பெயர் இவனுடைய மறமாண்பைக் காட்டுவது ஆகும். இவன் செய்தனவாகக் காணப்படும் நற்றிணை குறுந்தொகைப் பாடல்கள் (நற்.97, 301; குறு. 270) இவனுடைய தமிழ்ப்புலமைப் பேராற்றலையும் நமக்குக் காட்டுகின்றன.

இந்நூலைத் தொகுப்பித்தார் பெயரைப் பற்றிய குறிப்பேதும் காணப்பெறவில்லை. தொகுப்பின் செவ்வியைக் காணும்போது அவரும் அகப்பொருட் செய்யுட்களை ஆக்குவதில் பெரும்புலமையாளராக இருந்திருக்கவேண்டும் என்றே கருதலாம்.

இந் நற்றிணையின் நயத்தை, நாட்டினர் அறிந்து இன்புறுவதற்கு உதவியவர், பல ஆண்டுகளாக முயன்று உழைத்து அருமையான மொழிப்புரையினையும் வகுத்து வெளியிட்ட பெரும்புலவர், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் அவர்களாவர் (1862—1914). அய்யரவர்கள் திருமறைக்காட்டிலிருந்த மாபெரும் புலவரான திரு. பொன்னம்பலம் பிள்ளையவர்களின் முதன் மாணாக்கருள் ஒருவரும் ஆவர்.

இதன்பின், இவ்வுரையைப் பதவுரையாக்கியும், வேறு பல கருத்து விளக்கங்களைத் தந்தும் அமைந்த பெருமழைப் புலவர் திரு. சோமசுந்தரனாரின் உரைப்பதிப்பு வெளிவந்துள்ளது.

தமிழ் மேதையான சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமிப் பிள்ளையவர்களின் விரிவான ஆராய்ச்சியுரைப் பதிப்பும் வெளிவந்துள்ளது.