உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/தாயின் தவறு

விக்கிமூலம் இலிருந்து

பள்ளி தன்னில் நண்பனின்
பாடப் புத்த கத்தினை
கள்ளத் தனமாய் எடுத்துமே
கறுப்பன் வீடு வந்தனன்.

திருடி வந்த பையனைத்
திருத்தும் நோக்கம் இன்றியே,
பெருமை கொள்ள லாயினள்,
பெற்ற தாயும் மகிழ்வுடன்.

எடுத்து வந்தான் மறுமுறை
இன்னும் ஒருவன் போர்வையை.
தடுத்துத் திருத்தி டாமலே
தாயார் அன்றும் மெச்சினள்.


திரும்பத் திரும்பக் கறுப்பனும்
திருடித் திருடி மெத்தவும்
பெரிய திருடன் ஆயினன்.
பெயரைக் கேட்டே நடுங்கினர்!

கொள்ளைக் காரக் கறுப்பனால்
கொடுமை பெருக லானது.
கள்ளன் அவனைத் தேடியே
காவ லர்கள் பிடித்தனர்.

பிடித்து அவனைத் தூக்கிலே
போட முடிவு செய்தனர்.
துடித்து அன்னை அலறினள்,
துக்கச் செய்தி கேட்டதும்.

தூக்குப் போடும் தினத்திலே
சூழ்ந்து மக்கள் கூடினர்.
ஏக்கம் கொண்ட தாயுமே
இதயம் துடிக்க வந்தனள்.

“அன்னை யோடு பேசவே
ஐந்து நிமிஷம் வேண்டுமே”
என்று கறுப்பன் கெஞ்சவே
இசைந்தார், அங்கே உள்ளவர்.


கறுப்பன் தாயை நெருங்கினன்;
காதைக் கடித்து விட்டனன்!
அறுந்த காதுத் தாயிடம்
அவன் உரைக்க லாயினன்;

“சின்னஞ் சிறிய வயதிலே
திருடி வந்தேன் புத்தகம்.
என்னை அன்று போற்றினாய்.
இடித்துத் திருத்த வில்லைநீ.

கெட்ட எனது செய்கையைக்
கேட்டாய், இந்தக் காதினால்.
தட்டிச் சொல்ல வில்லைநீ.
தவறைத் திருத்த வில்லைநீ.

திருட்டுத் தொழிலை என்னுடன்
சேர்ந்து வளர விட்டதால்,
அருமை மானம் போனதே!
ஐயோ, சாகப் போகிறேன்!”