உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் கதைப் பாடல்கள்/வல்லவனுக்கு வல்லவன்

விக்கிமூலம் இலிருந்து

சிங்க ராஜன் தலைநி மிர்ந்து
செல்லு கின்ற வேளையில்
எங்கி ருந்தோ தேனீ ஒன்று
எதிரில் வந்து சேர்ந்தது.

‘சின்னஞ் சிறிய ஜந்து வேநீ
சிறிதும் அச்சம் இன்றியே
என்றன் எதிரில் வருகி றாயே!’
எனறு சிங்கம் கேட்டது.

‘தீர னென்றும், வீர னென்றும்
செப்பித் திரியும் சிங்கமே,
போரில் என்னை வெல்லு தற்குப்
போதும் சக்தி உள்ளதோ?


கூர்மை யான நகங்க ளோடு
கொடிய பற்கள் இருப்பினும்.
சோர்ந்து கீழே வீழ வைப்பேன்.
சொல்லி விட்டே செய்கிறேன்’

என்று கூறிச் சிங்கம் தன்னை
எதிர்த்து மூக்குக் காதினுள்
சென்று மென்மைப் பகுதி யாவும்
நன்கு கொட்ட லானது.

கொட்டும் வலியைத் தாங் கிடாமல்
கோபம் கொண்ட சிங்கமும்
எட்டுத் திக்கும் கிடுகிடுக்க
இரைச்சல் போட லானது.

தேனீ சிறிதும் அஞ்சி டாமல்
திரும்பத் திரும்பக் கொட்டவே,
மேனி நடுங்கி, மூளை கலங்கி
வீழ்ந்த தந்தச் சிங்கமே!

சிங்க ராஜன் தன்னை வென்ற
செருக்கி னோடு தேனீயும்
அங்கு மிங்கும் மகிழ்ச்சி யோடு
ஆடிப் பாடித் திரிந்தது.


சிறிது நேரம் சென்ற தென்று
செப்பு தற்கு முன்னரே,
அருகில் இருந்த சிலந்தி வலையில்
ஐயோ, சிக்கிக் கொண்டதே!

பிழைத்துச் செல்ல எண்ணித் தேனீ
பின்னும் முன்னும் உடலினை
வளைத்துப் பார்த்துத் துடிது டித்து
வாடி வருந்த லானது.

சிலந்தி, தனது வலையில் வந்து
சிக்கித் தவித்து மெத்தவும்
கலங்கி நிற்கும் தேனீ தன்னைக்
களித்துத் தின்று தீர்த்தது!

வல்ல வர்க்கும் வல்ல வர்கள்
வைய கத்தில் உண்டெனச்
சொல்லு முன்னர் தெரிந்து கொண்டீர்
சுலப மாகக் கதையினால்!