உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சாமிர்தம்

47


செந்நெற் பயிர் அலை மோதும் நாடு - வாழை
     தென்னை கமுகு செழிக்கும் நாடு;
மன்னிய முல்லை மருக்கொழுந்தின் - நல்ல
     வாசம் எழுந்து கமழும் நாடு. 6

காடு மலையெல்லாம் மேய்ந்துவந்து - பசு
     கன்றினை ஊட்டிக் களிக்கும் நாடு ;
ஆடுகள் மந்தையாய் வாழும் நாடு - கண்ணுக்கு
     ஆனந்தக் காட்சி யளிக்கும் நாடு. 7

தேவர் திருக்கோவில் ஓங்கும் நாடு - மேழிச்
     செல்வர் பதிகள் சிறக்கும் நாடு;
மூவர் தமிழும் முழங்கும் நாடு - திரை
     மூத்தினை வீசிக் கொழிக்கும் நாடு. 8

வெற்றி சுதந்திரம் வேண்டும் நாடு - சாதி
     வேற்றுமை என்றும் வெறுக்கும் நாடு;
ஒற்றுமை யாக ஒழுகும் நாடு - தேச
     ஊழியத் தாலே உயரும் நாடு. 9

தென்றல் உலவித் திரியும் நாடு-உடற்
     சீக்கெலாம் ஓட்டித் துரத்தும் நாடு;
என்றும் தழைத்தறம் ஏறும் நாடு - வையத்து
     ஏதும் இணையிலா நாஞ்சில் நாடே 10