உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


40. ஔவை

ஔவைக் கிழவி நம்கிழவி,
     அமுதின் இனிய சொற்கிழவி ;
செவ்வை நெறிகள் பற்பலவும்
     தெரியக் காட்டும் பழங்கிழவி. 1

நெல்லிக் கனியைத் தின்றுலகில்
     நீடு வாழும் தமிழ்க்கிழவி;
வெல்லற் கரிய மாந்தரெல்லாம்
    வியந்து போற்றும் ஒருகிழவி. 2

கூழுக் காகக் கவிபாடும்
    கூனக் கிழவி; அவளுரையை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
    மறவோம் மறவோம் மறவோமே! 3

41. இலக்கிய மும்மணி

வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ்
      மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - என்றும்
      உத்தம ராகி ஒழுகுவமே. 1

பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து - கம்பன்
      பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை
நாவின் இனிக்கப் பருகுவமே - நூலின்
      நன்னயம் முற்றுந் தெளிகுவமே. 2

தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை
      தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்
     ஓதியுணர்ந்தின் புறுவோமே. 3