உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-தொ.பரமசிவன் 7

தங்கள் ஆதிக்கத்தை நிறுவ முயலும் பார்ப்பனியம், பார்ப்பனிய ஆக்டோபஸ் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள முயற்சிக்கும் எவரையும் பல்வகை சூழ்ச்சிகளால் வீழ்த்த எண்ணும் குள்ளநரி அரச தந்திரங்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்தி பல்வேறு கட்டங்களில் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன.
அவ்வாறு பல சமயங்களில் பேரா. தொ.ப அவர்கள் எழுதி, அவர் பெயரிலும், வேறு பெயர்களிலும் வெளிவந்திருந்த பல நூல்களில் - இன்றைய இந்து மதவெறி பா.ஜ.க ஆட்சியில் மக்கள் சிந்தனைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய முகாமையான செய்திகள் கொண்ட சில சிறு நூல்களை திரட்டி ஒரே நூலாக தமிழ்ச் சமூகத்திற்கு கொடுக்க முன்வந்துள்ள 'கலப்பை' பதிப்பகத்துக்கு நாம் நன்றிகளைக் கூறியாக வேண்டும்.
தொ.ப-வை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. பலரது கண்களுக்கு எட்டாத தொலைவில் ஒதுங்கி வாழ்கிற 'பாவப்பட்ட' சிற்றூர்கள் அவர் கண்ணில் மட்டும் 'பளிச்' என்று புலப்படும். ஊர்ப் புறங்களை, நாட்டுப் புறங்களைப் பார்த்திருந்தாலும் அனைவர் பார்வையிலும் படாத மண்ணின் பண்பாட்டு அசைவுகள் அவர் கண்ணுக்கு மட்டும் தெரியும். அவற்றை அலசி ஆய்ந்து அவற்றில் பொதிந்துள்ள சிறப்புகளைத் தோண்டி எடுத்து நம் பார்வைக்கும், சிந்தனைக்கும் வைத்து திகைக்க வைப்பார். இயல்புப் போக்கு சிலரது சூழ்ச்சியால் முறைமாற்றி வைக்கப்பட்டிருக்கும் அநியாயப் போக்குகளை அம்பலப்படுத்துவார்.
முதல் கட்டுரையான 'நான் இந்துவல்ல, நீங்கள்..?' எனும் கட்டுரை 'இந்து; என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்ற கேள்வியோடு தொடங்குகிறது. செத்துப்போன சங்கராச்சாரி தனது நூலில் “வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்று பொதுப் பெயர் வைத்தானோ, இல்லையோ, நாம் பிழைத்தோம்" என்று கூறியுள்ளதை எடுத்துக் காட்டுவது முதலாக, இந்து மதத்தில் உள்ள அனைவரும் ஒன்றா? சமமானவர்களா? என்பது தொடங்கி, சங்கராச்சாரி 'ஸ்மார்த்தர்' என்பதால் கோவிலுக்குள் நுழையவோ, வழிபாடு செய்யவோ உரிமை இல்லை என்பதைச் சொல்லி, மதமாற்றம், இந்து மதத்தில் 'தலித்'துகள் என பலநிலைகளை விரிவாக அலசுகிறார்.
'சூத்திரன்' என்ற சொல்லின் இழிவு பற்றி 1925 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பெரியார் காங்கிரஸ்காரராக இருந்தபோது காரைக்குடியில் நடந்த இராமநாதபுர மாவட்ட காங்கிரஸ் மாநாட்டிலிருந்து தொடர்ந்து பேசிவந்த பதிவுகள் 'குடிஅரசு' போன்ற இதழ்களில் காணப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/8&oldid=1672715" இலிருந்து மீள்விக்கப்பட்டது