44 'இந்து' தேசியம்
எப்பொழுது இந்த மடம் அதிகார மையமாக மாறியது?
காங்கிரசு இயக்கம் வளர்கிற போதே, தேசிய இயக்கத்திற்குள்ளே வருணாசிரம தர்மத்தை உயர்த்திப் பிடிக்கிற போக்கும், அதனை நம்புகிறவர்களும் இருந்தனர். சிலருக்கு அது தேவையானதாக இருந்தது. காந்தி இந்த மடாதிபதியைச் சந்தித்த பின்புதான் தன்னுடைய வருணாசிரம தர்மத்தின் மீதான நம்பிக்கையை அரசியலாக வெளியிடுகிறார். பின்னர் தேசிய இயக்கத் தலைவர்கள். ஆர்.எஸ். எஸ் இயக்கம் இவர்களுக்கெல்லாம் பிறப்பு வழிபட்ட மேன்மை, ‘பிராமணர்கள் ஆக உயர்ந்த சாதி' என்ற பெயர் என்பவை எல்லாம் தேவையாக இருந்தன. அதைச் சொல்லிக் கொண்டிருக்கிற மடம் இது என்பதாலே இந்த மடத்திற்கு வந்து போனார்கள். தேசிய இயக்கத்தின் வளர்ச்சியோடு அதன் துணை விளைவாக இதுவும் வளர்ந்தது.
1928இல் காந்தி இந்த மடத்திற்கு வந்து போகிறார். காந்தியடிகள் இந்த மடத்திற்கு வந்த காரணத்தினாலும் ராஜாஜியினுடைய ஆதரவினாலும்தான், இந்த மடத்திற்கு அரசியல் செல்வாக்கு வளர்ந்தது. அதற்கு முன்பு யாரும் இதனைச் சீண்டிப் பார்த்த்தில்லை. காலனி ஆட்சியின் தொடக்கப் பகுதியில் எந்த மரியாதையும் கிடையாது. எல்லா மடங்களையும் போல சின்ன மடமாக இருந்தது. இதற்கு முன்னால் இருந்த சங்கராச்சாரி நன்றாக சமஸ்கிருதம் படித்தவர். அவர் தன் சாதி மக்களுக்கு மிக மிக உண்மையாக நடந்து கொண்டவர். ஆனால், வருணாசிரமம் வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்னார். பெண்களுடைய சுதந்திரத்தை மட்டுப்படுத்தினார். ஆனால் இவரைப்போல அவர் எதையுமே வெளிப்படையாகப் பேசவில்லை. அவரிடம் இவருடைய கொள்கைதான் இருந்தது. அவருடைய உரைத்தொகுப்புகளைப் படித்துவிட்டு ஒருவர் தெய்வத்தின் குரலா? தில்லுமுல்லா என்றே ஒரு மறுப்பு நூல் எழுதினார். அதாவது வருணாசிரம தர்மம் பார்ப்பன சாதியின் நலன்களுக்காக என்றுதான் இருந்தது. அதையே அவர் சனாதன தருமம் என்ற பெயரிலே சொன்னார். நாம்தான் அதைப்புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம். நாம் புரிந்து கொள்ளத் தவறியது ஏன்? புதிதாகப் படித்து வருகிற மற்ற சாதி மக்களுக்கு எல்லாம் புதிதாக ஒரு கருத்தியலை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் 30 களிலும் 40களிலும் 50களிலும் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், வார, மாத இதழ்கள் தாம் இருந்தன. நாளிதழ்களில் தினமணி, இந்து, சுதேசமித்திரன்தாம் இருந்தன, குடியரசு, திராவிடநாடு போன்ற எதிர்ப்பியக்க எழுத்துக்களைவிட இந்த வகை சுகமான
வாசிப்பிற்கான பத்திரிகைகளிடம் இரண்டு மூன்று தலைமுறைகள் ஏமாந்துவிட்டன. ஐம்பதுகளிலேதான் தினத்தந்தி பெரிதாகி வருகிறது.