ஈசாப் கதைப் பாடல்கள்/தீராத பகை
கூலி வேலை செய்துவரும்
குடியா னவனின் வீட்டருகே
வேலி ஓரம் புற்றினிலே
விஷப்பாம் பொன்று வசித்ததுவே.
குடியா னவனின் அருமைமகன்
கொஞ்சும் மழலை பேசுபவன்
கொடிய பாம்பு கடித்ததனால்
கொல்லப் பட்டான் ஒருநாளில்
‘பழிக்குப் பழிநான் வாங்கிடுவேன்;
பாம்பைக் கொன்று தீர்த்திடுவேன்’
மொழிந்தான் இப்படித் தந்தையுமே.
மூண்டது கோபம் பாம்பதன்மேல்.
மறுநாள் பாம்பு வெளியினிலே
வந்திடும் போது கோடரியை
எறிந்தான்; பாம்பு சாகாமல்
இழந்தது வாலின் நுனிமட்டும்.
நாகம் ஓடிச் சென்றவுடன்
நடுங்கினன் அவனும் பயத்தாலே.
தேகம் முழுதும் வியர்த்திடவே
சிந்தனை செய்தான் தீவிரமாய்.
‘தப்பிச் சென்ற இப்பாம்பு
சமயம் பார்த்துக் கடித்துவிடும்.
எப்படி யும்நாம் இறந்திடுவோம்,
இந்தப் பாம்பால்’ எனஎண்ணி,
பாம்பின் கோபம் தணித்திடவே
பாலை வாங்கி மறுநாளே
பாம்புப் புற்றில் ஊற்றினனே.
பார்த்ததும், பாம்பு உரைத்ததுவே:
‘அருமை வாலை நானிழந்தேன்.
அன்புப் புதல்வனை நீஇழந்தாய்.
இருவர் மனமும் மாறிடுமோ?
இருக்கும் பகைமை தீர்ந்திடுமோ?
உன்னைப் பார்த்தால் என்வால்தான்
உடனே எனக்கு நினைவில்வரும்.
என்னைப் பார்த்தால் நீயும்தான்
இழந்த புதல்வனை எண்ணிடுவாய்.
பாலை ஊற்றி விட்டதனால்
பகைமை தீர்ந்து போய்விடுமோ?
வேலை இல்லா மானிடனே.
வீண்தான் இதுவும் என்றறிவாய்!’