உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/வெண்ணிலா

விக்கிமூலம் இலிருந்து

22. வெண்ணிலா

மீன்கள் கோடி கோடிசூழ, வெண்ணிலாவே! - ஒரு
வெள்ளியோடம் போலவரும் வெண்ணிலாவே ! 1

பானுவெங் கதிர்குளிக்கும் வெண்ணிலாவே! - நித்தம்
பாற்கடலும் ஆடுவையோ? வெண்ணிலாவே! 2

ஆம்பல்களி கூரவரும் வெண்ணிலாவே! - உனக்கு
அம்புயம்செய் தீங்கெதுவோ? வெண்ணிலாவே! 3

இரவையும்நண் பகலாக்கும் வெண்ணிலாவே! - உன்னை
இராகுவும் விழுங்கிடுமோ? வெண்ணிலாவே! 4

வளர்ந்து வளர்ந்துவந்த வெண்ணிலாவே! - மீண்டும்
வாடிவாடிப் போவதேனோ? வெண்ணிலாவே! 5

கூகை ஆந்தை போலநீயும், வெண்ணிலாவே! - பகல்
கூட்டினில் உறங்குவாயோ? வெண்ணிலாவே! 6

பந்தடிப்போம் உன்னையென்று, வெண்ணிலாவே! - நீயும்
யாரில்வர, அஞ்சினையோ? வெண்ணிலாவே! 7


பளிங்குபோலும் உன்னுருவில், வெண்ணிலாவே! - கறை
பற்றியே இருப்பதேனோ? வெண்ணிலாவே! 8


பூமியின் உருநிழலோ? வெண்ணிலாவே! - அது
போகாக் குறுமுயலோ? வெண்ணிலாவே! 9


குன்றும் குகைகளுமோ? வெண்ணிலாவே! - அன்றிக்
கூனக் கிழவிதானோ? வெண்ணிலாவே! 10


ஆழியும் நீ வரக்கண்டு, வெண்ணிலாவே! - குதித்து
ஆடுவதெக் காரணமோ? வெண்ணிலாவே! 11


ஆதாரம் ஒன்றில்லாமல், வெண்ணிலாவே! நீயும்
அந்தரத்தில் நிற்பதேனோ? வெண்ணிலாவே! 12


சுற்றித் திரிவதும் ஏன்? வெண்ணிலாவே! - உனக்குச்
சொந்த இடம் ஒன்றிலையோ? வெண்ணிலாவே! 13


அண்டிவாராய் நீ யெனினும்,வெண்ணிலாவே! - இன்னும்
அகன்றெங்கும் போய்விடாதே, வெண்ணிலாவே! 14


பறக்கச் சிறகிருந்தால், வெண்ணிலாவே! - உன்றன்
பக்கம்வந்து சேருவேனே, வெண்ணிலாவே! 15


பால்போல் நிலவெறிக்கும் வெண்ணிலாவே! - என்றன்
பாங்கில்விளை யாடவாராய்! வெண்ணிலாவே! 16


பாங்கில்விளை யாடவந்தால், வெண்ணிலாவே-நல்ல
யால்தருவேன், பழந்தருவேன், வெண்ணிலாவே! 17

துன்பமிகத் தாமடைந்தும், வெண்ணிலாவே! - பிறர்க்குச்
சுகமளிப்பார் உன்போலுண்டோ? வெண்ணிலாவே! 18


இருளதனை விழுங்கவல்ல வெண்ணிலாவே! -உன்னை
இருள்விழுங்கும் சூழ்ச்சியெதோ? வெண்ணிலாவே! 19