உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/கைத்திறன்

விக்கிமூலம் இலிருந்து

32. கைத்திறன்

வெயில்வரினும் மழைவரினும் விரிகுடையாம் கையே;
      வெயர்வைவரின் ஆற்றுசிறு விசிறியதாம் கையே
துயிலவொரு மகவைத்தொட்டில் இட்டசைக்கும் கையே;
      துரிதமுடன் எழுதவொரு தூவிகொளும் கையே. 1

இனியசெந்நெற் புலம்உழுதற் கேர்பிடிக்கும் கையே;
      இன்னிசைகள் எழுப்பவீணை ஏந்துமெழிற் கையே;
கனியுதிர்ப்பக் கல்லெறியும் கவண்பிடிக்கும் கையே ;
      கண்களிப்பப் படமெழுதிக்காட்டும்என் றன்கையே. 2

தானதர்மம் செய்ய எதும் தளர்விலதாம் கையே;
      தளர்பவரைக் கண்டுதலை தாங்கஎழும் கையே;
பானம்செய்தற் கேற்றவொரு பாத்திரமாம் கையே ;
      பையரவைப் போலவந்து பயமுறுத்தும் கையே. 3

மலரெடுத்து நல்லசெண்டு மாலைகட்டும் கையே ;
      வாய்க்கினிய பண்டமெலாம் வைத்துதவும் கையே ;
சலமதனில் ஓடம் விடச் சலிப்பிலதாம் கையே ;
      தரையில் மோட்டார், ரயில் நடத்தச் சமர்த்துளதாம் கையே. 4

கோபுரம்சேர் கோயிலொடு குடிசை கட்டும் கையே ;
      குளங்கிணறு குட்டையெலாம் குழித்துதவும்கையே
ஆபரணம் பணிமணிகள் ஆய்ந்துசெய்யும் கையே;
      ஆடைகள்பா வாடைகளும் ஆக்குமெழிற் கையே;
5

மல்லயுத்தம் செய்வதற்கு வந்துநிற்கும் கையே;
       வாள்பிடித்து வகைவகையாய் மரம் அறுக்கும் கையே;
நெல்லைக்குத்தும் அரிசிதீட்டும்; நொய்கொழிக்கும் கையே
      நேயரொடு பாண்டியாடி நிதம்ஜெயிக்கும் கையே. 6

நாடியசீர் நாட்டைய ராட்டுருட்டும் கையே;
       நல்லகதர் நெய்யமிகு வல்லமைகொள் கையே;
பாடியவாய் தேனூறும் பாரதியார் பாடல்
       பண்ணமையப் பாடுதற்குப் பாணிகொட்டுங்கையே. 7

அழைப்பதற்கும் அகற்றுதற்கும் அபிநயிக்கும் கையே ;
       ஆக்குதற்கும் அழிப்பதற்கும் ஆற்றல்பெறும் கையே;
உழைப்பதற்கும் ஊட்டுதற்கும் ஊக்கமுறும் கையே;
       உதவுதற்கும் ஏற்பதற்கும் உரிமைகொளும் கையே. 8

மக்களைத்தம் ஒக்கல்வைத்து வளர்த்திடுமென் கையே ;
       வண்ணமலர் தலைக்கணிந்து வாசமூட்டும் கையே ;
தக்கபெரி யோர்க்குமிகத் தான்வணங்கும் கையே;
       தரணியிலுன் திறமையெலாம் சாற்றல் எளிதலவே. 9