உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

சாந்தியின் சிகரம்

என்ன செய்கிறது? ஸ்ரீதரனும் இன்னும் வரக் காணவில்லையே! வேறு எந்த டாக்டரையாவது கூப்பிடச் சொல்லட்டுமா?” என்று அந்தம்மாள் கேட்ட போது, கமலவேணியம்மாளுக்குத் தாங்க மாட்டாத எரிச்சலே வந்தது… இனித் தான் கை,கால்களைக் கூட அசைக்காமல் அப்படியே படுத்திருந்து தூங்கி விட்டது போல் நடித்தால்தான், இந்தம்மாளும் நம்மைச் சும்மா விடுவாள் போலிருக்கிறது… என்று எண்ணியபடியே, “அம்மணீ ! எனக்குத் தூக்கம் அஸாத்யமாய் வருகிறது. என்னைத் தொந்தரை செய்யாதீர்கள். ஸ்ரீதரன் எப்போதுமே நேரங் கழித்துத்தான் வருவான். நீங்கள் ஹாலிலுள்ள மற்றொரு விடுதியில் படுத்துக் கொள்ளுங்கள். எனக்குக் கூட யாராவது இருந்தாலே, தூக்கம் வராது. நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கு எத்தகைய உடம்பும் இல்லை.” என்று அழுத்தமாய்க் கூறி விட்டுப் போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்தாள்.

மேல்கொண்டு ஏதும் பதில் சொல்ல முடியாமல், அந்தம்மாள் வேறு அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். ஆனால் தூக்கம் என்னவோ பிடிக்கவில்லை. அரை மணிக்கொரு தரம் எழுந்து வந்து, கமலவேணியைப் பார்த்துக் கொள்வதில் நாட்டமாயிருந்தாள்.

மணி 11 அடித்தது. ஸ்ரீதரன் லேடீ டாக்டரை இறக்கி விட்டு, நேரே வீட்டிற்கு வந்ததும், தாயாரின் விடுதிக்கு ஆவலே வடிவாய் ஓடி வந்தான். கமலவேணி தூங்குவது போல் படுத்திருந்ததால், சற்று தூர நின்று பார்த்து விட்டு “சரி!… நல்ல தூக்கமே சிறந்த அவுஷதமாகும். பூர்ண ஓய்வும் மிகவும் நல்லதுதான்” என்று எண்ணியபடியே சென்றான்.

தன் மகன் வந்து விட்டான் என்பதையறிந்த கமலவேணியும், பேசாமல் மவுனமே ஸாதித்தாள். அவளுடைய எண்ணம் பூராவும் அக்கடிதத்தின் மீது இருந்ததேயன்ன்றி,