உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

சாந்தியின் சிகரம்

உலகானுபவம் அதிகமாகப் பெற்றுள்ள இவனுக்கு இந்த இடத்தில் இவர் கேட்டது வியப்பாக இருந்தது. என்ன பதில் சொல்வதென்றே தோன்றாமல், சற்று நேரம் திகைத்தான்.

பிறகு சமாளித்துக் கொண்டு, “ஸார்! மிகவும் சந்தோஷத்துடன் வந்தனம் செய்கிறேன். உங்களுக்கு உடம்பு பூர்ணமாய் குணமாகி, பழைய ஸ்திதி உண்டாகட்டும். பிறகு, கல்யாணப் பேச்சைப் பற்றி எடுக்கலாம். அதோடு என்னைப் பற்றி, நீங்கள் சற்றும் எதிர்பார்க்க வேண்டாம். நான் விவாகத்தைப் பற்றி சிந்திப்பது கூட கிடையாது. ப்ரம்மசரியத்தை தைரியமாய், திறமையுடன் அனுஷ்டித்து ஜெயித்து, இன்புறுவதற்கு நான் மிகவும் ஆசைப்படுகிறேன். அதற்கான முறையிலேயே என்னுடைய வாழ்க்கைப் பாதையை அனுஷ்டித்து செப்பனிட்டு வருகிறேன்…”

துரைக்கண்:-என்ன! என்ன! ப்ரம்மசரிய வாழ்க்கையா ?… இதென்ன விஷப் பரிக்ஷை ஸார்! இம்மாதிரி பேசிய வீரர்களை நான் எத்தனையோ பேர்களைப் பார்த்திருக்கிறேன். ஏன் அத்தனை தூரம் போவானேன். நான் கூட காலேஜில் படிக்கும் போது எனக்கு சில வேதாந்த உபாத்யாயர்களும், சில மாணவர்களும் அபார சினேகிதர்களானார்கள். நாங்கள் ப்ரதி தினம் இரவு சமுத்திரக் கரைக்குச் சென்று இந்த விஷயமாகவே வெகு நேரம் ஆராய்ச்சி செய்து பேசுவோம். ப்ரம்மசரியம் அனுஷ்டிப்பது கஷ்டமே இல்லை. மனத்தைப் பரிபக்குவம் செய்து விட்டால், எதையும் சமாளிக்கலாம்; மனிதனால் ஆகாத காரியம் உண்டா! என்றெல்லாம் வீராப்பு நானே பேசி மார் தட்டினேன். அதோடு நில்லாமல், என் சினேகிதர்களையும் கிளறி விட்டு, “நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ப்ரம்மசரிய வ்ருதம் அனுஷ்டிக்கும் முறையை தீவிரமாகப் பழக வேண்டும். அதோடு ஒரு கழகம் வைத்து நடத்த வேண்டும்” என்று பெரிய முஸ்தீப்புகள் போட்டேன்.