உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலாசிரியரின் முன்னுரை

உலகில் பிறந்தோர் கணக்கில் அடங்கார்; இருப்பவர் நானூறு கோடிக்கு மேல். அவர்களில், காலத்தின் பொன்னேடுகளில், ஒளிர்வோர் சிலரே.

அச்சிலரில் ஒருவர், நம்மிடையே பிறந்தார்; நம்மிடையே வாழ்ந்தார்; நமக்காகப் பாடுபட்டார்; நமக்காகத் துன்பப்பட்டார்; நம் நிலை கண்டு பதறினார்; கதறினார். நம் நிலை என்ன? அரசியலில் அடிமை; சமுதாயத்தில் கீழோர்; பொருளியலில் வறியோர். இவற்றை மாற்றி, நம்மை மனிதர்களாக—ஒரு நிலை மனிதர்களாக, தன் உழைப்பில் வாழும், மானம் உடைய மனிதர்களாக—உருவாக்க, அயராது உழைத்தார். தன் வீட்டுச் சோற்றை உண்டு—தன் பணத்தைச் செலவிட்டு—தன் உடலை வாட்டி—தன் உள்ளத்தை வைரமாக்கி —துறவிகளுக்கெல்லாம் துறவியாகப் புரட்சிப் பணியாற்றினார். அத்தகைய புரட்சியாளர் எவரோ?

அவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி ஆவார். அவர் இயல்பாகவே, படிப்படியாகவே முழுப் புரட்சியாளர் ஆனார். அவர் வயதில் பெரியார்; அறிவில் பெரியார்; சிந்தனையில் பெரியார்; செயலில் பெரியார்: சாதனையில் பெரியார்; நாணயத்தில் பெரியார்.

பெரியாரைப் போன்று, தொண்ணூற்று அய்ந்து வயது வாழ்ந்தவர் எங்கோ ஒருவரே. அவ்வயதில், ஊர் ஊராகச் சூறாவளிப் பயணம் செய்து, கருத்து மழை பொழிந்த பெரியாருக்கு ஈடு அவரே.

‘அரசியலில், மக்கள் பெயரில் ஆட்சி நடப்பது மட்டும் போதாது. அது மக்களுக்காகவே நடக்க வேண்டும்’ என்று இடித்துரைத்தவர் பெரியார். மக்கள் விழிப்பாக இராவிட்டால், அவர்கள் பெயரில், படித்தவர்களும், பணக்காரர்களும், தங்களுக்காக ஆட்சி செய்து கொள்ளும் நிலை உருவாகி விடும் என்று நம்மை முதலில் எச்சரித்தவர் பெரியார்.

‘எல்லோரும் ஓர் குலம். ஆகவே அனைவரும் சேர்ந்து சமைக்கட்டும்; இணைந்து பரிமாறட்டும்; ஒரே பந்தியில் இருந்து உண்போம்’ என்னும் சமத்துவக் கொள்கையை பொது மக்களிடையே நடைமுறைப் படுத்திக் காட்டிய வெற்றி வீரர் பெரியார் ஆவார்.