உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பெரியாரும்‌ சமதர்மமும்‌

மறியலைத் தொடர்ந்து நடத்தினார்; சிறைப்பட்டார். ஒரு திங்கள் சிறை வாழ்க்கைக்குப் பின் வெளி வந்தார்.

இதற்கிடையில், ஈ.வே.ராவின் ஆலோசனைப்படி திருமதி நாகம்மையாரும், திருமதி கண்ணம்மாவும், ஈரோட்டிலிருந்து வைக்கம் வந்தடைந்தார்கள்; மறியலை நடத்தினார்கள். போராட்டம் சூடு பிடித்தது.

விடுதலையான ஈ. வெ. ராமசாமி சிறிது இடைவெளிக்குப் பின், மீண்டும் மறியல் செய்தார். இம்முறை ஆறு திங்கள் சிறை வாசம் கிடைத்தது.

வைதீகர்கள் யாகத்திடம் அடைக்கலம் புகுந்தார்கள். ‘சத்துரு சங்கார யாகம்’ நடத்தினார்கள். யாகம் முடிவதற்குள், திருவிதாங்கூர் அரசர் மறைந்தார். மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். காந்தியாரின் தலையீட்டை நாடினார்கள். ஒரு தெருவையாவது ‘ஈழவர் நடக்கக் கூடாத தெருவாக’ வைக்க முயன்றனர்.

ஈ. வெ. ராமசாமி உறுதியாக நின்றார். போராட்டம் வெற்றி பெற்றது.

எல்லா ஊர்களிலும், எல்லாப் பொதுத் தெருக்களிலும், எல்லாச் சாதியாரும் நடக்கலாம் என்று அரசு அறிவித்தது. ஈ.வெ. ரா. வெற்றி வாகை சூடி ‘வைக்கம் வீரராக’ தமிழகம் திரும்பினார்.

ஈ. வெ. ராமசாமி எதை எடுத்துக் கொண்டாலும், அதைப் பற்றியே முழு நேரமும் சிந்திப்பார்; திட்டம் தீட்டுவார்; பேசுவார்; எழுதுவார்.

இந்தியா விடுதலை பெற வேண்டும், ஆம், விரைந்து விடுதலை அடைய வேண்டும். அதற்கு என்ன தேவை? அன்னிய ஆட்சிக்கு எதிர்ப்பு தேவை. வெள்ளம் போன்ற எதிர்ப்பு தேவை. ஒருமித்த எதிர்ப்பு தேவை.

எல்லாச் சாதியினரும், ஏராளமாகக் கூடி எதிர்த்தால், அன்னிய ஆட்சி கால் கொள்ள முடியாது. ஆகவே, பொதுமக்களின் பேராதரவைத் திரட்ட வேண்டும். அதற்குத் தடைக் கற்களாக இருப்பவை எவை? அச்சம், அவநம்பிக்கை.

எது பற்றி அச்சம்? சமுதாயத்தின் பெரும்பாலோரை, மேல் மட்ட மக்கள் தொடர்ந்து அடக்கி ஓடுக்கி வருவார்கள் என்று