சமதர்மத்தை நோக்கியே சுயமரியாதை இயக்கம்
33
கூடிய இளைஞர் மாநாட்டில், இது பற்றி ஓர் முடிவுக்கு வந்தார்கள். பதின்மூன்றாம் எண்ணுடைய அம்முடிவு என்ன சொல்லுகிறது? அது இதோ :
(அ) பள்ளிக்கூடங்களில், மாணவர்களுக்கு மத விஷயங்களைப் போதிக்காதிருக்கும்படியும், மூடப் பழக்க வழக்கங்களைப் போதிக்கும் புத்தகங்களைப் பாடமாக வைக்காதிருக்கும்படியும், பள்ளிக்கூட அதிகாரிகளையும்,
(ஆ) மத விஷயங்களைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு, உதவி செய்யாதிருக்கும்படி அரசாங்கத்தையும் இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.
ஈரோட்டு மாநாட்டின் முடிவில், நன்றியுரையில் ஈ. வெ. ராமசாமி, தன்மான இயக்கத்தின் எதிர்காலப் பணியைத் தெளிவாகவே காட்டி விட்டார். அது முதல், இயக்கக் கொள்கை பரப்புப் பணியில், சமதர்மக் கோட்பாடு இடம் பெற்று வளர்ந்து வந்தது.
இயக்கத் தலைவருடைய—அதன் முன்னணித் தொண்டர்களுடைய கருத்தாக முழங்கின சமதர்மம், இயக்கத்தின் கொள்கையாகவே விரைவில் உருப் பெற்றது. அது எப்போது? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தொன்றில். அவ்வாண்டு விருதுநகரில், மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு நடந்தது. பொது மாநாட்டிற்கு, திரு. ஆர். கே. சண்முகம் தலைமை தாங்கினார்.
பொது மாநாட்டில் நிறைவேறிய முதல் முடிவை இப்போது கவனிப்போம்:
‘மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு, மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால், அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை, மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும், இம்மாநாடு அபிப்பிராயப்படுகிறது.’
—3—