117
சாந்தியின் சிகரம்
யான வழியைக் காட்டிய பகவான், இதற்கு விமோசனத்தையும் காட்டி ரக்ஷிக்காது, கைவிட மாட்டான். என் பாபம் அதையும் தடுத்தால், உலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகளுடன் நானும் இன்பமாய், தூக்குமேடையில் தொங்கலாடி, சாந்தியின் சிகரத்தையடைந்து மகிழ்வேன்! நீ இனி அனாவசியமாய், அழுது கொண்டு நிற்பதில் உபயோகமில்லை; அம்மாவை முதலில் அழைத்துக் கொண்டு போய், கண்ணே போல் காப்பாற்று. இனி இந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்; வக்கீலை வைத்து வாதிக்கவும் வேண்டாம். பகவான் திருவுள்ளம் துணிந்து என்னைக் கைதியாக்கியது போல், சீக்கிரத்தில் தூக்கிலிட்டும், வேடிக்கைப் பார்க்கட்டும்! தம்பீ! அம்மாவை அழைத்துச் சென்று விடு; அன்புடன், ஜாக்ரதையாகப் பார்த்துக் கொள். கஷ்டப்படுவதற்கே ஜென்மமெடுத்துள்ள, நம் தாயின் கடைசி காலத்தில் உயிர் போகும் தருவாயிலாவது, சாந்தியைக் கொடுத்துக் கடவுள் காக்கட்டும். அன்று எந்த ஒரு கடிதத்திற்காக நம் வீட்டில் பல குழப்பங்கள் நேர்ந்ததோ! அதே கடிதத்தை இப்போது பலரறிய, எழுதிக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறியவாறு, தனது சகல சொத்துக்களையும் தம்பியே அடைந்து வாழ வேண்டியது என்று வக்கணையாக வரைந்து, தம்பியின் கையில் கொடுத்தான்.
இது பரியந்தம் வேறு உணர்ச்சியுடன் இருந்த தாமோதரன், கடிதத்தை வாங்கி சுக்கலாகக் கிழித்தெறிந்தான். “அண்ணா! சாந்தியை அடைய பல மார்க்கங்களை, பகவான் காட்டியிருந்தும், நான் அதை அடைய வழி தவறி, அவதிப்பட்டு என்னையும், உன்னையும் சேர்த்து அலட்டிப் பாழாக்கி விட்டேன். எனக்குப் பெண் பார்ப்பதற்காக, நீ இங்கு வந்ததனாலல்லவோ, நமக்கு இத்தகைய பேராபத்து, இந்தச் சண்டாள ஆங்கிலேயப் பாவிகளால் விளைந்தது. நம் குடும்பமே சின்னாபின்னமாய்ச் சிதறிப் பாழாகிய பிறகு, நீயே இக்கதிக்கு வந்த பிறகு,