வை.மு.கோ.103-வது நாவல்
144
நிர்ணயிக்கிறானோ, அது போலாகட்டும். நீங்கள் உடனே கிளம்புங்கள்… தாமோதரா! முடிந்தால், காரிலேயேயனுப்பி விடு… என்ன தயங்குகிறாய்?… எனக்கு பகவான் துணை போதும். உம்!… புறப்படுங்கள். இவ்விருவருடைய கவலையாவது எனக்கு இல்லாமலிருக்கட்டும்…” என்று வெகு அழுத்தமாகக் கூறித் தானே, அவர்களுக்கு வேண்டிய சகலத்தையும் செய்து, காரில் ஏற்றி அனுப்பி விட்டாள்.
இந்தத் தீரச் செயலைக் கண்ட தாமோதரனுக்குக் கூறத் தரமற்ற வியப்பும், மனிதர்களின் போக்கு இப்படியா இருக்கிறது என்ற திகைப்பும் உண்டாகியது. “பெற்றோர்கள் இல்லாதிருப்பினும், சீரும், சிறப்புமாகச் செய்தால், அப்போது பிறந்தகத்தின் பெருமையும், சகோதரர்களின் மகிமையும் தெரியும். ஏதாவதொரு சங்கடம் உண்டாகி விட்டால், இத்தகைய மனோவேறுபாடுகள் உண்டாகி விடுவதா மனித இயல்பு?” என்று தனக்குள் எண்ணியவாறு, மறுபடியும் தாயாரிடம் வந்து பேசத் தெரியாமல், கண்ணீர் பெருக உட்கார்ந்து, “அம்மா!” என்று தழுதழுத்துக் கூப்பிட்டான்.
கமல:- தம்பீ! அண்ணன் வாய் ஓயாமல், ‘சாந்தியின் சிகரத்தை அடைய வேண்டும்; நிர்மல நித்யாநந்தத்தை அடைய வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததற்குக் குழப்பத்தின் மத்தியில் தத்தளிக்கும் விதியே அமைந்து விட்டது! இந்த விதியை, எப்படியாவது மாற்றியமைக்க நாம் பாடுபட வேண்டும். உன் சகோதரி உஷாதேவி வந்திருந்தாள். அவளும், அவள் தாயாரும் துப்பறியும் நாயுடுவினிடம் சென்றிருந்தார்களாம். என்ன ஆச்சரியம்! அதே நாயுடுவினிடம், கொலைக்குக் காரணமாயிருந்த வெள்ளைக்காரர்களுக்கு வேண்டியவர்களாம்—சில வெள்ளைக்காரர்கள்—அவரிடம் வந்து, தமக்குத் துப்புத் துலக்கி, வழக்கில் ஜெயத்தைக் கொடுக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டிருந்தார்களாம்.