சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 8
8
ஸ்ரீதரனுக்கு மட்டும் தூக்கமே பிடிக்கவில்லை. அன்று பூராவும் அதிக அலைச்சல் இருந்தும், அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றியே, அவனுடைய மனத்தில் பெரும் போர் நடக்கத் தொடங்கியது. “பேயாவது? பிசாசாவது? தம்பி மட்டும் பார்த்ததாகச் சொல்லி இருந்தால், அதை நான் நம்ப மாட்டேன்; வேலைக்காரன் வேம்புவும் பார்த்ததாகச் சொல்கிறானே! கருப்புப் போர்வை போர்த்த கள்ளன் யாராக இருக்க முடியும்? ஒரு பொருளும் களவு போகவில்லை. ஆதலால், உளவறிந்த எந்தக் கள்ளனாவது வந்திருக்க வேண்டுமேயன்றி, இது திடீரென்று தோன்றிய கள்ளனாக இருக்க முடியாது. இது வரையில், இத்தகைய அஸம்பாவிதங்கள் எதுவுமே நடக்கவில்லையே! இப்போது மட்டும் இதென்ன விசித்திரம்?… இதை இப்படியே வெறுமை விடக் கூடாது. நம்பிக்கையாய் வீட்டோடு வெகு பழக்கமாயிருப்பதாக நினைக்கும் வேலைக்காரர்களிலேயே யாருக்காவது அல்ப ஆசை உண்டாகி, இம்மாதிரி செய்து, கிடைத்ததைச் சுருட்டிக் கொள்ள நினைத்திருக்கலாமோ? அதற்குள், தப்பி விழித்துக் கொண்டு விட்டதால், குதித்தோடி மறைந்திருக்கலாமோ? என்று எதேதோ எண்ணங்கள் தோன்றுகிறதேயன்றி, பிசாசு, பேய் என்ற நம்பிக்கை உண்டாகவில்லை.
தம்பி தூங்கினானா? தாயார் படுத்தாளா? என்று பார்க்க மறுபடியும் எழுந்து வந்தான். தம்பி சற்று
பக்கம் 52
அயர்ந்து தூங்குவதாகத் தெரிந்ததும், சந்தோஷத்துடன் தாயாரின் விடுதிக்கு வந்தான். கமலவேணி தூங்காமல் ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, சற்று கவனித்துக் கூர்ந்து பார்த்தான். கட்டிலின் சமீபத்திலுள்ள ஜன்னலாகையால், கடிதத்தின் விவரம் புரியவில்லை என்றாலும், தான் அன்று தன் தம்பிக்கு எழுதித் தாயாரிடம் கொடுத்த அதே கடிதந்தான் இது என்பது மட்டும் சடக்கென்று விளங்கி விட்டது.
அவ்வளவுதான்; அவன் கண் முன், சகல விஷயங்களும் படம் போல் சுற்றி நினைப்பூட்டின. அக்கடிதத்தைக் காணாமல், தன் தாயார் தேடியதும், அதே நினைவாகக் கவலைப் பட்டதும், பளிச்சென்று நினைவுக்கு வந்ததும், அக்கடிதத்தைத் திரும்பிப் பெறுவதற்காகத் தன் தாயார்தான், ஒரு வேளை, இப்படி ஏதாவது அசட்டுத் தனமாகச் செய்திருப்பாளா?… அடாடா இப்படிச் செய்திருப்பாளானால், என்ன பயித்தியக்காரத்தனமும், அறிவிலிச் செய்கையுமாகும்? இதையும் உடனே விசாரித்து விட வேண்டும் என்று தீர்மானித்தபடி “அம்மா! உடனே கதவைத் திற! அவசரம்! அவசரம்!” என்று மெல்ல அழைத்தான்.
இக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டலறியவாறு எழுந்த கமலவேணிக்கு, தன்னுடைய இளையகுமாரனுக்குத்தான் ஏதோ வந்து விட்டது என்று சொல்ல வந்திருப்பதாக ஒரு பயங்கரமான எண்ணம் தோன்றியதால், கதிகலங்கிப் போய்க் கடிதத்தை எப்படி மறைப்பது, என்ன செய்வது என்பது கூட மறந்து போய்த் தவித்தவாறு… “ஸ்ரீதரனா! என்னப்பா விஷயம்? தம்பிக்கு ஏதாவது?…” என்று இழுத்தவாறு சடக்கென்று கதவைத் திறந்து விட்டாள்.
ஸ்ரீதரன் ஒரே பாய்ச்சலாக உள்ளே பாய்ந்து, “அம்மா! தம்பிக்கு ஒன்றுமில்லை…” என்று கூறியபடியே, தாயாரின் கையிலிருந்த கடிதத்தைப் பிடுங்கிக் கொண்டு, “அம்மா! இதுதான் விஷயம், வேறு ஒன்றுமில்லை. இக்கடிதத்தைத் தானே காணவில்லை என்று நீ தேடிக் கவலைப் பட்டாய்!…” என்று முடிப்பதற்குள், கமலவேணியின் முகமே சுண்டி பயத்தினால் வெளிறிப் போய், …ஐயோ! ஏமாந்து விட்டோமே.. என்ற திகில் இதயத்தைத் தாக்கியது; அந்த வேதனையுடன் தத்தளிக்கையில், ஸ்ரீதரன் அவளைப் பிடித்து அமர்த்தி உட்கார வைத்துப் பின், “அம்மா! பயப்படாதேம்மா! பதறாதே! விஷயத்தை நான் ஒருவாறு யூகித்து உணர்கிறேன். அது சரிதானேம்மா? இக்கடிதத்திற்காக நீ ஏதோ தவறான வழியில் செய்து விட்டதாக எண்ணுகிறேன்… இதோ இந்தக் கருப்புப் போர்வையின் மறைவில் சென்றது நீயா? அன்றி உன் கையாளாம்மா!…”
இம்மாதிரி ஒரு கேள்வியை இவன் கேட்பான் என்று அவள் கனவு கூடக் காணவில்லை. அவள் அப்படியே அசைவற்று நின்று விட்டாள்… “ஐயோ ! ஸ்ரீதர்…”
ஸ்ரீதர:- அம்மா ! நடுங்காதே! நான் யூகித்தது உண்மைதானே!…
கமல்:- ஐயோ தம்பீ!… ஸ்ரீதர்!…
ஸ்ரீதர:- அம்மா ! மறுபடியும் அதிர்ச்சியினால், காலையில் வந்தது போல் வந்து விடப் போகிறது. இப்படி உட்காரு… அம்மா! இம்மாதிரி ஒரு மூளை கெட்ட காரியம் செய்யலாமா? இந்தக் கடிதத்தை நீ என்னவென்று நினைத்து விட்டாய் ! இதைக் கொண்டு அவன் என்ன செய்து விட முடியும் என்று நீ எண்ணி, அவனுடைய உயிருக்கே ஆபத்தான காரியம் செய்தாயம்மா? பத்திரம் எழுதி ரிஜிஸ்தர் செய்தாலன்றி, இதை வைத்துக் கொண்டு அவன் என்ன பண்ணுவான்?
கமல:- ஐயோ ! ஸ்ரீதர்! குடும்பத்தின் மான அவமானமும், கட்டுக் கோப்பையும் பாதுகாப்பது என் கடமையல்லவா? அவனிடம் இக்கடிதம் இருந்தால், அது உனக்கும், நம் குடும்பத்திற்கும் பேராபத்தாக முடியுமல்லவா? அவனுக்கு ஆழ்ந்த யோசனையுமில்லை. குடும்பத்தின் கண்ணியத்தில் அக்கறையுமில்லை. இதைக் கொண்டு, அவன் சினேகிதர்களுக்குக் காட்டினால், அதனால் எத்தனை தூரம் பாதகமுண்டாகும்? இதைப் பற்றி நன்றாக யோசித்துத்தான் அவனிடம் கெஞ்சி, மன்றாடிக் கேட்டுப் பார்த்தேன். தன்னிடம் இல்லை, இது விவரமே தனக்குத் தெரியாது என்று ஒரே சாதனையாக ஸாதித்து விட்டான். உங்களுக்குள் இந்த பிரிவினை இருப்பதை உன் சகோதரிகளறிந்தால், “எங்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையா?'” என்று உன் மீது மனஸ்தாபப்படுவதோடு, சகல சொத்திற்கும் அவனே அதிகாரியாகி விட்டதால், வீணான மனஸ்தாபம் உண்டாகும். உன் தம்பி ஸ்திர புத்தியில்லாதவன்; அவனை ஏமாற்றி, அவனுடைய சகாக்கள் பணத்தின் மீதுள்ள மோகத்தால், உயிருக்கே உலை வைத்து விடுவார்கள். குடும்பம் ஆடிக் கலகலத்து விடுவதால், பிறர் கண்டு சிரிப்பதற்கல்லவா இடம் உண்டாகி விடும். ஏற்கெனவே உன் பிதாவின் செய்கை, தலை குனியச் செய்தது இன்னும் தீரவில்லை…
ஸ்ரீதர்:- அம்மா! நீ ஏதேதோ கற்பனைகளால், இந்த விஷயத்தை மகா விபரீதமாய் எண்ணிச் செய்து விட்டாய். திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியினால், இதயமே சிலருக்கு நின்று விடுமே. நீ இக்காரியத்தை, அவன் இல்லாத சமயத்தில் செய்திருக்கக் கூடாதா?… அப்படிச் செய்வதற்குச் சாவி இல்லை… பிறர் பார்த்து விடுவார்கள்… என்று சொல்வாய் ! நான் இக்கடிதத்தைப் பற்றி கவலையே படவில்லை. அவசரமான கேஸ் வந்து விட்டதால், நான் போய் விட்டேன். இதற்குள், எத்தனை தடபுடல்கள் உண்டாகி விட்டன… அம்மா! போனது போகட்டும்; நடந்தது நடந்து விட்டது. இதைப் பற்றிப் பேசி ப்ரயோஜனமில்லை. பேயோ! பிசாசோ என்ற பயத்தின் அதிர்ச்சி, தம்பியின் இதயத்தை மிகவும் ஆட்டி, பாதித்திருக்கிறது. நாம் இதை அப்படியே விட்டால், அவனுக்கு இதய பலவீனம் உண்டாகி, ஏதாவது ஆபத்தில் முடிந்தாலும் முடியும். ஆகையால், நான் அவனிடம் விஷயத்தைக் கூறி பயத்தை வேரறுக்கிறேன்.
“ஐயையோ! தம்பீ! இதென்ன யோசனை. பெத்த தாயார் மீது ஏற்கெனவே அவனுக்குச் சரியான மதிப்பு கிடையாது. வீணான த்வேஷமும், உன் மீது கோபமும் இருக்கையில், இந்த விஷயத்தை நீ சொன்னால், அது இன்னும் இதை விட கேவலமாகி விடுமப்பா… என்னிலைமையில் ஒன்றுமே தோன்றவில்லையே…” என்று கண் கலங்கினாள்.
ஸ்ரீதர:- அம்மா! பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லும் பழமொழியை ஸ்திரப்படுத்தி விட்டாயே ! இப்பொழுது வருந்தி என்ன உபயோகம். அவனோ பாரபுத்தியற்ற மூர்க்கன். இந்த பிசாசின் விஷயமான ப்ரசாரத்தை ஊர் பூராவும் செய்து விட்டால், அது மட்டும் நம் குடும்பத்து கண்ணியத்தை, நம் வீட்டின் பெருமையை, குலைத்து விடாதா! இந்த வீட்டில் பிசாசு உலாவுகிறது என்றால், வேலைக்காரர் கூட நிலைக்க மாட்டார்களே! வீட்டுக்கே களங்கமல்லவா வந்து விடும். அதோடு தம்பி இனி இவ்வீட்டிலிருக்க மாட்டேன் என்று வெளிக் கிளம்பி விட்டால், அப்போது என்ன செய்வது… அம்மா! இதோ பாரு. இந்த விஷயத்தை எப்படியாவது ஒழுங்கு படுத்தித் தம்பிக்கும் தெரிவித்து, முதலில் அவனுடைய இதயத்திலுள்ள பயத்தைப் போக்கி, இதயத்தைக் கெட்டியாக்க வேண்டும், அதை நீ தடுத்தால்…
கமல:- ஸ்ரீதர் ! என்னுடைய பொறுமையற்றத் தனத்தினால் நேர்ந்த விபரீதத்திற்கு, எப்படித்தான் மாற்று தேடுவதோ தெரியவில்லையே! இந்த விஷயத்தை நீ எப்படி மாற்றி மறைத்துக் கூற முடியும்?
ஸ்ரீதர:- அம்மா ! உன்னைக் காட்டிக் கொடுக்காமல், நான் எப்படியாவது இதைச் சமாளிக்கிறேன்; ஆனால், இதற்கோர் ப்ரதி உதவியை, நீ கட்டாயம் செய்தே தீர வேண்டும். அதற்கான வாக்குறுதியைக் கொடுத்தாக வேண்டும்.
கமல: ப்ரதி உதவியையா! உனக்குக் கூட உதவியைச் செய்யாமல், யாருக்கப்பா செய்யப் போகிறேன். உன் நன்மையை உத்தேசித்தல்லவா, நான் இத்தகைய அசட்டுக் காரியத்தைச் செய்து விட்டேன்!… கட்டாயம் உனக்கு வேண்டியதைச் செய்கிறேன்…
ஸ்ரீதர:- அம்மா ! கடவுள் மீது ஆணையாகச் சொல்கிறேன். வாக்குக் கொடுத்ததை மாற்றக் கூடாது. தெரிந்ததா! அம்மா! நீ இது காறும் செய்து வரும் பிடிவாதத்தை விட்டு, முதலில் தம்பிக்கு அவன் இஷ்டப்படியே கல்யாணத்தை, நானே நின்று நடத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். அவனுடைய இன்றைய அதிர்ச்சியைத் தீர்க்க, இதொரு சரியான மருந்தாகும்.
கமல:- ஐயையோ! அப்படி, இப்படிப் பேசி என்னை மடக்கி, இந்த விஷயத்திற்குக் கொண்டு வந்து விட்டாயே தம்பீ!…
ஸ்ரீத:- அம்மா! வீணாகப் பேசி, காபுரா அடையாதே! காலம் போகிற போக்கை நீ மறந்து விடுகிறாய்! எத்தனையோ முக்யமான காரியங்களை எல்லாம், கடமையை எல்லாம், மனிதர்கள் கை விட்டு விடுகிறார்கள். நீ என்னமோ இந்த கல்யாணத்தைப் பற்றி ப்ரமாதப்படுத்துகிறாய். கடவுளறிய என் மனத்தில், இந்த நிமிடம் வரையில், இந்தக் கல்யாண இச்சையே உதயமாகவில்லை. என்னைப் பற்றி அவதூறாக, உன்னிடம் யார் யாரோ பொய்ப் புராணங்களைக் கொட்டியளப்பதை நான அறியாமலில்லை. அதைப் பற்றி, நீ சற்றும் நம்பாதே! கடவுள் சித்தப்படி, எனக்கு எப்போது கல்யாணத்தில் மனது செல்கிறதோ, அன்றே நான் உன்னிஷ்டப்படிச் செய்து கொண்டு, உன்னை மகிழ்விக்கிறேன். முதலில் தம்பியின் பிசாசு பயத்தையொழித்து, உடனே கல்யாண உத்ஸாகத்தை மூட்டி, அவனைச் சமாதானம் செய்து, வாழ்க்கையில் இனிப்பை உண்டாக்குவது என் கடமை… அம்மா… என்ன ஏதோ பலமான யோசனை செய்கிறாய்? என் வார்த்தையை நம்பு; இனி அனாவச்யமாய் தம்பியின் விஷயத்தில் தலையிடாதே; எல்லாவற்றையும் கடவுள் நன்றாக த்ருப்தியாக நடத்துவான்; அவன் திருவடியில், பாரத்தைப் போட்டு விடம்மா! சுமக்கிறவன் அவனிருக்கையில், நாமேன் கவலைப்பட வேணும்.
கமல:- தம்பீ ! உன்னைச் சன்யாசியாகக் காண்பதா என் பெருமை?
ஸ்ரீத:- அம்மா! திரும்பத் திரும்ப இதையே சொல்லாதேம்மா!… சன்யாசியானால் என்ன கெட்டு விடுகிறது. நான் இப்படியிருப்பதால்தான், உனக்கும் தெரியாமல், நம்முடைய இன்னொரு குடும்பத்தை நான் காப்பாற்றுகிறேன். தெரியுமா…
கம: (திடுக்கிட்டு)… என்ன! இன்னொரு குடும்பமா! அதென்ன தம்பீ?
ஸ்ரீத:- அதுவா! அதுதான் முதல் சாபக்கேட்டின் அலங்கோலம்; நம்ம அப்பாவின் லீலையின் விளைவால், பாவம், ஒரு பாலிய விதவை… உலகமறியாத பச்சைப் பயிர் போன்ற பெண், பலியாகித் தெருவிலும் நிற்கச் செய்து விட்டாராம். அந்தப் பெண்ணை ஏமாற்றிப் பசப்பிய வார்த்தைகளின் பயனாய், தன்னிலையழிந்து வீட்டையும் விட்டு வெளியேறி, தன் சுற்றத்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் விரோதியாகி, ஜாதி ப்ரஷ்டமே ஆய் விட்டாளாம். அப்பாவையே நம்பி, வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்ட பாவிப் பெண்ணுக்கு, ஒரு பெண்ணும் பிறந்ததாம். அதற்கு நாலைந்து வயதாவதற்குள்ளேயே, அப்பாவின் அத்யாயந்தான் கொலைக் குற்றத்தின் மரண தண்டனையில் பாய்ந்து, ஆயுள் தண்டனையில் முடிந்து விட்டது..,
கமலவேணிக்கு இதைக் கேட்கும் போது, பழைய நினைவுகள் வந்து, கண்ணீரை ஆறாய் உதிர்த்து, கதி கலங்கச் செய்து விட்டதால், தடுமாற்றத்துடன் தவித்தவாறு, “தம்பீ!” என்று மகனைப் பிடித்துக் கொண்டாள்.
ஸ்ரீத:- அம்மா! சாந்தியை அடை; மனத்தைத் தளர விடாதே… எனக்கு மட்டும் கவலை இல்லையா… அந்த நிர்பாக்யப் பிண்டத்துடன், அந்த விதவைப் பெண் தெருவில் நின்று திண்டாடி, படாத பாடுபட்டுப் பிச்சை எடுத்தும், கூலி வேலை செய்தும் வருந்தி, பெண் குழந்தையை எப்படியோ காப்பாற்றிப் படிக்க வைத்து, நர்ஸ் தொழிலில் பழக ஆஸ்பத்ரியில் கொண்டு சேர்த்தாளாம். நான் ஆஸ்பத்ரியில் பல சந்தர்ப்பங்களில், அந்தப் பெண்ணைப் பார்க்க நேர்ந்தது. பிறகு சகல விஷயங்களையும் விசாரித்தறிந்து, அந்தப் பெண்ணை இன்னும் உயர் தரப் படிப்புகளை படிக்கச் செய்து, லேடீ டாக்டருக்கே படிக்க வைத்து வருகிறேன். நான் இன்னாரென்று அவளுக்குத் தெரியாது. அந்தப் பெண்ணின் தாயாரும் சமீபத்தில்தான் இறந்து விட்டாளாம். நான் ஏதோ தயாளத்தினால் உதவி செய்வதாக எண்ணி, அந்தப் பெண்ணின் தாயார் பாராட்டிக் கொண்டிருந்தாள். என் பிதாவின் தூர்த்த நடத்தையாகிய தீயினால் உண்டாகிய ரணத்தை ஆற்றுவதற்காக, நானே உதவி வருகிறேன். இதை எல்லாம் பார்த்த பிறகு, அப்பாவின் பாபச் செயலுக்கு இன்னும் யார் யார் இலக்காகி இருக்கிறார்களோ என்று ஆராய்ந்து, அவர்களுக்கெல்லாம் பண உதவியாவது செய்து, ஆதரிக்கவே நான் விரும்புகிறேன். இத்தகைய உயர்ந்த லக்ஷயத்திற்கெல்லாம் கல்யாணம் பெருத்த வேலி போட்டது போலும், விலங்கு போட்டது போலுமல்லவா முடியும்! இதனால்தான், நான் இப்படி இருக்கிறேன், அப்பா கெட்டலைந்து, கொலை பாதகனாக ஆகியதை நினைக்கும் போதே, எனக்கு உத்தமமான க்ரகஸ்தாச்ரமமே வெறுப்பாகத் தோன்றுகிறது.
கமலவேணி இடைமறித்து, “தம்பி!.. ஸ்ரீதர்! நம் வம்ச பரம்பரையின் கண்ணியத்தைக் குலைத்த உன் பிதாவின் செய்கையில், இப்படி ஒரு பூண்டு வளருகிறதா… இதை எல்லாம் நீ கிளறிக்கொண்டிருந்தால், இதற்கு முடிவு உண்டாகுமா! இதற்காக நீ உன் வாழ்நாளை ஸாரமற்று கழிக்க நான் பார்த்துச் சகிப்பேனா! தம்பீ! நீ யாரையோ ஒரு அழகிய பெண்ணை அன்புடன் நேசிப்பதாயும், அவளை ஆஸ்பத்ரியிலேயே வைத்து போஷிப்பதாயும், வேறு நான் கேள்விப்படுகிறேன். இது உண்மையாயிருந்தால், அந்தப் பெண்ணையே உனக்கு மனப்பூர்வமாய் மணம் முடித்து விடலாம் என்று நான் மனக் கோட்டைக் கட்டிக் கொண்டிருக்கையில், மறுபடியும் என்னை மடக்கி, என் வாயை அடைத்து, உன் சன்யாசி ப்ரபாவத்தையே சொல்கிறாயே! பெத்த தாயின் துடிப்பை நீ பார்க்க வேண்டாமா! ஒரு வேளை, அவள் எந்த ஜாதி பெண்ணோ, அம்மா அதற்கு ஒப்புவாளோ என்று நீ சந்தேகிக்கிறாயா! தம்பீ! இதோ பாரு, சத்யமாய் சொல்கிறேன். அந்தப் பெண் யாராயிருக்கட்டும்…”
இதற்கு மேல், அவனால் பொறுக்க முடியாமல், கடகடவென்று சிரிப்பு வந்து விட்டது. “அம்மா! நிறுத்தம்மா! கதை போல் ஸ்வாரஸ்யமான விஷயத்தை, உன்னிடம் யாரம்மா ஜோடனையாய், அழகாய் சொல்லி இருக்கிறார்கள்! இதோ பாரம்மா! அந்த அல்ப விஷயத்தையும் சொல்லி விடுகிறேன் கேளு.
ஆஸ்பத்திரியில் உள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகளில் ஏழைகளும், அனாதைகளும் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள்.அதில் ஒரு பெண் திக்கற்றவள்; ஒரு பாட்டி கிழம் இருந்தாளாம், அவளும் இறந்து விட்ட அதிர்ச்சியில் அந்தப் பெண் கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டதைச் சகியாது, யாரோ ஐயோ பாவமென்று ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார்கள், ஏன் என்று கேட்பாரற்றுக் கிடந்த அந்த அனாதைக்கு விசித்திரமான வ்யாதி வந்திருந்தது கண்டு, அந்த வ்யாதியின் கூறை அறியவும், எப்படி எப்படி எல்லாம் வைத்யம் செய்யலாம் என்றும், நான் அந்த அனாதையை ஒரு பரீக்ஷார்த்தமாக வெகு அக்கறையுடன்தான் கவனித்து வருகிறேன். அந்த விஷயத்தில் நான் தேர்ச்சியும் பெற்று வருகிறேன். நான் கையாளும் புதிய முறைகளையும், தைரியமான வேலைகளையும் கண்டு, மற்ற டாக்டர்கள் ப்ரமித்து என்னைப் பாராட்டுகிறார்கள்.
கமல:-அப்படிப்பட்ட விசித்ரமான வ்யாதி என்னதப்பா!
ஸ்ரீ தா- மூளையிலேயே கோளாறு உண்டாகியிருந்தது. இந்த அனாதை இருந்தாலும் கேட்பாரில்லை. போனாலும் கேட்பாரில்லை, ஆகையால், மூளையையே எடுத்துச் சரிப்படுத்தும் மேல்நாட்டு முறைப்படி அனுட்டிக்கலாம் என்று ஒரு தைரியம் பிறந்து, செய்து, வெற்றியும் பெற்று வருகிறேன். பிழைக்க மாட்டாள் என்றிருந்த பெண் பிழைத்து விட்டாள். மூளையும் சரியாகி விட்டது. அவளைக் கொண்டு நான் ஒரு பரீக்ஷை பாஸ் செய்ததால், அவளுக்கு என்னுடைய சொந்த செலவில் சகல சவுகரியமும் ஆஸ்பத்ரியில் செய்து வருகிறேன். நன்றாகத் தேர்ச்சி பெறுவதற்கு, இன்னும் சில மாதங்களாகும், அதன் பிறகு, அவளிஷ்டம். இந்த உள் விவரமறியாத எந்த ப்ரகஸ்பதிகள் உன்னிடம் கலகம் செய்தார்களோ! எது வேண்டுமாயினும், செய்யட்டுமே, எனக்கதைப் பற்றிக் கவலை இல்லை. நீயும் வீணான புரளிகளை நம்பாதே.
கமல:- என்ன விசித்திரமான விஷயமப்பா! நான் மனக்கோட்டை கட்டியது வீணானதா!… அப்படியானால்… அந்த பெண்ணை நான் உன்னோடு வந்து பார்க்கட்டுமா…
ஸ்ரீதர:- அம்மா! இதென்ன அசட்டுத்தனம்! தற்சமயம் நம் தலை மீது பாரமாயிருக்கும் தம்பியின் விஷயத்தை கவனியாமல், தானாகக் கனியாத பழத்தைத் தடி கொண்டடித்துக் கனியச் செய்வது போல், அனாவச்யமாய் என் விஷயத்தில் குழம்பாதேம்மா! தம்பியை முதலில் கவனிப்பதுதான் இப்போது கடமை. என்னிதயத்தில் சிற்றின்பத்தின் திவலை கூட படியவில்லை. மாசுமருவற்று, அப்பழுக்கற்ற தூய பரிசுத்த நிலையில், த்யாகப் பிழம்பாயிருக்கிறதை, ஒரு போதும் குட்டிச் சுவரடிக்க விட மாட்டேன். இந்த வீண் ப்ரமை எதற்கு.. அம்மா! நீ கொடுத்த வாக்குதத்தத்தை மறந்து விட்டாயா!…
சரி! சரி! மணி 4 அடிக்கப் போகிறது. தம்பியைச் சரிப்படுத்தும் பொறுப்பு இனி என்னைச் சேர்ந்தது. நீ வீணாகக் கவலைப்படாதே. படுத்துக் கொள்ளு. இக்கடிதத்தை இப்படிக் கொடு…
என்பதற்குள், கமலவேணி ஆத்திரத்துடன் அதைச் சுக்கலாகக் கிழித்தெறிந்து விட்டு, இக்கடிதத்தினாலல்லவா இத்தனை கலவரங்கள் வந்தது! என்று விம்மினாள். அதோடு தாமோதரன் பெட்டியிலிருந்து கொண்டு வந்த மற்ற கடிதங்களையும் ஸ்ரீதரனுக்குக் காட்டி… “தம்பீ! இதைப் பாரு…” என்றாள்.
ஸ்ரீதர:- அம்மா! நீ செய்யும் அசட்டுத் தனத்தினால்தான், அவன் வழி இல்லா வழியில் ப்ரவேசிக்கிறான். அதோடு பெத்த பிதாவின் இழிவான குணத்தின், களங்கம் இவனுடைய ரத்தத்திலும் இருப்பதால், ஆசாபாசத்திற்கு அடிமையாகிறான். இதையறிந்தும், நீ இம்மாதிரி இருப்பது சற்றும் பொருந்தாது. நீ நினைக்கிறபடி, ஒற்றுமையும், குடும்பத்து கண்யமும் ஒருபோதும் நிலைத்து நிற்காது. இனி வீண் வார்த்தைகளுக்கு இடங் கொடுக்காதே. இந்த காதல் கடிதங்களை அவனிடமிருந்து நீ எடுத்ததே தப்பிதம். இந்தப் பெண் யார், என்ன என்பதை விசாரித்து நான் இதையே முடித்து விடுகிறேன். பயப்படாதே என்று வெகு சட்ட திட்டமாகப் பேசித் தாயாரைச் சமாதானப்படுத்திப் பின் கடிதங்களைத் தான் பெற்றுக் கொண்டு சென்றான். கமலவேணியம்மாளுக்கு என்ன செய்வது என்பதே தோன்றாமல், இடிந்துப் போய் கல்லாய்ச் சமைந்து விட்டாள். அவளுடைய வருத்தம் கரை கடந்து சென்றது. நாம் ஒன்று நினைத்துச் செய்தது, கடவுள் ஒன்றாக நினைத்து விட்டாரே! என்ற வியப்பும், கலக்கமுமே குடி கொண்டு வாட்டியது.